மசாலாக்களின் மறுபக்கம்…

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

இலவங்கப்பட்டை

லாரேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்த Cinnamomum verum என்ற மரத்தின் அடிப்பகுதியின் பட்டைதான் இலவங்கப்பட்டை (பட்டை, கருவாப்பட்டை) என்றழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் “Cinnamon” என்றழைக்கப்படும் பட்டையில் இரண்டு வகைகள் உள்ளன. பொதுவாக சமையலுக்குப் பயன்படும், சந்தையில் விற்பனை செய்யப்படும் “கேசியா” என்பது ஒரு வகை.
இது இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுவது. இலங்கையில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மிக லேசான கசப்புத் தன்மையுடன், “சிலோன்” என்னும் மற்றொரு வகை பட்டை. இதுவே உண்மையான பட்டை என்று கருதப்படுகிறது.

வாசனை கொடுக்கும் மசாலாப் பொருளாகவே பெரும்பாலும் கருதப்படும் பட்டையில் மருத்துவ குணங்களும் உண்டு. தோலில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று, படை போன்ற நோய்களுக்குப் பட்டையைப் பொடியாகவும், எண்ணெயாகவும் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும். 3 கிராம் அளவிலான பட்டைப் பொடியில், 26.1 மி.கிராம் கால்சியம் மற்றும் 11.2 மி.கிராம் பொட்டாசியம் இருப்பதால், இதயத்திற்கு நல்லது. உயர் ரத்த அழுத்தம், பிற இதய பலவீனம் இருப்பவர்கள் தேநீர் தயாரிக்கும்போது, சிறிது பட்டைப் பொடி சேர்த்தும் அருந்தலாம்.

அசைவ உணவுகளில் மசாலாவாக மட்டும் பயன்படுத்தப்படாமல், ரொட்டிகள், பன் வகைகள், கேக் வகைகள், இனிப்புகள் தயாரிக்கும்போது, வாசனைக்காக இலவங்கப்பட்டைப் பொடி சேர்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி பட்டைப்பொடி மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு மேல் எடுத்துக்கொள்ளும்போது, தேவையற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. ஐரோப்பாவின் உணவுப் பாதுகாப்பு அதிகார அமைப்பும் ஒருவரின் ஒரு கிலோ உடல் எடைக்கு, 0.1 மி.கிராம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதிக அளவில் சேகசியா பட்டையை உணவாகப் பயன்படுத்தினால், அதிலிருக்கும் “குமாரின்” என்ற பொருள் கல்லீரலைப் பாதிக்கிறது என்று எச்சரிக்கப்படுகிறது. ஒரு தேக்கரண்டி கேசியா பட்டைப் பொடியில் சுமார் 2.6 கிராம் குமாரின் நுண்பொருள் இருக்கிறது. ஆனால், இப்பொருள் சிலோன் பட்டையில் மிகக் குறைவாகவே உள்ளது.

இதயநோய்க்கு எடுத்துக்கொள்ளும் “ஸ்டேடின்” என்னும் மருந்து சாப்பிடும்போது, மற்றொரு நோய்க்கு பட்டைப் பொடியையும் மருந்தாக எடுத்துக்கொண்ட 73 வயது பெண்மணிக்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் தொடர்ச்சியாக பட்டைப் பொடி உட்கொண்டதால், ஸ்டேடின் மருந்துடன் சேர்ந்து, அவருடைய கல்லீரலைப் பாதித்து, மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் அறிக்கை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மசாலாப் பொருட்களை supplements ஆக எடுத்துக்கொள்ளும்போதும் வல்லுநர்களின் முறையான வழிகாட்டுதல் அவசியம்.

கசகசா

மெசபடோமியாவில் வசித்த சுமேரியர்கள் கசகசாவைப் பயன்படுத்தியதுடன், மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு பொருளாகக் கருதி “hul gil” என்னும் பெயர் கொடுத்தனர். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே மத்தியதரைக் கடல் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட கசகசா, ஒரு புதர் வகைத் தாவரம். பாபாவெரேசியே தாவர குடும்பத்தைச் சார்ந்த கசகசா, papaver somniferum என்ற தாவரவியல் பெயராலும், அதன் உலர்ந்த விதைகள் poppy seeds என்ற ஆங்கிலப் பெயராலும் அழைக்கப்படுகிறது. இச்செடிகளில் பல வகைகள் இருந்தாலும், அல்கலாய்டுகள் குறைவாக இருக்கும் வீரியம் குறைவான செடி வகைகளே உணவுக்காக வளர்க்கப்படுகின்றன. ஆல்கலாய்டுகள் அதிகம் உள்ள வகைகள், மருந்துக்காக வளர்க்கப்படுகின்றன.

கசகசா செடி மூன்று விதமான பயன்களைக் கொடுக்கிறது. விதைகள் உணவாகவும், முழுவதும் முற்றாத விதைப்பைகளைக் கீறி, அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பால் ஓபியம் என்னும் போதைப் பொருளாகவும், மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் அல்கலாய்டு மூலப்பொருட்கள் பிரித்தெடுப்பதற்கும் பயன்படுகிறது. கசகசா செடியின் பாலில் இருந்து ஏறக்குறைய 30 வகையான அல்கலாய்டுகள் எடுக்கப்படுகின்றன. அவற்றுள் 20% மார்பின், 5% நாஸ்கேபின், 2% பாபாவெரின், 1% திபெய்ன் போன்ற அல்கலாய்டுகள் குறிப்பிடத்தக்கவை.

மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது, தொடர்ச்சியான பேதி, குடற்புழுக்கள், தலைவலி இருப்பவர்களுக்கு நிவாரணமளிக்கிறது. குறைந்த உடல் எடை இருப்பவர்களுக்கு கசகசா உடல் எடையை அதிகரிக்கிறது. உணவில் சேர்க்கும்போது, திரவ உணவுகளுக்கு சற்றே கொழகொழப்பான திடத்தன்மையைக் கொடுப்பதுடன், அசைவ உணவுகளுக்கு சுவையை அதிகரித்துக் கொடுக்கிறது. கசகசா உணவாகவும் மருந்தாகவும் பல பயன்களைக் கொடுக்கிறது. என்றாலும், கசகசா செடியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பாலில் போதை கொடுக்கும் ஓபியம் பொருள் அதிகம் இருப்பதால், அதை போதைப் பொருளாகவும் கருதி, அனுமதியில்லாமல் செய்யப்படும் ஏற்றுமதி, இறக்குமதிக்குத் தடை இருக்கிறது.

கசகசா விதைகளைப் பயிரிட்டு, அச்செடியை வளர்த்தெடுக்க முடியும் என்பதால், வளைகுடா நாடுகளில் கசகசா போதைப் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் உணவாகப் பயன்படுத்துவதற்குத் தடை இல்லை என்றாலும், பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்லும்போது, முறையான அனுமதி பெற்று தீவிரமான சோதனைகளைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

உணவு தயாரிக்கும்போது, பிற பொருட்களுடன் சேர்ந்து, முறையாகப் பிரிக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட 50 கிராம் கசகசா இருந்தாலும் உடலுக்கு கெடுதல் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது, 70 கிலோ உடல் எடை இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 7 மேஜைக்கரண்டி வரையில் கசகசாவை உணவாக எடுத்துக்கொண்டாலும் ஆபத்து ஏதும் இல்லை. ஆனால் செரிமானம் மந்தநிலையில் இருக்கும்.

முற்றாத காய்களில் இருந்து எடுக்கப்படும் கசகசாவைப் பயன்படுத்தி டீ அல்லது காபி தயாரித்துக் குடித்தால், அதிலிருக்கும் ஓபியம் போதையைக் கொடுக்கும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகவும் முடியும். உணவாகக் கசகசா சாப்பிட்டவர்களின் சிறுநீரைப் பரிசோதித்தாலும், மார்பின் மற்றும் கோடின் போதைப் பொருளைக் கண்டறிய முடியும் என்னும் அளவிற்கு அதன் வீரியம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

Related posts

சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!

குதிகால் வலி

ஹெப்படைட்டிஸ் அலெர்ட் ப்ளீஸ்!