இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி தேவாலயத்தை சுற்றிப்பார்க்க மரப்பாலம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் கடந்த 1964ம் ஆண்டு ஏற்பட்ட கோர புயலின் நினைவுச்சின்னமாக சேதமடைந்த தேவாலயம் உள்ளது. ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடியில் பார்த்துச் செல்லும் முக்கிய இடமாக தேவாலயம் உள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக தற்போது தேவாலயத்தை சுற்றி மரப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் ரூ.40 லட்சம் செலவில் நகராட்சி நிர்வாகம் பணியை மேற்கொண்டுள்ளது.

மரப்பாலம் 6 அடி அகலத்தில் 90 மீட்டர் நீளத்தில் மணல் பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மணலில் சிரமத்துடன் நடந்து செல்லாமல் பாலத்தில் எளிதாக நடந்து சென்று தேவாலயத்தை சுற்றிப் பார்க்கலாம். சிதைந்து வரும் தேவாலயத்துக்கு உள்ளே சுற்றுலாப்பயணிகள் செல்வதும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தனுஷ்கோடி தேவாலய கட்டிடத்தின் ஒருபுற சுவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மழையில் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

உடனே மாவட்ட நிர்வாகம் கட்டிடத்தை பராமரிப்பு செய்வதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த பணிகளும் துவங்கவில்லை. இதனால் கட்டிடம் மழையில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அப்படி இடிந்து விழுந்தால் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்படும் மரப்பாலமும் பயனற்று வீணாகிவிடும். எனவே மாவட்ட நிர்வாகம் சிதைந்து சேதமடைந்து வரும் தேவாலய கட்டிடத்தை பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்

எம்பி கொலைக்கு சதி திட்டம் தீட்டிய அமெரிக்க தொழிலதிபரை கைது செய்ய நடவடிக்கை: கைதான பெண்ணிடம் விசாரணை

கர்நாடகாவில் கைதி லாக் அப் மரணம்? காவல்நிலையம் சூறை 11 போலீசார் படுகாயம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்