தமிழ் மண்ணின் பெருமை பேசும் மண்பாண்டங்கள்!

மண்பாண்டங்கள் நம் பாரம்பரியத்தின் வேர்களைச் சொல்பவை. சிந்து சமவெளி முதல் கீழடி வரை நம் தமிழ் நாகரிகத்தின் தொன்மையைப் பேசும் வரலாற்று சாட்சியாய் வந்து நிற்பவை மண்பாண்டங்கள்தான். இன்றும் தமிழகம் முழுதும் மண் பாண்டங்கள் தயாரிக்கும் கிராமங்கள் நிறையவுள்ளன. குறிப்பாக, குமரி மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களிலும் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான தேன்பொத்தை, கட்டளை குடியிருப்பு, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மண்பாண்ட தொழிலே பிரதானம்.இங்கு கிடைக்கும் மண்ணினால் தயாரிக்கப்படும் அடுப்புவகைகள், மண் பானைகள் போன்றவை உள்ளூர் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகளில் உள்ள குளங்களில் தரமான கரம்பை மண் கிடைப்பதால் இந்த மண்ணில் தயாராகும் மண் பானைகள் முதல் தரமானதாக உள்ளன. இதில் சமைக்கும் உணவும் சரியான பதத்தில் வெந்து சுவை கூடுகிறது. தண்ணீர் பாட்டில், பிரியாணி சட்டி என இங்கு பலவகையான சமையல் பொருட்கள் மற்றும் பயன்படு பொருட்கள் மண்ணில் நேர்த்தியாகச் செய்யப்படுகின்றன. இவற்றிற்கு உள்ளூரில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் மவுசு அதிகரித்துள்ளது.சவுதி அரேபியா, துபாய் உட்பட பனிரெண்டு வளைகுடா நாடுகளுக்கு இவை ஏற்றுமதியாகின்றன. மண் பானைகளை வாங்குவதற்கான எளிய வழிமுறைகள் என்ன’ என்பது குறித்து அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பெண்களிடம் கேட்டதற்கு, “பானைகளை வாங்கும்போது அதன் சுற்றுப் பகுதிகளில் மூன்று, நான்கு இடங்களில் விரல்களால் சுண்டிப் பார்க்கணும். தரமான மண்பானையாக இருந்தால் சுண்டும்போது எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான சத்தம் கிடைக்கும். பானையில் லேசான கீறல் இருந்தால் சத்தத்தில் மாற்றம் இருக்கும். அதை வைத்தே கண்டுபிடிக்கலாம்” என்றார்கள்.

-ஜெய

Related posts

இலங்கைக்கு ₹4 கோடி மதிப்பு மாத்திரைகள் கடத்தியவர் கைது

எஸ்.ஐ.க்கு ‘பளார்’ விட்ட பாஜ கவுன்சிலர் கைது

கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது