அரிதான இறைச்சி உணவுகள்!

உடும்பு இறைச்சி

உடும்பு இறைச்சி உண்ணும் வழக்கம் ஒரு சில இனக்குழு மக்களிடம் காணப் படுகின்ற வழக்கமாகும். வயல்வெளிகளிலும் அடர்ந்த புதர்களிலும் மரங்களிலும் காணப்படும் உடும்புகளைக் கல்லால் அடித்துக் கொன்று தோலை உரித்துக் கறியை எடுக்கின்றனர். சிலர் கண்ணி வைத்துப் பிடிக்கின்றனர். கல்லால் அடித்தால் தோல் சேதமாகும் என்பதால், கன்னி வைத்து பிடித்து தோலை சட்டிமேளம் செய்யப் பயன்படுத்துகின்றனர். உடும்பு இறைச்சி உடலுக்கு நன்மை பயக்கும் என அதனை உண்பவர்கள் கருதுகின்றனர். உடும்பு இறைச்சியினால் துர்பலம், வீக்கம், சொறி, தலை, காது களில் வருத்துகின்ற நோய்கள், இரணம், குட்டம், காசம், வெள்ளை, மூலம், குடல்வாதம், வாத பித்தம், பேதி ஆகியவை விலகும் என சித்தர்கள் பாடியுள்ளனர்.

முயல் இறைச்சி

காட்டு முயலை வேட்டையாடிக் கொண்டு வரும் சிலரிடம், விலைக்கு வாங்கி உண்பவர்கள் உண்டு. வீட்டிலேயே முயல் வளர்த்து உண்பவர்களும் உண்டு. அப்படி வளர்ப்பவர்கள் வெண்மை மற்றும் பழுப்பு நிறமுடையதாகவும் வீட்டு முயல் பிறருக்கு விற்பதும் உண்டு. காட்டு முயல் வெண்மை நிறமுடையதாகவும் காணப்படும். முயல் இறைச்சி உண்டால் சோகை நோய் குணமாகும். இரத்தத்தைத் தலையில் தடவினால் முடி கருகருவென நீண்டு வளரும் என்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. முயல் இறைச்சியால் விரைவான நடையுண்டாகும். பைத்தியம், காசம், இருமல், வாயு, மலச்சிக்கல் ஆகியவை நீங்கும் என்பது சித்தர் வாக்கு.

வாத்துக் கறி

ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்பவர்கள் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வாத்து வளர்க்கின்றனர். இதனை ஒரு சிலர் வாங்கி உண்பதுண்டு. வாத்து இறைச்சி உண்ணும் வழக்கம் அருகிக் காணப்படுகிறது. வாத்துக் கறியை உட்கொண்டால் சிவந்த ரணம், கிரந்தி, கோழை, பசியின்மை ஆகியவை குணமாகும். சுக்கிலம் இறுகிக் கட்டும்.

காடைக் கறி

காடைக்குக் கண்ணி வைத்துப் பிடித்து உண்ணும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. வயலில் வேலையில்லாத ஓய்வு நேரங்களில் இதனைப் பிடிக்கின்றனர். ஒரு சிலர் காடை பிடிப்பதற்கென்று கூண்டு செய்து வைத்துள்ளனர். காடைக் கறி உண்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் பருமனாகும் என நம்புகின்றனர். காடைக் கறிக்கு சகல நோய்களும் குணமாகும்.

கௌதாரிக் கறி

கௌதாரிக் குஞ்சுகளைப் புதர்களிலிருந்து பிடித்துவந்து கூண்டுகளில் அடைத்து வளர்க்கின்றனர். கௌதாரிக்குப் பிடித்தமான கரையானைப் புற்றுமண்ணோடு வெட்டி வந்து இரையாகக் கொடுக்கின்றனர். வளர்ந்த கௌதாரிகளைக் கொண்டு மேலும் கௌதாரிகளைப் பிடிக்கின்றனர். ஒரு கௌதாரியை கூண்டுக்குள் வைத்து, அக்கூண்டைப் புதர்களில் ஒளித்து வைத்து ஒலியெழுப்பச் செய்து பிற கௌதாரிகளை வரவழைத்து கண்ணிகளில் சிக்க வைக்கின்றனர். இவ்வழக்கம் ஒரு சிலரிடம் காணப்படுகிறது. இவ்வாறு கௌதாரிகளைப் பிடித்து இறைச்சிக்குப் பயன்படுத்துகின்றனர். சளி, கை, கால் வலி போன்றவற்றைக் குணப்படுத்தும். கௌதாரி இறைச்சியில் சக்தி இருப்பதாக அதனை உண்பவர்கள் கருதுகின்றனர்.

புறாக் கறி

புறாவை கோழி வளர்ப்பதுபோல் கூண்டில் வளர்க்கின்றனர். வளர்ப்புப் புறாக்கள் இரைதேடி வெளியில் பறந்து சென்றாலும் மாலை கூடு திரும்பி விடுகின்றன. இவற்றை விற்பனை செய்வதும் உண்டு. புறாக்களில் எட்டு வகையான புறாக்களிருப்பதாக அவற்றின் குணங்களைப் பற்றிக் கூறும் பதார்த்த குணபாடம் குறிப்பிடுகிறது.

வெண்புறா : வெண்புறாக் கறியை உண்டால் வாத பித்தம், இரணம், வெண்குட்டம், கரப்பான், சொறி இவைகள் நீங்கும்.

பச்சைப்புறா: இதனை உண்டால் முக்குற்ற தொந்தரவும், தேக புஷ்டியும், வீரிய விருத்தியும் உண்டாகும். வாதம், பக்கவாதம், இளம்பிள்ளை வாதம் ஆகியவை
களைக் குணப்படுத்தும்.

மாடப்புறா: இதனை உண்டால் பசிஅதிகரிக்கும். இது பத்தியத்திற்கானது.

வரிப்புறா: வாயுவுடன் கூடிய பித்தத்தையும் பலவித வீக்கங்களையும் போக்கும்.

வண்ணப்புறா: இதன் கறியை உண்டால் கோழை, இரத்தபித்தம், உணவில் வெறுப்பு ஆகியவைகளைப் போக்கும். பசியை உண்டாக்கி உணவை உட்கொள்ளச் செய்யும்.

மணிப்புறா: வாதப் பிடிப்பு, காசநோய், வயிற்று நோய், கபத்தின் ஆதிக்கம் ஆகியவைகளைப் போக்கும்.

மனைப்புறா: இக் கறியானது மருந்தை முறிப்பது தவிர, கரப்பான், சொறி, தாதுவிருத்தி ஆகியவைகளை உண்டாக்கும்.

தவிட்டுப்புறா: கரப்பான், வீக்கம், உட்புற நமைச்சல், காமாலை, சுவாசத்தடை ஆகியவை போகும்.

குயில் கறி

குயிலையும் கண்ணி வைத்தே பிடிக்கின்றனர். மரங்களில் குயில் கண்ணியைக் கட்டி, நடுவில் கோவைக் கனியை வைத்து விடுவர். அதனை உண்பதற்கு வரும் குயில் கண்ணியில் மாட்டிக்கொள்ளும். இதுபோல் சில இடங்களில் கண்ணி வைத்துச் சேகரிப்பதும் உண்டு. இதுவும் ஒரு சிலரிடமே காணப்படுகிறது. சிலர் சுண்டு வில்லால் அடித்துக் குயிலை வேட்டையாடுவதும் உண்டு. சுட்டுக்கொண்டு வரும் குயிலை விலை கொடுத்து வாங்கி உண்ணுகின்றனர். குயில் பழங்களைத் உண்பதனால் அதனை உண்பது உடலுக்குக் குளிர்ச்சி, சூட்டைத் தணிக்கும் என நம்புகின்றனர். குயில் கறியை உண்டால் வாத பைத்தியம், புடை, இரணம், வயிற்றுவலி ஆகியவை நீங்கும், வீரிய விருத்தி உண்டாகும்.

இரத்தின புகழேந்தி

Related posts

ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் தீ

மே-31: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை