நாலாம் தேதிக்கு அப்புறம் நம்ம கையில தான் கட்சி என குஜாலாக இருக்கும் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அதிரடி கொடுக்கும் பெண் வாரிசால் இலை கட்சிக்குள் கலக்கமாமே..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் பெண் வாரிசு நடத்தும் போட்டோ ஷூட், அந்த கட்சிக்காரங்களை கலங்கடிக்க வைத்து இருக்கிறதாம். தற்போது மழை பெய்யும் இந்த நேரத்திலும் அவுங்க வீட்டில முடங்காம வயல் வெளிகள், கோயில் நிகழ்ச்சிகள் என செல்வதுடன், அந்த நிகழ்ச்சி போட்டோக்களை ஆள் வைச்சு, சமூக வலைத்தளங்களில் பரப்பிட்டு இருக்காங்களாம். இலை கட்சியில் இவுங்க ஒரு ஆள் தான் இப்போது ஆக்டிவ்வாக இருக்காங்க என்று, கட்சி தலைமையை நம்ப வைக்கும் அளவுக்கு எண்ணிலடங்கா போட்டோக்கள் வந்துட்டு இருக்காம். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், தந்தை ஜெயிச்ச அதே தொகுதியில மீண்டும் ஜெயிச்சு காட்டவே, பெண் வாரிசு இப்படி களமிறங்கி இருக்கிறார் என்று இலை கட்சிக்காரங்க பேசுகிறாங்களாம். இதையெல்லாம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ரசிக்கவில்லையாம். ரொம்ப எல்லை மீற கூடாது. அப்படி மீறினால் அரசியலில் கடைசியில் பெரிய அடி தான் கிடைக்கும் என்று அன்பாக பேசுவது போல் பேசி அட்வைஸ் வேற பண்ண தொடங்கி இருக்காங்களாம். இத பத்தியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்று தடாலடியாக அதிரடிக்கு அந்த பெண் வாரிசு தயாராகி கிட்டு இருக்கிறதா பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெல்டாவில் தேனிக்காரர் அணியில் தொடர்பில் உள்ளவர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவு போட்டிருக்காராமே சேலம்காரர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மக்களவை தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகளில் நெற்களஞ்சியத்தை தவிர மற்ற 5 தொகுதிகளில் இலை கட்சி போட்டியிட்டது. தேர்தலுக்கு பின்னர் இலை கட்சியில் உள்ள மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் சைலண்டாக இருந்து வருகிறார்களாம். தேர்தல் முடிவு வரும் வரையிலும் டெல்டாவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் வாய் திறக்க கூடாது என அவர்களுக்கு தேனிக்காரர் ரகசிய உத்தரவு போட்டுள்ளார். தேர்தல் ரிசல்டை பொறுத்து டெல்டா மாவட்டத்தில் இலை கட்சியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க கூடும். இதனால் கட்சியில் உள்ள மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் செயல்பாடுகள் அவர்களது மனநிலை எப்படி இருந்து வருகிறது என கண்காணிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சரான வைத்தியானவருக்கு தேனிக்காரர் உத்தரவு போட்டுள்ளாராம். இதற்கான திரைமறைவான வேலையில் வைத்தியானவர் ஆதரவாளர்கள் டெல்டா மாவட்டம் முழுவதும் இறங்கியுள்ளனர். இதே போல் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் யாராவது தேனிக்காரர் அணியில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருக்கிறார்களா என்ற விவரங்களை சேகரிக்க தனது ஆதரவாளர்களுக்கு சேலம்காரர் உத்தரவு போட்டுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நாலாம் தேதிக்கு மேல நம்மள பத்திதான் பேசுவாங்க என்று குஜாலா இருக்காங்களாமே சின்னமம்மி ஆதரவாளர்கள்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில் ஒரு காலத்தில் ஒண்ணாக இருந்த சேலத்துக்காரரு, தேனிக்காரரு, குக்கர்காரரு, சின்னமம்மி என்று எல்லோரும் இப்போது ஆளுக்கொரு திசையில் பிரிஞ்சு நிக்குறாங்க. இதில் சின்னத்தை தக்கவச்சுக்கிட்ட சேலத்துக்காரரு, கட்சியோட ஜெனரல் செகரட்டரியாகவும் இப்போ இருக்காரு. அவரு கழற்றிவிட்ட தாமரை கூட்டணியில் தேனிக்காரரும், குக்கர்காரரும் ஐக்கியமாகி இருக்காங்க. ஆனால் மம்மியின் நிழலாகவே வலம் வந்த சின்னமம்மியின் ஆதரவாளர்களைத்தான் கண்டு கொள்ள ஆளில்லையாம். இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம, விலகி நின்னே வேடிக்கை பார்ப்பது என்ற கேள்வி அவர்களுக்குள் பலமாக எழுந்திருக்காம். இதற்கிடையில் இதுபோன்றவர்களை தக்க வைக்க, சின்னமம்மி கடிதம் எழுதும் யுக்தியை கையில் எடுத்தாராம். ஆனால் இதுவும் எதிர்பார்த்த அளவில் போணியாகலையாம். இது ஒருபுறமிருக்க, ஜூன் 4ம் தேதிக்கு மேல் பாருங்க. எல்லாரும் நம்மள பத்திதான் பேசுவாங்க என்று திடீர் உற்சாகத்தில் பொங்குறாங்களாம் சின்னமம்மியின் ஆதரவாளர்கள். எலக்‌ஷன் ரிசல்ட் வந்த பிறகு சேலத்துக்காரரு, தேனிக்காரரு, குக்கர்காரரு என்று யாருடைய உதாரும் எடுபடாது. நம்ம சின்னமம்மிதான் இலைகட்சியில் எல்லாமுமாக இருப்பாங்க என்று ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லி சிலிர்த்துக்கிறாங்களாம். அது சரி… நம்பிக்கை தானே வாழ்க்கை என்று அவுங்களை கலாய்க்கிறாங்களாம் இலை பார்ட்டிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிறைத்துறையில் ஒரு விஷயம் பூகம்பமா வெடிச்சிருக்காமே..’’
‘‘வெயிலூர் மாவட்ட சிறைத்துறையில் பெரிய அதிகாரியின் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.4 லட்சம் பணம் திருட்டு போனதாம். இந்த திருட்டில் யார் ஈடுபட்டிருப்பார்கள் என்று தெரியாமல் அந்த அதிகாரி குழம்பிப்போனாராம். அதோடு இதுபற்றி எப்படி போலீசில் புகார் கொடுப்பது என்பதிலும் அவருக்கு தயக்கமாம். காரணம், அந்த பணம் வேறு வகையில் ஈட்டப்பட்டதாம். ஆனாலும், பணத்தை திருடியவரை பிடிப்பதில் அந்த அதிகாரி தீவிரம் காட்டினாராம். பொதுவாக தவறு செய்து சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களில் நன்னடத்தையை கருத்தில் கொண்டு சிலரை மட்டும் சுதந்திரமாக சில பணிகளை செய்ய வெளியில் விடுவார்களாம். இதில் அதிகாரிகளின் வீடுகளுக்கும் சிலர் ஆர்டர்லியாக அனுப்பி வைக்கப்படுவார்களாம். அதற்கு ஒரு காவலர் பொறுப்பாக செல்வாராம். அப்படி திருட்டு நடந்தபோது பொறுப்பில் இருந்த காவலரை பிடித்து அதிகாரி உலுக்கியதில், அந்த அதிகாரியின் வீட்டில் பணியில் இருந்தவரை பிடித்து தனது பாணியில் விசாரித்ததில், அவரும் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டதுடன், அதை மறைத்து வைத்த இடத்தையும் காட்டி, பணமும் மீட்கப்பட்டதாம். ஆனால் தாக்குதலுக்குள்ளான சிறைவாசியை மருத்துவமனையில் சேர்க்காமல் சிறைக்குள்ளேயே வைத்து வைத்தியம் நடக்கிறதாம். இந்த விஷயம்தான் தற்போது மெல்ல மெல்ல கசிந்து சிறைத்துறையில் பூகம்பமாக வெடித்து வருகிறதாம். அதேநேரத்தில் இந்த விஷயத்தை விஜிலென்சும் மோப்பம் பிடித்து, இப்போ நோட்டம் விட்டு வருகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்