ஒன்றிய பாஜ அரசு மீது காங். தாக்கு பிரிட்டிஷ் ஆட்சியை விட ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

புதுடெல்லி: ‘பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததை விட இன்றைய மோடி ஆட்சியில் ஏழை- கோடீஸ்வரர்கள் இடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது’ என பொருளாதார நிபுணர்கள் அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ‘இந்தியாவில் ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வு, 1922-2023: கோடீஸ்வர ராஜ்ஜியத்தின் எழுச்சி’ என்ற தலைப்பில் தாமஸ் பிகெட்டி உள்ளிட்ட உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு ஆதரவாகவும், தனது கட்சியின் பிரசாரங்களுக்கு நிதி அளிப்பதற்காகவும் பிரதமர் மோடியால் வளர்க்கப்பட்ட ‘நரேந்திர மோடியின் கோடீஸ்வரர்கள் ராஜ்ஜியம்’ இன்று, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததை விட அதிகமான ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் 1 சதவீத பணக்காரர்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் பங்கு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு 2014 முதல் 2023 வரை மிக அதிகமாக இருந்துள்ளது.

இதற்கு மோடி அரசின் பணக்காரர்களை வளமாக்குதல், ஏழைகளை இன்னும் ஏழையாக்குதல், தகவல்களை மறைத்தல் போன்ற கொள்கைகளே காரணம். 2015ல் ஒரு சாமானியன் ரூ.100க்கு பொருள் வாங்கினால் அதில் ரூ.18 லாபம் பெரிய தொழிலதிபர்களுக்கு போனது. அதுவே 2021ல் தொழிலதிபர்கள் ரூ.36 லாபம் பெறுகின்றனர். இந்த விலைவாசி உயர்வு வேலையில்லா நெருக்கடியை ஏற்படுத்தி, சாமானியர்களை முடக்கி உள்ளது. இந்த தரவுகளை எல்லாம் மோடி அரசு மறைத்து வருகிறது. இவ்வாறு கூறி உள்ளார்.

Related posts

பல ஆண்டுகளாக மின்கட்டணம் பாக்கி; இருளில் மூழ்கியது பாம்பன் பாலம்: இரவில் வாகன ஓட்டிகள் அவதி

குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு பணி ஜரூர்

டிரம்ப் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு