பருத்தி ஆடைகளின் பயன்களும் பராமரிக்கும் முறைகளும்!

கோடைகாலம் என்பதையே இன்னும் மிகைப்படுத்திச் சொல்லக்கூடிய மறுபெயர் தேட வேண்டும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் இந்த வருடம் அதிகமாக இருக்கிறது. மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என வானிலை மையங்களும், அரசும் வலியுறுத்தும் அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ள நிலையில் உடைகளிலும் சற்று அக்கறை காட்ட வேண்டியது அவசியம். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பருத்தி ஆடைகள்தான் நமக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வரம். இயற்கையிலிருந்தே இயற்கையை சமாளிக்க நமக்குக் கிடைத்த கொடை இந்த பருத்தி ஆடைகள். எப்படித் தேர்வு செய்ய வேண்டும், இப்போதைய டிரெண்ட் என்ன? எப்படிப் பராமரிக்க வேண்டும் விவரங்களுடன் சொல்கிறார் சரிதா பரத் (போட்டிக் நிறுவனர், ஆன்லைன் மற்றும் நேரடி ஆடைகள் விற்பனையாளர்) ஆர்கானிக் துணிகளை மட்டும் பயன்படுத்தவும்!

கோடையில் பொதுவாகவே பாலிஸ்டர், ஜியார்ஜெட், சின்தடிக், நைலான் உள்ளிட்ட துணிகளைத் தவிர்த்துடுங்க. காரணம் இது நம் உடலுக்கு மட்டுமல்ல சூழலுக்கும் உகந்தது கிடையாது. குறிப்பாக இந்த மெட்டீரியல்களைத் துவைக்கும்போது ஒருவித மைக்ரோ பிளாஸ்டிக் என்னும் கெமிக்கல் வெளியாகும். இவை நிலம், நீர் என சூழலைக் கெடுக்கும் கெமிக்கல்கள். அதேபோல் வெப்பமான காலங்களில் இவைகள் ஒருவித கெமிக்கல் வினைக்கு உட்பட்டு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். மேலும் நைலான் துணிகள் உடலின் வியர்வையுடன் ஒன்றிணைந்து கிட்டத்தட்ட நாள்கணக்கில் போடப்பட்ட அழுக்குத் துணி போல் துர்நாற்றம் வீசுவதையும் கூட உணர்ந்திருப்பீர்கள். ஜீன்ஸ், லெதர், வெல்வெட், உல்லன், இவைகள் எதுவும் கூட கோடைக்கு ஏற்ற மெட்டீரியல்கள் இல்லை. கூடுமானவரை பருத்தி ஆடைகள், லினென், போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் காட்டன்களே கூட இன்னொரு மெட்டீரியலுடன் கலக்கப்பட்ட ரேயான், பட்டு, போன்ற வெரைட்டிகளையும் கூட தவிர்க்கலாம். காட்டன்கள்தான் நம் வெப்பநிலைக்கு கோடைகாலத்தில் சரியாக பொருந்தும் ஆடைகள். காட்டன்களிலும் ஏராளமான உடைகள் வருகின்றன.

பொதுவாக பெண்கள் காட்டன் எனில் தவிர்ப்பதற்கு ஒரே காரணம் மற்ற மெட்டீரியல்களில் இருப்பது போல் இதில் பெரிதாக டிசைன்கள் கிடையாது என்னும் மாயைதான். லெஹெங்கா முதல், சமீபத்திய டிரெண்டிங் அலியா கட் சல்வார்கள் வரை இன்று காட்டன்களில் வரத் துவங்கிவிட்டன. டோபி காட்டன், மல் மல் காட்டன், சாதா காட்டன், தென்னக காட்டன், சாஃப்ட் மல் காட்டன் என காட்டன்களில் சில வகைகள் உள்ளன. அவற்றில் டோபி காட்டன் 100% பருத்தி நூல் கொண்டு உருவாக்கப்பட்டும் மெட்டீரியல்கள். மேலும் இவற்றில் பயன்படுத்தப்படும் பிரிண்ட்களும் கூட கைகளால் போடப்பட்ட தாவர அச்சுகளாக அல்லது, எம்பிராய்டரியாக மட்டுமே இருக்கும். லெஹெங்காக்கள் இன்று காட்டன்களில் அதிகம் வரத் துவங்கிவிட்டன. மேலும் கோட் ஸ்டைல், பென்சில் ஸ்கர்ட் என காட்டன்களில் நிறைய உடைகள் உள்ளன. எனவே காட்டன்களை அதிகமாக பயன்படுத்தினால் நல்லது.

தரமான உடைகள் தேர்வு அவசியம்

நல்ல பிராண்டுகளில் விலை அதிகம் என யோசிக்காமல் உடைகள் தேர்வு செய்வதும் அவசியம். குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் என்று ரூ.200க்கு கூட சல்வார்கள் கொடுக்கத் துவங்கினார்களோ அன்றே தனித்துவமும், தரமும் குறைந்துவிட்டது. விலைக் குறைவு எனில் தரமும் குறைவு என பொதுமைப்படுத்தியும் சொல்லிவிட முடியாது. எனினும் காட்டன் போன்ற மெட்டீரியல்களில் சல்வார்கள் , புடவைகள் வாங்கும் போது ரூ. 700 குறைந்தது செலவிடுவதால் பராமரிப்பு வேலைகளும், செலவுகளும் கூட எதிர்காலத்தில் குறையும். ரூ. 200க்கு வாங்கிய காலணிகளுக்கும் ரூ. 1000க்கு வாங்கிய காலணிகளுக்கு என்ன வித்யாசமோ அதேதான். தரமும், உழைக்கும் காலமும் அதிகரிக்கும்.

காட்டன் பராமரிப்பு

காட்டன் பயன்படுத்தும் போது உள்ளாடைகளும் நல்ல பிராண்டில் வாங்குவது நல்லது. அப்போதுதான் வியர்வை உறியப்பட்டு சருமத்தில் ஒட்டிக்கொள்ளாது. இல்லையேல் வெள்ளை, வெளிர் நிறக் காட்டன் உடைகள் உடலுடன் ஒட்டிக்கொள்ளும் போது சரும வெளியே தெரியும். மேலும் காட்டன் மெட்டீரியல்களில் துளைகள் பெரிதாக இருப்பதாலும் உள்ளாடைகள் அவசியம். போலவே முதல் இரண்டு வாஷ்கள் கைகளால் மென்மையாக துவைத்துவிட்டு பின்னர் மெஷின்களில் துவைப்பதால் அதன் தன்மை பாதுக்காக்கப்படும். தரமான காட்டன்கள் எனில் அதிகம் பராமரிப்பே தேவைப்படாது. நன்கு துவைத்து மடித்து வைத்தாலே நீண்ட நாட்கள் உழைக்கும். மேலும் நாள் முழுக்க அலுவலகம் செல்லும் பெண்கள் காட்டன் துணிகள் , சேலைகள், சல்வர் எனப் பயன்படுத்தும் போது குளிர்ச்சியாகவும், உடுத்திக்கொள்ள வசதியாகவும் இருக்கும். குறிப்பாக நைலான், சின்தடிக் உள்ளிட்டவை கெமிக்கல் ரியாக்‌ஷன்களுக்கு உட்பட்டு வேர்க்குரு, சரும அலர்ஜிகளைக் கூட கொடுக்கும் என்பதால் காட்டன், லினென் இவற்றையே தேர்வு செய்வது நல்லது. இன்று மல் மல் காட்டன் சேலைகளுக்கு மேட்சிங்காக கலம்கரி பிளவுஸ்கள், தாவர அச்சுகள் பயன்படுத்திய பிளவுஸ்கள், கைத்தறிப் புடவைகள் எல்லாம் டிரெண்டியாக கல்லூரி பெண்களுக்கே உகந்தவாறு வரத் துவங்கிவிட்டன. நம்மூர் வெயிலுக்கு சிறந்த சாய்ஸ் காட்டன் உடைகள்தான்.
– ஷாலினி நியூட்டன்

 

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு