எம்பி கொலைக்கு சதி திட்டம் தீட்டிய அமெரிக்க தொழிலதிபரை கைது செய்ய நடவடிக்கை: கைதான பெண்ணிடம் விசாரணை

கொல்கத்தா: வங்கதேச எம்பியை கொலை செய்ய திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் அமெரிக்க தொழிலதிபரை தேடி வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தை சேர்ந்த எம்பி அன்வருல் அசாம் கான் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12ம் தேதி கொல்கத்தா வந்தார். 13ம் தேதி அவரது நண்பரது குடியிருப்புக்கு சென்ற அவர் மாயமானார். இந்நிலையில் எம்பி அன்வருல் கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. அவரை கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பெண் உட்பட 3 பேரை வங்க தேச போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் அளித்த பேட்டியில், “எம்பி கொலை சம்பவத்தில் அமெரிக்காவை சேர்ந்த அக்தருஸ்ஸாமான் ஷாகினை தேடி வருகிறோம். அவர் தான் முக்கிய சந்தேக நபர். அவரை விசாரணைக்கு உட்படுத்த இந்தியா, நேபாளம் மற்றும் அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களின் உதவியை கோரியுள்ளோம். ஷாகீனை திரும்ப கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக இன்டர்போல் உட்பட அனைத்து நிறுவனங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். அந்த பெண்ணை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கொலைக்கான காரணம் என்ன என்பதை விரைவில் வெளிப்படுத்துவோம்” என்றார்.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!