துளசிதாசரின் ராம சரித மானசம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வால்மீகி, ராமரின் சரித்திரத்தை ராமாயணமாக வடமொழியில் இயற்றினார். அவரின் மூலத்தை வைத்து கம்பர், `கம்பராமாயணம்’ எழுதினார். துளசிதாசரோ, இந்தியின் கிளைமொழியான அவதியில் எளிமையான முறையில் அனைவரும் படித்து மகிழக் கூடிய விதத்தில் `ராம சரித மானசம்’ என்னும் நூலை இயற்றினார். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாமேதை ராமன் பால் பக்தி கொண்டு காவியத்தை, பாமரனும் அறிந்து பக்தியில் திளைக்க வைத்த வைணவன். உத்திரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ராஜ்பூர் என்ற சிறிய கிராமம்.

இங்கு 1532-ஆம் ஆண்டு ஓர் அந்தணர் குடும்பத்தில் ஆத்மாராம் தாபே – துளசி பாய் என்ற தம்பதியினருக்கு மகனாக, மூல நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பிறக்கும்போதே வித்தியாசமான வேர் பல்லுடன் பிறந்ததால் தாய்க்கு ஆகாது என்று ஐதீக சாஸ்திரம் சொல்லப்பட்டது. அதற்காக குழந்தை,
8 ஆண்டுகள் வேறு இடத்தில் வளர வேண்டும் என்று ஜோதிடர் கூறினார். ஜோதிடர் கூறியதில் அன்னை துளசிபாய்க்கு உடன்பாடு இல்லை. தன் மகனை விட்டு பிரிய மனம் விரும்பவில்லை.

விமர்சையாக நாமகரணம் (குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா) செய்யும் வசதி இல்லாத ஏழ்மையான அந்தணன் ஆத்மாராம் தாபே. ஆகவே, நடப்பதுயாவும் விதியின் செயல் என நினைத்து குழந்தைக்கு `ராம் போலோ’ என்ற அழகிய நாமத்தை சூட்டினார். சில மாதங்களில் துளசிபாய் காலமானாள். விதியின் கொடுமையோ? ஜோதிடத்தில் வலிமையோ? அன்னை துளசி பாய் இறந்ததால், ராம் போலோவை கவனிக்க செவிலித்தாய் வைத்தார்.

அவள், குழந்தையை கவனித்து பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தாள். ராம் போலோவிற்கு ஐந்து வயது ஆவதற்குள் செவிலித்தாயும் மரித்தாள். தந்தையும் மறைந்தார். சிறியவனான ராம்போலோ, உணவுக்காகவும் உறவிற்காகவும் நடுத்தெருவில் திரிந்தான். அவ்வேளையில், ராம்போலோவை அரவணைத்து போக்ஷித்தது அவ்வூர் அனுமார் கோயில் மடப்பள்ளி உணவே ஆகும். இங்கு இறைவனின் காருண்யா கடாட்சம் முதலானது. ராமானுஜரின் ஐந்தாவது தலைமுறையான, ராமானந்தரின் வழியில் வந்த நரஹரி என்ற மகான் கனவில் ஓர் அசரீரி தோன்றியது.

`நரஹரி! நீ ஓர் அழகிய பச்சை மண்ணை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இராம்பூரில் அனுமான் சந்நதியில் ஓர் குழந்தை பராமரிப்பதற்கு யாரும் இன்றி கிடக்கின்றான். அச்சிறுவனைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்து வைணவ தர்மத்தையும், ஹரிகதைகள் கூறி வளர்த்து வருவது உன் கடமை’’ எனக் கூறி அசரீரி ஆணையிட்டு மறைந்தது.

நரஹரி, அடுத்த நாளே இராம்பூரில் உள்ள அனுமார் சந்நதியைத் தேடிக் கண்டுபிடித்தார். ராம்போலோவை அயோத்திக்கு அழைத்து திரும்பினார். ராம்போலோவிற்கு நல்ல காலம் பிறக்க தொடங்கியது. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு பெய்யெனப் பெய்யும் மழை போல இறைவனின் கடைக் கண் பார்வை பட்டுவிட்டால் போதும், வாழ்வில் ஒரு மாற்றம் கடுகும் மலையாக உயர்ந்துவிடும்.

அவ்வாறே, ராம்போலோ ராமர் பிறந்த ஜென்ம பூமியில் அடி எடுத்து வைத்ததும், மெய் சிலிர்த்துப் போனார். நரஹரி, அயோத்தியில் ராமர் சந்நிதானத்தின் முன்பாக உபநயம் செய்தார். அப்பொழுது ராம் போலோவிற்கு ஒரு அதிசயம் நடைபெற்றது. தன்னை வாழ்வித்த குருவை பணிந்து குனிந்து வணங்கி ஆசிபெற்ற பொழுது, அக்கணம் அருகே இருந்த துளசிச் செடியிலிருந்து ஒரு தளம், ராம்போலோவின் தலையில் விழுந்து ஆசீர்வதித்தது. இதைக்கண்ட நரஹரி மனம் குளிர்ந்தார்.

`மகனே! ராம் போலோ இறைவன் ராமனின் அருள் உனக்கு பூரணமாக இருக்கிறது. அதனால்தான் துளசி இலையே வாழ்த்தியது. எனவே, துளசியின் அருள் பெற்றதால் இன்று முதல் நீ “துளசிதாசன்’’ என்ற திருப்பெயரால் அழைக்கப்படுவாய். உலகம் போற்றும் துளசிதாசனாகப் போற்றப்படுவாய். என
வாழ்த்தினார். நாமகரணமும் செய்துவைத்தார்.

ராமனின் கதைகளைக் கேட்டே வளர்ந்தார். கதைகளை நன்றாக பிரசங்கம் செய்வதற்கும் இயல்பாகவே கற்றுக்கொண்டார். மனதில் ராமனின் நாமம் நன்கு மெருகேறியது. மாணிக்கமாக ஒளிவீசினார். அணிகலன்கள், பெட்டியில் பூட்டி இருப்பதைவிட, ஆபரணமாக அணிந்து உலா வந்தால் அதன் மதிப்பும் அழகும் பன்மடங்கு உயர்ந்து நிற்கும். அவ்வாறே, துளசி தாசரும் யார் கற்பித்தாலும் அதை கற்பூரமாக பற்றிக்கொண்டார்.

ஒரு சமயம் நரஹரி, துளசிதாசரை அழைத்துக் கொண்டு ஓர் அபூர்வமான இடத்திற்கு சென்றார். சரயு மற்றும் காக்ரா நதிகளின் சங்கமமான இடத்தில் சுகர் எனும் சத்திரம் உள்ளது. அங்கே இரவு தங்கினார். அன்றைய இரவு துளசிதாசர், ராமனின் பெருமைகளைத் தன் மழலை மொழியில் பேசிக்கொண்டு இருந்தார். அதே சத்திரத்தில் சேஷநாதர் என்னும் முனிவர் தங்கி இருந்தார். அவர் காதுகளில் துளசிதாசரின் மழலைமொழியில் சொல்லும் ராமகீர்த்தனையைக் கேட்டார். மெய் மறந்தார். இதயத்தில் ஆயிரம் தாமரை மலர்களைக் கொட்டியது போன்ற உணர்வினை அடைந்தார்.

துளசிதாசரிடம், `மகனே! நீ என்னுடன் காசிக்கு வருகிறாயா?’ என அழைத்தார். அவர் முகத்தில் பரவிக் கிடந்த தெய்வீக ஆற்றல் நெஞ்சில் நிலைத்துநின்றது. தான், போகலாமா? வேண்டாமா? என்று நரஹரியின் முகத்தை நோக்கினார். அவரும், துளசிதாசர் வாழ்க்கை நன்றாக மலரும் என நினைத்து நீ செல்லலாம் என்று அனுமதி வழங்கினார்.

எனவே மறுநாள் துளசிதாசர் சேஷநாதருடன் கிளம்பினார். காசியில், `சேஷநாதர்’ என்னும் ஒரு குருகுலம் வைத்து மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். அதில் துளசிதாசரையும் இணைத்துக் கொண்டார். துளசிதாசர் அந்த குருகுலத்தில் தங்கி சமஸ்கிருதம், வேதாந்தம், வாழ்க்கைப் பாடம் ஆகியவை கற்றார். 5 ஆண்டுகள் அங்கே இருந்து அனைத்துக் கல்வியும் கற்றுத் தேர்ந்தார். சிறந்த ஒரு பண்டிதனாக விளங்கினார். வாலிபப் பருவத்தை அடைந்ததும். தான் பிறந்த ஊரான ராஜ்பூருக்குத் திரும்பினார்.

மன்மதனின் அம்புக் கணையால் வாழ்வியல் தத்துவத்தை படிக்க வேண்டிய வழி ஏற்பட்டது திருமண வயதை அடைந்ததால் அழகும், கல்வியும், பொறுமையும், பொருந்தி இருந்த துளசிதாசரைக் கண்ட பிரபல ஜோதிடர் தீனபந்து பாடகர் இவரைத் தன்னுடைய மருமகனாக ஆக்கிக்கொள்ள விரும்பினார். ஆகவே, தன் மகள் ரத்னாவளியை மணந்து கொள்ளக் கேட்டார்.

பெண்ணும் அழகாக இருந்ததால் துளசிதாசர் மணந்துகொண்டார். ரத்னாவளி என்பவள் சாதாரண பெண் இல்லை. அவள், கல்வியில் சரஸ்வதி, அழகில் அப்சரஸ், பொறுமையில் பூமாதேவி, அறிவில் பிரகஸ்பதி. இத்தகையவளுடன் கூடி வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ்ந்தார். இவ்வாறு வாழ்ந்துவந்த சமயத்தில் மனைவி கருவுற்றாள்.

ஓர் ஆண்குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு தாருகன் என பெயர் சூட்டி வளர்த்தனர். ஆனால், விதியின் வசத்தால் குழந்தை மாண்டது. இருவரும் அதிர்ச்சிக்குள் ஆயினர். இருந்தாலும், மனைவியின்மீது கொண்ட அன்பினால் அந்த துன்பத்திலிருந்து துளசிதாசர் மீண்டு வெளியே வந்துவிட்டார். அதன் பிறகு ராமனுடைய பிரசங்கம் செய்வதிலும் கதைகளைச் சொல்வதிலும் தன்னுடைய பொழுதைப் போக்கிக்கொண்டார். ஆனாலும், மனைவியின்மீது கொண்ட மோகம் மட்டும் இம்மியளவும் குறையவில்லை…

தொகுப்பு: பொன்முகரியன்

Related posts

கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?

கூனிகளையும் சகுனிகளையும் அலட்சியப்படுத்திவிடாதீர்கள்!

ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!