வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்காமல் மவுனம் காக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்காமல் மவுனம் காக்கும் வைத்தியானவரால் தாமரை நிர்வாகிகள் அதிர்ச்சியில இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் சேலம்காரருடன் ஏற்பட்ட மோதலில் தேனிக்காரர் பிரிந்து தனிஅணியாக செயல்பட்டு வருகிறார். சேலத்துக்காரரிடம் இருந்து தேனிக்காரர் பிரிந்து வரும்போது மாஜி அமைச்சர்களில் ‘‘நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் வைத்தியானவர்’’ முதல் ஆளாக தனது ஆதரவாளர்களுடன் வந்து தேனிக்காரர் அணியில் ஐக்கியமானார். தற்போது வரையிலும் தேனிக்காரருக்கு விசுவாசியாக இருந்து வருகிறார். டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை வைத்தியானவர் முக்கிய நபராக வலம் வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் தாமரையுடன் கூட்டணி வைத்து களம் இறங்கும் தேனிக்காரர் அணிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதி தென் மாவட்டம் என்பதால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக தேனிக்காரர் முடிவு செய்து விட்டாராம்… டெல்டா மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்து வரும் வைத்தியானவர் நெற்களஞ்சிய தொகுதியில் கூட்டணி கட்சியல யார் போட்டியிட்டால் நமக்கு என்ன என்பது போல் மவுனமாக இருந்து வருகிறாராம்… இந்த தகவல் தெரிய வந்த கூட்டணி கட்சியில் உள்ள தாமரை கட்சி முக்கிய நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளார்களாம்… நெற்களஞ்சிய தொகுதியை பொறுத்தவரை தாமரை கட்சியில் யார் நின்றாலும் அந்த வேட்பாளருக்கு ஆதரவாக பெயரளவுக்குதான் வைத்தியானவர் பிரசாரம் மட்டும் செய்ய உள்ளார். களத்தில் இறங்கி கடினமாக பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இந்த டாப்பிக் தான் பற்றி பேசிக்கிறாங்களாம்’’…. என்றார் விக்கியானந்தா.

‘‘கடைக்கோடி மாவட்டத்தில் சமூக அமைப்புகள் குஷியாகி இருக்க காரணம் என்ன..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் தாமரைக்கட்சி கூட்டணியில் பாமக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. ஆனால், குமரியில் த.மா.கா.வில் பெரிய அளவில் ெதாண்டர்கள், நிர்வாகிகள் யாரும் இல்லை. தற்போது மாவட்ட தலைவராக உள்ள கவுன்சிலர் செல்வம் மட்டுமே கொஞ்சம் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். பா.ம.க வட மாவட்டங்களில் பலமாக இருந்தாலும், குமரியில் நிர்வாகிகள் குறைவு. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சிலர் ஆர்ப்பாட்டம், புகார் மனு என செயல்பட்டனர். ஆனால், இருந்த ஒரு சிலருக்குள்ளும் கோஷ்டி பூசல் ஏற்பட்டு விட்டது. இங்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் தொண்டர்கள் குறைவுதான். இதனால், குமரியில் கூட்டணி என்பது பெயரளவிலேயே இருப்பதால பா.ஜ. நிர்வாகிகள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபட்டு வர்றாங்க.. கூட்டணியில் பெரிய கட்சிகள் எவும் இல்லை என்ற சூழலில், குமரி சமூக அமைப்புகள் குஷியாகி உள்ளனவாம்.. கடந்த சில வாரங்களாகவே லெட்டர் பேட் அமைப்புகள் பா.ஜ பிரமுகர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்காங்களாம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தொகுதி முரசுக்கு போனதால பிரசாரத்திற்கு போன தொழிலதிபர் கூடுதல் டென்ஷினில் இருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தலில் மெடல் நகர் தொகுதி இலைக்கட்சிக்கு தான் என்ற நம்பிக்கையில் மாநகராட்சி ஏரியாவில் வசிக்கும் பிள்ளையார் பெயரைக் கொண்ட பட்டாசு தொழிலதிபரை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கட்சியில் சேர்த்தனர். முக்கிய நிர்வாகிகளை சந்திக்க வைத்தும், கூட்டங்களில் பங்கேற்கவும் வைத்தனர் கட்சி நிர்வாகிகள். அவரும் வடிவேலு காமெடி பாணியில், ‘நான்தான் வேட்பாளர்… நான்தான் வேட்பாளர்’ என்ற தோரணையில் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபடாத குறையாக சொகுசு காரில் வலம் வந்துக்கிட்டு இருந்தாரு.. தேர்தல் பிரசார வாகனத்தையும் புதிதாக வாங்கி தயார் நிலையில் வைத்திருந்தார். கரன்சியையும் கண்டபடி இறக்கியிருக்கிறார். இலைக்கட்சியின் மற்றொரு தரப்பினரோ இவருக்கு சீட் கிடைத்துவிடக் கூடாது என, காவடி தூக்காத குறையாக கடவுளை வேண்டிக்கிட்டு இருந்தாங்களாம்.. கடைசியில் தொகுதி முரசு தரப்புக்கு ஒதுக்கப்பட்டதால் பிள்ளையார் பெயரைக் கொண்டவர் செலவிட்ட பணமெல்லாம் வீணாகி போச்சேன்னு நெருங்கியவர்களிடம் புலம்பி வருகிறாராம்.. இலைக்கட்சியின் எதிர் தரப்பினரோ ரொம்பவும் குஷியாக உள்ளனராம்.. எது எப்படியாக இருந்தாலும் கூட்டணி வேட்பாளருக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்கன்னு தலைமை உத்தரவிட்டுள்ளதால் கூடுதல் டென்ஷனில் உள்ளார்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியில கொடுக்க வேண்டியதை கொடுத்தா தான் சீட்டு கிடைக்குதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாடாளும் மன்றத்தோட தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்குது.. இதுல கிரிவலம் மாவட்டம் ஆறு அணி தொகுதியில இலை கட்சி சார்புல போட்டி போடலாம்னு மாஜி சட்டத்தோட மன்ற உறுப்பினர் ஒருத்தரு கனவுல இருந்தாராம்.. இதுக்காக மாஜி மன்ற உறுப்பினர் அழகானவரும், அவரது ஆத்துக்காரம்மாவும் சேர்ந்து நேர்காணலுக்கு போய்ட்டு வந்தாங்களாம்.. அதோட சேலத்துக்காரரையும் நேர்ல சந்திச்சு தனது வெற்றி வாய்ப்புகள் தொடர்பாக அவரே எடுத்த சர்வே குறித்தும் சொன்னாராம்.. அதுல 5 பர்சன்டேஜ் தான் பின் தங்கி இருக்குறதாகவும், எனக்கு சீட்டு கொடுத்தா நான் ஜெயிச்சுடுவேன்னு சொன்னாராம்… அதுக்கு கட்சியில, 10 சி கொடுங்க, சீட்டு உடனே கொடுக்குறோம்னு சொன்னாங்களாம்.. அதுக்கு அழகான மாஜியோ, நான் செலவு செய்றேன், ஆனா கையில கொடுக்க மாட்டேன்னு ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாராம்..

அதேபோல, ஆறுஅணி சவுத் ஒன்றியத்தோட செக்ரட்ரியான பெயரின் முடிவில் தீரனை கொண்டவரு, கேட்டதை கையோட கொடுத்துட்டு வந்தாராம்.. இந்நிலையில கையோடகொடுத்தவருக்கு சீட்டு கொடுத்திருக்காங்களாம்.. இலைகட்சியில கொடுத்தாத்தான் சீட்டு, கொடுக்கலைன்னா இல்லை என்ற நிலையா இருக்குதேன்னு ரத்தத்தின் ரத்தங்கள் பீல் பன்றாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்கள்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

கங்கை அம்மன் கோவில் திருவிழா; வேலூர் மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!