பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தின் போது உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். இதையடுத்து 2011ல் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவர் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எனக்கூறி விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக 2017ல் அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.

இதையடுத்து வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளி என உத்தரவிட்டதோடு இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இருவரையும் குற்றவாளி என்று பிறப்பித்த உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் வழங்கப்பட்ட மூன்று ஆண்டு தண்டனை ஆகியவற்றை நிறுத்தி வைத்து கடந்த 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏவாக ஆனார்.

அதேப்போன்று பொன்முடியை அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்து அது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்து இருந்தார். ஆனால், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று முதல்வருக்கு ஆளுநர் பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு கோரிக்கை வைத்தார்.

அதில்,’ பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் மறுப்பது, அரசியல் சட்டத்தின் 164(1) பிரிவை மீறுவதாகும். ஆளுநர் போட்டி அரசை நடத்த முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளோம். இது தேர்தல் காலம் என்பதால் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, மனுவை விரைந்து பட்டியலிட்டு விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!