பைக் மீது கார் ஏற்றி வாலிபர் கொலை: சென்னை ஐடி ஊழியர்கள் படுகாயம்

மேட்டுப்பாளையம். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கஸ்தூரிபாளையத்தைச் சேர்ந்தவர் சூசை. இவரது மகன் பாண்டி (28). ஆசாரி வேலை செய்து வருகிறார். பெரியநாயக்கன்பாளையம் குட்டைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரநாடு என்பவரது மகன் அருள்குமார் (24). கோவை சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது மகன் வசந்தகுமார் (25). இருவரும் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மூவரும் நண்பர்கள். நேற்றிரவு பாண்டி தனது பைக்கில் நண்பர்கள் அருள்குமார், வசந்தகுமார் ஆகியோருடன் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கோத்தகிரி வியூ பாயிண்டிற்கு சென்றார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பலுக்கும், பாண்டி மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

பின்னர் பாண்டியும், நண்பர்களும் பைக்கில் மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தனர். சாலையின் குறுக்கே காட்டு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் அவர்கள் அங்கே நின்றனர். அப்போது, கோத்தகிரி வியூ பாயிண்டி அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட கும்பல் காரில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஆனால் மீண்டும் திரும்பி வந்த அவர்கள் பாண்டியும், நண்பர்களும் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் சென்றபோது பைக் மீது காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தெரிகிறது. இதில் பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்: ஆர்.பி.உதயகுமார்!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை தகவல்