தேனியில் ரூ.92.02 கோடியில் கட்டப்பட்டு வரும் ேமம்பாலம் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படுமா?

*பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

தேனி : தேனி நகர் மதுரை சாலையில் ரூ.92 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தேனி நகரானது மாவட்டத்தின் தலைநகராகவும், மாவட்டத்தின் மையப் பகுதியாகவும் அமைந்துள்ளது . தேனி நகரமானது மாவட்ட தலைநகராக மாறியதை தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தேனி நகரில் மாவட்ட தலைநகருக்கான அனைத்து துறை அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது.

இது தவிர பெரிய அளவிலான தனியார் சுயநிதி பள்ளிகளும் ,பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், அரசு மற்றும் தனியார் ஐடிஐக்கள், கலை அறிவியல் கல்லூரிகள் என கல்வித்துறையிலும் தேனி நகரானது அபரிமிதமான வளர்ச்சியை எட்டி உள்ளது.இதனால் தேனிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தேனி நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தேனியில் முக்கிய சாலைகளாக தேனி நகர் மதுரை சாலை, கம்பம்சாலை, பெரியகுளம் சாலைகள் உள்ளன. இதில் போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் தேனி நகர் மதுரை சாலை வழியாக ரயில்வே கேட்டினை கடந்து புதிய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வருகிறது. இதேபோல, கூடலூர், கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களும் தேனி நகர் மதுரை சாலைவழியாக ரயில்வே கேட்டினை கடந்து சென்று வருகிறது.

மதுரையில் இருந்து தேனி வரை கடந்தாண்டு மே 26ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது காலை 9.35 மணிக்கு தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ரயில்வே கேட்டையும், இதனைத்தொடர்ந்து பாரஸ்ட் ரோடு, தேனி நகர் பெரியகுளம் சாலை ரயில்வே கேட்டை கடந்து தேனி ரயில்நிலையத்தை அடைகிறது. இதோபோல மாலையில் 6.15 மணிக்கு தேனியில் இருந்து மதுரைக்கு இந்த பயணிகள் ரயில் புறப்பட்டு செல்கிறது.

ரயில் தேனிக்கு மதுரையில் இருந்து வந்து செல்லும் இருநேரங்களிலும், ரயில் வருவதற்கு 15 நிமிடம் முன்பாக ரயில்வே கேட்டுகள் அடைக்கப்படுகின்றன. இதன்காரணமாக தேனி நகர் மதுரை சாலையில் மருத்துவமனை செல்லும் நோயாளிகள் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள், கலெக்டர் அலுவலகம் செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட் மூடப்படுவதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற சமயங்களில் தேனி நகர் மதுரை சாலையில் ரயில்வே கேட்டின் பகுதியில் இருந்து மதுரை ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கும் அவலம் உள்ளது. எனவே, ரயில் வந்து செல்லும் நேரங்களில் வாகனங்கள் நிற்காமல் செல்ல ரயில்வே கேட்டிற்கு மேல் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அக்.31க்குள் பணிகள் முடிக்கப்படுமா?

இதனையடுத்து மதுரை சாலையில் அரண்மனைப்புதூர் விலக்கு அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ரூ. 92 கோடியே 2 லட்சம் மதிப்பில் இச்சாலையில் உள்ள மேரி மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அருகில் துவங்கி பென்னிகுக் நகர் திருப்பம் அருகே தனியார் ஓட்டல் வரை உள்ள சாலையில் 1.2 கிமீ தூரத்திற்கு 2 தூண்களுடன் கூடிய 15 மீட்டர் அகலம் உள்ள நான்கு வழிச்சாலைகளை கொண்ட மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. இதனையடுத்து இப்பணிக்கான ஆணை கடந்த 2021ம் ஆண்டு அக்.29ம் தேதி பணிகள் துவக்கப்பட்டது. வருகிற அக்.31ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு மேம்பாலம் கட்டுமானப்பணிக்கான பணியாணை வழங்கப்பட்டது.

15 சதவீத பணிகள் கூட முடியல

முதற்கட்டமாக தேனி நகர் மதுரை சாலையில் சிட்கோ அருகில் இருந்து புது பஸ் நிலைய பிரிவு வரை சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கு நாளன்று துவங்கியது. இதில் ரயில்வே கேட்டை கடந்து அரண்மனைப்புதூரில் விலக்குப்பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டுவதற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் துவங்கின.மேம்பாலம் அமைப்பதற்கான தூண்கள் கட்டுமானப்பணிகள் துவங்கி 10 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை 15 சதவீத பணிகள் கூட முடிவடையாத நிலையில் ஆமை வேகத்தில் பணிகள் நகர்ந்து வருகின்றன.

பாலத்தின் தூண்கள் அமைப்பதற்காக இச்சாலையில் தூண்களுக்காக குழிதோண்டப்பட்ட சாலையில் பேருந்துகள், வாகனங்கள் பயணித்து வருகின்றன. இக்கட்டுமானப்பணிக்கான சாலைகள் சில இடங்களில் குறுகியும், சில இடங்களில் மிக அகன்றும் உள்ளதால் வாகன ஓட்டுனர்களில் சிலர் சாலைவிதியை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்வதால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
பாலம் கட்டுமானப்பணியானது 2023ம் ஆண்டு அக்.31ம் தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இந்நிபந்தனை காற்றில் பறக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமானது மேம்பாலம் கட்டுமானப்பணியை துரிதப்படுத்தாமல் உள்ளது.பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட கலெக்டர் மேம்பாலம் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது

குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு