பல ஆண்டுகளாக மின்கட்டணம் பாக்கி; இருளில் மூழ்கியது பாம்பன் பாலம்: இரவில் வாகன ஓட்டிகள் அவதி


ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, பாம்பன் பகுதியையும், மண்டபம் பகுதியையும் இணைக்கும் வகையில் கடலில் பிரமாண்டமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் அன்னை இந்திராகாந்தி சாலைப் பாலம் என அழைக்கப்படுகிறது. பாலத்தின் இருபுறமும் நடைமேடை அமைக்கப்பட்டு, அதில் 181 மின்கம்பங்கள் நிறுவப்பட்டு, அவைகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மின்விளக்குகளின் வெளிச்சத்தால் பாம்பன் பாலம் மிளிரும். பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. பாலத்தின் உள்ள மின்இணைப்புகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பெயரில் உள்ளன.

பாலம் பயன்பாட்டுக்கு வந்த காலத்தில் இருந்து மின்விளக்குகளின் மின்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை துறையே செலுத்தி வருகிறது. இந்நிலையில், பாலத்தில் உள்ள மின்இணைப்புகளுக்கு பல ஆண்டுகளாக மின்கட்டணம் பாக்கி வைத்திருப்பதால், மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரத்தில் இருள் சூழ்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பாம்பன் பாலத்தில் மின்விளக்குகள் எரிய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பாம்பன் சாலை பாலத்தில் பயன்படுத்தப்படும் மின்விளக்குகளுக்கு, கடந்த 2016ம் ஆண்டில் இருந்து தற்போது வரை மின்கட்டணம் செலுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு மின்இணைப்பிற்கு ரூ.28,15,437, மற்றொரு மின்இணைப்பிற்கு ரூ.8,38,796 என மொத்தம் ரூ.36 லட்சத்து 54 ஆயிரத்து 233 செலுத்தாமல் உள்ளது. இந்த நிலுவையை செலுத்த அறிவுறுத்தி, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு பலமுறை மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அங்கிருந்து முறையான பதில் வரவில்லை. அரசு மின்இணைப்பு என்பதால் தொடர்ந்து மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related posts

19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மன்னார்குடி அருகே கருத்தநாதபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு