கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?

?கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
– பி.கனகராஜ், மதுரை.

இயற்கையாக பிறந்ததில் இருந்தே சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுந்தால், அது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. வயது முதிர்வின் காரணமாகவோ அல்லது பல் ஏதேனும் விழுந்து அதனால் கன்னத்தில் குழி விழுந்தால், அது பலவீனத்தின் அடையாளமே அன்றி அதிர்ஷ்டம் அல்ல. இயற்கையாக கன்னத்தில் குழி விழுபவரைக் காணும்போது நம்மையும் அறியாமல் நம் மனதிற்குள் ஒருவிதமான மகிழ்ச்சி உணர்வு ஏற்படுவதே இதற்கான ஆதாரம்.

?குறிப்பிட்ட சில நட்சத்திரங்களுக்கு பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்கிறார்களே, இது உண்மையா?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.

மிருகசீரிஷம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய இந்த நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்று ஒரு விதி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஜோதிடவியல் ரீதியான ஒரு உண்மை என்னவென்றால், எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்பதே. நட்சத்திரப் பொருத்தம் என்பதைவிட ஜாதகப் பொருத்தம் என்பது அமைந்திருக்க வேண்டும். அதையும்கூட நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவருக்கு வாழ்க்கைத்துணை என்பது எப்படி அமைய வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்படித்தானே அமையப்போகிறது. இதில் நாம் பொருத்தம் பார்த்து திருமணத்தை நடத்துவதால் விதி மாறிவிடுமா என்ன? வாழ்க்கைத்துணை என்பது எப்படி அமைகிறதோ, அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்தவேண்டும். அப்படித்தானே நமது தாத்தாவும் பாட்டியும் அதற்கு முன்னர் இருந்த தலைமுறைகளும் குடும்பத்தை நடத்தினார்கள். அவர்கள் எல்லோரும் பொருத்தம் பார்த்தா திருமணம் செய்தார்கள்? மனப் பொருத்தம் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து, பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பிடித்திருக்கிறதா என்பதை அறிந்துகொண்டு திருமணத்தை நடத்துங்கள். அவர்களுடைய ஜாதகங்களில் உள்ள கிரக நிலைகள் பொருந்தியிருந்தால் மட்டுமே அவர்களுக்குள் மனப் பொருத்தம் என்பது வந்து சேரும். இந்த உண்மையை புரிந்துகொண்டு, நட்சத்திரங்களை கணக்கில் கொள்ளாமல் திருமணத்தை நடத்துங்கள். வாழ்க்கை நல்லபடியாகவே அமையும்.

?நுழைவு வாயிலில் விநாயகர் சிலை வைக்கலாமா?
– துரை செந்தில், புதுக்கோட்டை.

வைக்கலாம். நுழைவு வாயிலில் விநாயகர் சிலை வைப்பதோடு நின்றுவிடாமல், அதற்கு தினசரி பூஜைகளை தவறாமல் சரிவர செய்து வரவேண்டும். அப்பொழுதுதான், அதற்குரிய பலன் என்பது வந்து சேரும். நுழைவு வாயிலில் விநாயகர் சிலை வைப்பதால், திருஷ்டி தோஷம் உட்பட எதிர்மறை சக்திகளிடம் இருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்.

?ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு ஒரே ராசி இருந்தால் ஆகாதா?
– த.நேரு, வெண்கரும்பூர்.

அப்படியெல்லாம் எந்த விதியும் கிடையாது. ஒரே ராசியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் ஏழரைச்சனி, அஷ்டமத்து, குரு போன்ற பிரச்னைகள் தோன்றும் என்ற கருத்தினை மையப்படுத்தி இதுபோன்ற புரிதல்கள் உண்டாகின்றன. ஏழரைச்சனி நடக்கும் காலத்தில், எல்லோருக்கும் பிரச்னை என்பது தோன்றுவதில்லை. ஏழரைச்சனியின் காலத்தில்தான் நான் வாழ்வினில் உயர்வு பெற்றேன் என்று சொல்வோரும் உண்டு. அவரவர் ஜாதகத்தில் நடக்கும் தசாபுக்திகளும், அந்த கிரஹங்களின் அமைவிடமும்தான் பலனைத் தீர்மானிக்குமே தவிர, ஒரே ராசியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் ஒருபோதும் நடக்காது. இரட்டைக் குழந்தைகளின் ஜாதகங்களிலேயே பலன்கள் மாறுபடுவதைக் காண்கிறோம். உண்மை நிலை இப்படி இருக்க, ஒரே ராசியைச் சேர்ந்த மூவர், ஒரே வீட்டில் இருப்பதை தோஷமாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை.

?வாஸ்து உதவியால் அரசியலில் வெற்றி பெற முடியுமா?
– சி.முத்துராமன், மதுரை.

அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கு ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் முதலான கிரஹங்கள் பலம் பெற்றிருக்க வேண்டும். வாஸ்து என்பது நாம் வசிக்கும் இடம் பற்றிய இலக்கணம் என்று புரிந்துகொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும், நாம் வசிக்கும் இடம் என்பது நன்றாக இருந்தால்தான், உடல் ஆரோகியமாக இருக்கும். உடல் ஆரோகியமாக இருந்தால், மூளை நல்லபடியாக செயல்படும். மூளையின் திறமையான செயல்பாட்டால் நாம் வெற்றி காண்கிறோம். வாஸ்துவின் உதவியால் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நினைப்பதைவிட ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் வாழ்ந்து எந்த வேலை பார்த்தாலும் வாழ்வினில் வெற்றி பெற முடியும் என்று புரிந்துகொள்வதே சாலச் சிறந்தது.

?சாளக்ராமம் என்றால் என்ன?
– ரெங்கராஜன், திருச்சி.

சாளக்ராமம் என்பது, நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் ஒரு வித கல் ஆகும். கூழாங்கற்கள் போன்று காணப்படும் இவை, இறை அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மகாவிஷ்ணுவின் அம்சமாக இந்த சாளகிராம கற்கள் வணங்கப்படுகின்றன. இதற்கு ஆதாரமாக ஒரு கதை என்பது உண்டு. துளசி என்கிற ஒரு இளவரசி பெருமாளின் மேல் அளவற்ற பக்தி கொண்டு, அவரையே மணக்க விரும்பினாள். மகாவிஷ்ணு ஒரு மனிதனின் உருவம் கொண்டு அவளை ஏமாற்றினார். கோபம் கொண்ட அவள், என்னை ஏமாற்றிய நீ, கல்லாகக் கடவாய் என்று சபித்தாள். பெருமாள் அவளுக்கு தரிசனம் தர, அவள் பதறினாள். கவலை வேண்டாம் துளசி, இவை அனைத்தும் எனது சித்தப்படியே நடக்கிறது. என்னை மணக்க விரும்பிய நீ, கண்டகி நதியாக உருவெடுப்பாய். நான் அந்த நதியிலே கற்களாகத் தோன்றுவேன். அந்த கற்களை மனிதர்கள் தங்கள் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வழிபடுவார்கள். மக்கள் எல்லோரும் பயன்பெறவே இந்த நாடகம் நடத்தப்பட்டது என்று திருவாய் மலர்ந்தார். சாளகிராம கற்கள் எங்கு இருக்கின்றனவோ, அங்கே சாக்ஷாத் மந்நாராயணனே வாசம் செய்வதாக ஐதீகம். இதற்கு தனியாக பிரதிஷ்டாபன விதி ஏதும் கிடையாது. அப்படியே இந்த கற்களை இறைவனின் திருவடிவாகவே நினைத்து பூஜிக்கலாம்.

 

Related posts

இந்த வார விசேஷங்கள்

தியாகத்திற்கு ஒரு திருநாள்…!

ராகு-கேது தோஷ நிவர்த்திக்கு என்ன பரிகாரம்?