வருசநாடு சுற்றுவட்டாரத்தில் கனமழையால் மலைசாலைகள் கடும் பாதிப்பு

*விளைப்பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல்

*சாலைப்பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

வருசநாடு : வருசநாடு அருகே சுற்றுவட்டாரத்தில் கனமழையால் மலைசாலைகள் துண்டிக்கப்பட்டதால் விளைப்பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம், முத்துநகர், ஐந்தரைபுலி, உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமங்களில் விவசாயமே பிரதான தொழில் என்பதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பீன்ஸ், எலுமிச்சை, கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதனடிப்படையில், வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழை எதிரொலியாக சின்னசுருளி யானைகெஜம் போன்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்பொழுது பெய்து வரும் கனமழையால் சாலைகள் மிகவும் சிதலமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருசநாடு சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்த கிராமங்களுக்கு ஒரு குறிப்பிட்டட சாலை வசதியும் இல்லை. சீலமுத்தையாபுரம் மேல் வாலிப்பாறை கிராமம் வரை மட்டுமே தார்ச்சாலை வசதி இருந்தது. இதனால் காந்திகிராமம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சீலமுத்தையாபுரம் வாலிப்பாறை கிராமத்தில் இருந்து நடந்து செல்லும் நிலை காணப்பட்டது. மேலும் தார்ச்சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு அனுப்பி வைக்க மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

மாட்டு வண்டிகளிலும், டூவீலர்களிலும் சேகரிக்கப்பட்ட விளைப்பொருட்களை சீலமுத்தையாபுரம் கிராமம் வரை எடுத்து வந்து, பின்னர் அங்கிருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் சந்தைகளுக்கு அனுப்பி வந்தனர். இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் விளைபொருட்களை சந்தைகளுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை.இதேபோல பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு நாள்தோறும் ஐந்து கிலோமீட்டர் வரை நடந்து செல்லும் நிலை காணப்பட்டது. இது போன்ற காரணங்களால் சீலமுத்தையாபுரம் கிராமத்திலிருந்து காந்திகிராமம் வரை புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் புதிய தார்சாலை அமைக்க வனத்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர். மாவட்ட அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகள் உடன் பலகட்ட பேச்சுவார்த்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி கிராமம் வரை புதிய தார்சாலை அமைக்க அனுமதி பெற்றனர். இதனையடுத்து சீலமுத்தையாபுரம் கிராமத்திலிருந்து மேல்வாலிப்பாறை வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் சமயத்தில் தார்சாலை அமைக்க வனத்துறையினர் மீண்டும் தடை விதித்தனர்.

புதிய தார்சாலை அமைக்கும் பகுதியில் குறிப்பிட்ட தொலைவு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை தார்சாலை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் காந்தி கிராமத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம வாசிகள் கூறுகையில் பல வருட போராட்டத்திற்குப் பின்பு காந்தி கிராமத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் வனத்துறையினர் மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தியுள்ளனர். தார்சாலை இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு அனுப்பி வைக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதேபோல காந்திகிராமம், மேல்வாலிப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்கான ரேஷன் கடை 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் அதனை தலைச்சுமையாக சுமந்துகொண்டு வீடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்லும் மலைப்பாதை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. எனவே தற்போது இந்த மலைச் சாலை வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவு சிரமம் ஏற்பட்டுள்ளது. தவிர மழை பெய்யும் நேரங்களில் மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட எந்த வாகனமும் இயக்க முடியாத நிலை உள்ளது.

அது போன்ற நேரங்களில் விவசாயிகள் விளைப்பொருட்கள் சந்தைக்கு அனுப்பி வைக்க முடியாமல் அதிக அளவில் நஷ்டம் அடைகின்றனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்களில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் காந்திகிராமத்திற்கு சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் வனத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி காந்திகிராமத்திற்கு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ள தார் சாலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் மழை சேதங்கள் ஏற்பட்டுள்ள மண் சாலையை 100 நாள் திட்டத்தின் மூலம் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு