கோடைகால சிறப்பு மேக்கப் ஆலோசனைகள்!

‘சுட்டெரிக்கும் வெயில், கிட்டத்தட்ட நமது சருமமே அரைவேக்காடு பதத்திற்கு வெந்துவிடும் போலிருக்கிறது இதில் எங்கிருந்து மேக்கப் நிற்கும். எனினும் கொளுத்தும் வெயிலாக இருப்பினும் பார்ப்பதற்கு பளிச் லுக்கில் இருக்க வேண்டும் என்பது தலையாய கடமை ஆயிற்றே. அதீத சம்மரிலும் எப்படிப்பட்ட மேக்கப் பயன்படுத்தினால் நீண்ட நேரம் மேக்கப் நிற்கும் எந்த சருமத்திற்கு என்ன மேக்கப் விவரமாக சொல்கிறார் செலிபிரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட் ரம்யா அழகேந்திரன். ‘அதிக வெயிலில் என்னதான் மேக்கப் போட்டாலும் உடனடியாக உருகி கரைந்து விடுவதற்கு உடலில் ஹைட்ரஜன் பிரச்சனை இருப்பதுதான் காரணம். எந்த மேக்கப் என்ன கிரீம்கள் வெளிப்புற சருமத்தில் பயன்படுத்தினாலும் உள்ளிருந்து ஈரப்பதத்தை உடல் முழுக்க கொடுக்கும் நீர் மிகவும் அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்த முடியுமோ அவ்வளவு அருந்துங்கள். மேலும் புத்துணர்ச்சி கொடுக்கும் பழங்கள், பழச்சாறுகள் கோடையில் சிறப்பாக கிடைக்கும் தர்பூசணி, நுங்கு, இளநீர் இவற்றை பகல் பொழுதுகளில் அதிகம் எடுத்துக் கொள்வது உள்ளிருந்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதற்கு உதவும். மற்ற மேக்கப் பயன்பாடு அத்தனையுமே இதன் பிறகுதான்’ அடிப்படை ஆலோசனைகளுடன் மேக்கப் விவரங்களை பேச துவங்கினார் ரம்யா. ‘ சருமத்திற்கு வெளிப்புறத்தில் போதுமான ஈரப்பதம் அல்லது ஹைட்ரஜன் தேவை இதற்கு எப்படிப்பட்ட மேக்கப் பயன்படுத்தினாலும் ப்ரைமர் பயன்பாடு மிகவும் அவசியம். ப்ரைமர் பயன்படுத்திவிட்டுத் தான் எந்த மேக்கப் ஆனாலும் போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல் பவுண்டேஷன் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். பவுண்டேஷனும் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு விதமாக தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். ஆயில் சருமம் எனில் கிரீம் பவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமம் அல்லது சாதாரண சருமம் எனில் திரவ பவுண்டேஷன் பயன்படுத்துவது நல்லது’ அடுத்து லிப்ஸ்டிக், ஐஷேடோ , காஜல் உள்ளிட்ட புராடெக்டுகளை எப்படித் தேர்வு செய்வது மேலும் தொடர்ந்தார் ரம்யா.

‘கொளுத்தும் வெயிலில் எவ்வளவு விலை அதிகமான காஸ்மெடிக்ஸ் பயன்படுத்தினாலும் அடிக்கும் வெயிலில் ஆளே உருகி விடுகிறோம் என்கையில் காஸ்மெட்டிக்ஸ் எம்மாத்திரம். எனவே பிரைட் நிற சிவப்பு, கருஞ்சிவப்பு, ஸ்மோக்கி ஐஷேடோக்கள் இப்படியான நிறங்களை தவிர்த்துவிட்டு சரும நிறத்திலான பீச், பேய்ஜ் எனப்படும் நியூட் அல்லது வெளிர் நிறங்களை அதிகம் பயன்படுத்தலாம். இவை பார்ப்பதற்கு மேக்கப் போடாதபடியும் இருக்கும். மேலும் நோ மேக்கப் லுக் கொடுக்கும். வெயிலில் உருகி கலைந்தாலும் கூட சருமத்தின் நிறத்தை மாற்றி மேக்கப் வழிந்தது போன்ற தோற்றத்தை கொடுக்காது. பென்சில் காஜால்களைப் பயன்படுத்துவது விரைவில் உருகி சருமத்தில் பரவாது. கலர்பார் போன்ற பிராண்ட் இதில் சிறப்பான ரிசல்ட் கொடுக்கும். அதேபோல் ஐலைனர் சாம்பர் என்னும் பிராண்ட் வாட்டர் ப்ரூப் (water proof) என்பதை தாண்டி ஸ்வெட் ட்ரூப். அதாவது வியர்வை வழிந்தால் கரையாது. நீரில் கரையவில்லை என்றாலும், வியர்வையில் கரைவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே நீங்கள் வாங்கும் ப்ராடக்ட் ஸ்வெட் ப்ரூப் (sweat Proof) ஆக உள்ளதா எனப் பார்த்து வாங்கவும். ஏனெனில் நீருக்கும் வியர்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது’ என்னும் ரம்யா அழகேந்திரன் எப்படிப்பட்ட பிராண்ட் ப்ராடக்டுகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் மேலும் விளக்கினார்.

‘எந்த காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்தினாலும் சரி மேக்கப் போட்டுக்கொள்வதற்கு முன்பு நம்மூர் வெயிலுக்கு முதல் பாதுகாப்பு கவசம் சன்ஸ்கிரீன். ஏதேனும் நல்ல பிராண்டில் குறைந்தது 50 எஸ்.பி.எஃப் (50SPF) உள்ள சன் ஸ்கிரீன் பயன்படுத்திவிட்டு அதற்கு மேல் மேக்கப் ப்ராடக்டுகள் எதுவாயினும் பயன்படுத்தலாம். நான் மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டேன் என்றாலும் கூட சன் ஸ்கிரீன் அவசியம். உடன் கிரீம் மேக்கப் ப்ராடக்டுகளை பயன்படுத்தாமல் பவுடர் ப்ராடக்டுகளை பயன்படுத்தலாம். இதனால் கேக் போன்ற தோற்றம் கொடுக்காது. பனானா பவுடர், பிபி பவுடர் இவைகளை பயன்படுத்த பளிச் தோற்றம் கிடைக்கும். கூடுமானவரை நம் இந்திய ப்ராடக்டுகளான டெர்மா போன்ற ப்ராடக்டுகளை பயன்படுத்தவும். விலையும் குறைவு மேலும் நம்மூர் இந்திய சருமங்களை சோதனைக்குட்படுத்தி நம் நாட்டின் காலநிலைக்கேற்றவாறு ப்ராடக்டுகளை தயாரித்து இருப்பார்கள். மாறாக மேற்கத்திய பிராண்ட் ப்ராடக்டுகளை பயன்படுத்தும்போது அது அவர்களின் காலநிலைக்கு ஏற்றவாறு அதிக குளிர் பிரதேசத்திற்கான காஸ்மெடிக்ஸ்களாக இருக்கும். அவற்றை இங்கே பயன்படுத்தும் போது நம் சருமத்திற்கு ஏற்புடையதாக இருக்காது.

இங்கே டெர்மா, நைகா, ஹிமாலயா, டாஸ்லர் இவைகள் எல்லாம் விலையும் நடுத்தர
வர்க்கத்திற்கு ஏற்றார் போல் குறைவாக இருக்கும் நம் இந்திய கால நிலைக்கும் பொருந்தும். அதேபோல் நாள் முழுக்க மேக்கப்பை பயன்படுத்தி விட்டு வெளியில் சென்று வருவோர் வீட்டிற்கு வந்தவுடன் தாமதிக்காமல் மேக்கப் ரிமூவர் கொண்டு முகத்தை சுத்தம் செய்துவிட்டு முகம் கழுவுவது அல்லது முடிந்தால் குளிரான நீரில் குளித்துவிடுவது நல்லது. ஏதேனும் மாய்ச்சுரைசர், அல்லது சீரம், ஏதேனும் பயன்படுத்த முகச்சருமம் ஓய்வு பெறும். அதுவே வெயிலால் உண்டாகும் கருமை, சருமத்திற்கு அடியில் தங்கிவிடும் வியர்வை அழுக்குகளை நீக்கி புத்துணர்வுடன் வைக்கும். அதேபோல் ஹேர் கலரிங் பயன்படுத்தும் பொழுதும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் காத்திருந்து தலைமுடியை அலசும் விதமான ஹேர் கலர்களை பயன்படுத்தவும். ஐந்து நிமிடத்தில் கலரிங், உடனடியாக டச்சப் இப்படியான ஹேர் கலர்கள் அடிக்கும் வெயிலுக்கு ஏற்கனவே வறண்டு கொண்டிருக்கும் கேஷத்தை மேலும் வறட்சித் தன்மைக்கு உட்படுத்தி நார் போல மாற்றிவிடும். எந்த ஹேர் கலர் பயன்படுத்தினாலும் அன்றைய தினம் அதிகம் தண்ணீர் குடியுங்கள். உடலை குளிர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் மிகவும் அவசியம். முடிந்தால் மாதத்திற்கு இரண்டு முறை வடித்த கஞ்சி, சீயக்காயுடன் தலையை அலசுங்கள். கண்களில் குளிர்ந்த நீரில் அவ்வப்போது கழுவுவது வெள்ளரிக்காய் துண்டுகள் கொண்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது இவைகள் வெயில் காலத்தில் வரும் அரிப்பு, எரிச்சல், வறட்சி, வியர்வை வழிவதால் உண்டாகும் கண் அலர்ஜிகள் இவற்றிலிருந்து கண்களை பாதுகாத்து பிரகாசிக்கச் செய்யும்.
– ஷாலினி நியூட்டன்

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு