திருச்சி அருகே ரயில்வே தண்டவாளத்தில் லாரி டயர்கள் வீசப்பட்டிருந்தது தொடர்பாக ரயிலை கவிழ்க்க சதியா என்று போலீஸார் விசாரணை

திருச்சி: திருச்சி அருகே ரயில்வே தண்டவாளத்தில் லாரி டயர்கள் வீசப்பட்டிருந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரயிலை கவிழ்க்க சதித் திட்டமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு அதிவிரைவு ரயில் (12634) இன்று அதிகாலை 12.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

அந்த ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் வாளடிக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது இரு தண்டவாளங்களுக்கு இடையே 2 லாரி டயர்கள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. சூழலை உணர்ந்து கொண்ட என்ஜின் ஓட்டுநர் ரயிலை மெதுவாக இயக்க முயற்சிப்பதற்குள் ஒரு டயரில் என்ஜின் ஏறி இறங்கியது. இதில் இன்ஜினில் இருந்து மற்ற பெட்டிகளுக்கு செல்லும் மின்சார இணைப்பு பெட்டி சேதம் அடைந்தது. இதனால் மற்ற பெட்டிகளுக்கு சென்ற மின்சாரம் தடைபட பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.

விபரீதத்தை உணர்ந்த என்ஜின் ஓட்டுநர் திருச்சி ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவ்வழியாக வந்த ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே நள்ளிரவில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அதற்குள் தொழில்நுட்ப குழுவினர் ரெயில் நின்ற பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரெயில் பெட்டிகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சீரமைத்தனர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

ஆனால் அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சி கோட்டை ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தில் கிடந்த லாரி டயர்களை பறிமுதல் செய்து ரயிலை கவிழ்க்க சதி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு!

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு

செய்யும் தொழிலே தெய்வம்: பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியை தொடங்கும் மூதாட்டி