திருமலையில் பக்தர்கள் அதிகரிப்பு எதிரொலி; ஜூன் 30 வரை பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் ஜூன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி நேற்று 70 ஆயிரத்து 668 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களில் 38 ஆயிரத்து 036 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. இதில் ஒரே நாளில் ₹3.64 கோடி காணிக்கையாக கிடைத்தது.

இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பி, சிலா தோரணம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். இவர்கள் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மேலும் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.

எனவே இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு விரைவில் சுவாமி தரிசனம் செய்து வைக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் ஜூன் 30ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே எந்தவித பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!