தண்ணீர் தேடி அலையும் விலங்குகள்: ஒற்றை யானை 8 மணி நேரம் ஒரே இடத்தில் முகாம்

செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளும் வறண்டு விட்டன. இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடியும், கோடை வெப்பத்தை தாங்க முடியாமலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை தமிழக – கேரள எல்லை பகுதியான செங்கோட்டை புளியரை பகவதிபுரம் ரயில் நிலையம் அருகேயுள்ள கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பம்பு செட் அருகே ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. இதைப் பார்த்த விவசாயிகள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினரும், விவசாயிகளும் சேர்ந்து யானையை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் காட்டு யானை நகராமல் 8 மணி நேரமாக அதே இடத்தில் முகாமிட்டுள்ளது.

இதனால் வேறுவழியின்றி யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து யானை ஏதேனும் நோய்வாய்ப்பட்டு உள்ளதா? என்பது தொடர்பாக நெல்லை மண்டல வனவிலங்கு மருத்துவர் மனோகரன் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து சாப்பிட முடியாத நிலையில் இருந்த யானைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த யானைக்கு உணவு வழங்கப்பட்டது. அதன்பிறகு யானை அங்கிருந்து நகரும் பட்சத்தில் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கவும், யானை மீண்டும் அதே இடத்தில் இருந்தால் வனப்பகுதிக்குள் கொண்டு விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

நாலாம் தேதிக்கு அப்புறம் நம்ம கையில தான் கட்சி என குஜாலாக இருக்கும் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

வியட்நாம் அதிபரானார் டோ லாம்