தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாடு அரசு மறைமுகமாக தடை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு சட்ட ஒழுங்கை காரணம் காட்டி தடையை விதித்திருந்தது. இந்த தடைக்கு எதிராக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மேலும் மறைமுக தடை விதித்ததாக தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு மாநில அரசுகளுக்கும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், தமிழ்நாட்டில் இத்திரைப்படத்திற்கு எவ்விதமான தடையும் விதிக்கவில்லை எனவும் போதுமான பாதுகாப்பை அழைத்திருந்தோம் எனவும் குறிப்பாக இத்திரைப்படம் திரையிடப்பட்ட 21 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போதுமான ஏற்பாடுகள் செய்திருந்தது எனவும் 25 டிஎஸ்பிக்களை உள்ளிட்ட 965 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகமில்லாத நடிகர்கள் நடித்தது, போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தினால் திரையரங்கின் உரிமையாளர்களே மே 7ம் தேதி முதல் திரையிடுவதற்கு நிறுத்திக்கொண்டனர் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மேற்கு வங்க அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்ததுடன் தமிழ்நாடு அரசின் வாதத்தை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை திரையிட விரும்பும் திரையரங்குகளுக்கும், திரைப்படத்தை காண செல்லும் ரசிகர்களுக்கும் உரிய பாதுகாப்பு செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.மேலும் இந்த திரைப்படத்திற்கு தடைகோரிய மேல்முறையீடு மனுக்கள் ஜூலை 2வது வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related posts

குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு

ஸ்டிராங் ரூம் சிசிடிவி கேமராக்களில் கோளாறால் பரபரப்பு!