இலங்கையில் ₹3 கோடி போதை பொருளுடன் பாம்பன் மதபோதகர் உட்பட 6 பேர் கைது

ராமேஸ்வரம்: இலங்கையில் ரூ.3 கோடி போதைப்பொருளுடன் பாம்பனை சேர்ந்த மதபோதகர் உட்பட 6 பேர் கைதாயினர். மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து கடத்தலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.இலங்கை கல்பிட்டி பகுதியில் இருந்து நேற்று முன்தினம் புத்தளத்திற்கு சென்ற பஸ்சில் 3 கிலோ எடையுள்ள ரூ.3 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமின் என்ற ஹெராயின் போதைப்பொருளை அந்நாட்டு புலனாய்வு துறையினர், போலீசார் கண்டுபிடித்தனர். பஸ்சில் கொண்டு சென்ற நபரிடம் விசாரித்ததில், பஸ்சின் பின்னால் காரில் வந்த ராமேஸ்வரம் அருகே பாம்பனை சேர்ந்த ஆரோக்கிய பெர்லிங்டன் உட்பட 4 பேரையும், தலைமன்னார் அருகே பேசாளையை சேர்ந்த ஏஜென்ட் கஜேந்திரன் உள்ளிட்ட 2 பேரையும் இலங்கை போலீசார் கைது செய்தனர்.

கைதான 6 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில், ஆரோக்கிய பெர்லிங்டன் பாம்பனை சேர்ந்தவர், தற்போது தங்கச்சிமடம்புதூர் பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். மத போதகராக பயிற்சி பெற்ற இவர், வருவாய் இல்லாததால் கடத்தல் தொழிலில் இறங்கியுள்ளார். முதலில் பாம்பனில் இருந்து படகில் பொருட்களை இலங்கைக்கு கடத்தியுள்ளார்.
இவரது தம்பி ஆரோக்கிய வினோத்தும் உதவியாக இருந்துள்ளார். இலங்கையில் உள்ள கடத்தல்காரர்களின் நெட்வொர்க் நன்றாக அமைந்ததும், விமானம் மூலம் அடிக்கடி இலங்கை சென்று, கடத்தல் தொடர்பான வேலைகளை செய்து வந்துள்ளார் என தெரிந்தது.

பாம்பனில் இருந்து 2 நாட்களுக்கு முன் படகில் போதைப்பொருட்களை கடத்தி சென்ற இவரது கூட்டாளிகள், மன்னார் வளைகுடா நடுக்கடலில் காத்திருந்த இலங்கை படகிற்கு, போதைப்பொருட்களை மாற்றி விட்டு கரை திரும்பியுள்ளனர். இந்த கடத்தலில் ஈடுபட்டு, தலைமறைவாக உள்ள ஆரோக்கிய வினோத் மற்றும் ஒருவரை புலனாய்வு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்

ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து பணம் பறித்த ஐ.டி. ஊழியர் கைது!