வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த வர்த்தக கண்காட்சி, கருத்தரங்கு: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி வட்டாரம், கொழுந்தளூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்த வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன் இதில் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். துணை இயக்குனர் இளையராஜா அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் த.பிரபு சங்கர், இயற்கை விவசாயம் குறித்த வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது :- இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உணவு உட்கொள்வதற்கு அறிவியல் முன்னேற்றம்தான் முக்கிய காரணம். மேலும், அனைவருக்கும் உணவு பாதுகாப்பை நமது அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. பசியுடன் தூங்கச் செல்பவர்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதிதான் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையின் காரணமாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டமாகும். இதன் மூலம் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு கிடைக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளோம். நாம் உணவு உட்கொள்ளும்போது எந்தவித பயமும் இன்றி, நாமும் அடுத்த தலைமுறையும் நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றால் இயற்கை சார்ந்த விவசாயத்தை முன்னெடுப்பது மிகவும் அவசியமானது.

நமது மாவட்டத்தில் எந்த ஒரு விவசாய பெருங்குடி மக்களும் பாதிக்காத வண்ணம் அதற்கான நிலையினை உருவாக்கியுள்ளோம். மேலும் அவர்களுக்கான நிவாரணத் தொகையினையும் முழுமையாக வழங்கி உள்ளோம். இவ்வாறு பேசினார். இதனைத் தொடர்ந்து இயற்கை விவசாயம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக கண்காட்சி செயல்பாட்டினை கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் இயற்கை வேளாண் தொடர்பான பொது கரங்கள் என்ற தலைப்பில் உள்ள கையேட்டினை கலெக்டர் வெளியிட, எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் 15 விவசாயிகளுக்கு ரூ.43 ஆயிரத்து 430 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பாச்சூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பொருளாளர் ஸ்ரீகாந்த், பூண்டி ஒன்றிய திமுக செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஜான் என்ற பொன்னுசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி, வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் பானுமதி, வேளாண்மை துணை இயக்குநர் சுசீலா மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்: ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் சர்ச்சை

சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக ரூ.1000 அபராதம் விதித்தது போலீஸ்!!

முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது : சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!!