மகனுக்கு கொடுத்த முக்கியத்துவம் அப்பாவுக்கு கொடுக்கல என குமுறிய மக்கள் பிரதிநிதி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைகட்சியில, எலக்‌ஷன்ல நின்னு சேத்து வெச்ச சொத்தை ஏன் அழிக்கணும்னு பேசிக்கிறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில, கிரிவலம் மாவட்டம் ஆறு அணி தொகுதியில, மாஜி கோயில் மந்திரி, பெயரில் மணியை கொண்ட மாஜி மந்திரி, தூசியை அடைமொழியாக கொண்ட டிஸ்ட்ரிக் செக்ரட்ரின்னு எல்லாம் சும்மா பேருக்குத்தான் விருப்பமனு கொடுத்திருக்காங்களாம். ஆனா அதுக்கான அடுத்தகட்ட எந்த முயற்சியும் எடுக்கவே இல்லையாம். நமக்கு சட்டமன்ற தொகுதியே போதும், நாடாளும் மன்றத்தோட தொகுதி எல்லாம் தேவையில்லை. தேவையில்லாம எதுக்கு சேத்து வெச்ச சொத்தை அழிக்குறதுன்னு நினைச்சிக்கிட்டு, யாராவது நிற்கட்டும், அவருக்கு வேலை பார்ப்போம்னு இருக்குறாங்களாம். இப்படி இலைகட்சியில, கட்சியோட முன்னோடிங்க, எந்த முனைப்பும் காட்டாததால, தொண்டருங்க இந்த கட்சியிலயே இருக்கலாமா இல்ல வேற கட்சிக்கு மாறிடலாமான்னு யோசிக்க தொடங்கியிருக்காங்கன்னு, ரத்தத்தின் ரத்தங்களே பரவலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடைக்கோடி மக்களவை தொகுதியில் இலை கட்சியில் வேட்பாளருக்கே பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பசை உள்ள ஒருவரை அமுக்கி அவரே வேட்பாளர் என்று அறிவித்து தேர்தல் பணிகளை கட்சி நடத்தி வந்தது. ஒரு கட்டத்தில் தான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை, சட்டமன்ற தேர்தலில் சீட் கொடுங்கள் போதும் என்று கூறி தகவல்களை கசியவிட்டு அந்த பசையானவர் வெளிநாடு சென்று விட்டாராம். அதன் பின்னர் ‘உங்களை விட்டால் வேறு ஆள் இல்லை’ என்று கூறி அவரையே வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கு பசையானவரும் சம்மதமும் தெரிவித்துவிட்டாராம். இதனால் இலை கட்சியில் முக்கிய நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இவரை விட்டால் வேறு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற மெகா கேள்வி அவர்களுக்கு முன்பு இருந்ததே இதற்கு காரணம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நெற்களஞ்சிய தொகுதியில் மகனை களத்தில் இறக்க மாஜி அமைச்சர் முடிவு பண்ணியிருக்காராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் யாருடன் கூட்டணி என முடிவாகததால் டெல்டா மாவட்டத்தில் கடலோரம், நெற்களஞ்சியம், மயில் நடனமாடிய உள்ளிட்ட தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என முடிவு எடுக்க முடியாமல் தலைமை திணறி வருகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மனுநீதி சோழன் மாவட்ட மாஜி அமைச்சரான கர்மவீரர், தனது மகனான டாக்டரை நெற்களஞ்சிய தொகுதியில் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளார். இதற்கான திரைமறைவான வேலைகள் அனைத்தும் கச்சிதமாக முடிந்ததால் தலைமைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சேலத்துக்காரர் முடிவுக்காக மாஜி அமைச்சர் காத்திருக்கிறராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மகனுக்கு கொடுத்த முக்கியத்துவம் அப்பாவுக்கு கொடுக்கல போல..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் நேற்று நடந்த தாமரை கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம், மாம்பழ நிர்வாகிகளின் மனசை ரொம்பவே காயப்படுத்தியதாம். இரவோடு இரவாக தோட்டத்தில் வைத்து கூட்டணி டீலிங் முடிஞ்ச நிலையில் டாக்டரும், சன்னும் பிரசார மேடையில் ஏறினாங்க. அவர்களை பிரதமர் கட்டிப்புடிச்சு முத்தமழை பொழிஞ்சு ஆகா,ஓகோன்னு பாராட்டினாரு. கட்சியின் தலைவரான சன்னுக்கு மட்டும் மேடையில் பேச சில நிமிடம் வாய்ப்பு வழங்கப்பட்டதாம். அதேநேரத்தில் டாக்டரு கண்டிப்பாக மேடையில் பேசுவாரு. அந்த வாய்ப்பை கொடுத்து டாக்டரை தாமரை பார்ட்டிங்க பெருமைப்படுத்துவாங்க என்று நிர்வாகிங்க ரொம்பவும் குஷியில் இருந்தாங்களாம். ஆனால் கடைசிவரை டாக்டரை பேசுவதற்கு அழைக்கவே இல்லையாம். ஏற்கனவே ஒத்துவராத கூட்டணியில்தான் இணைஞ்சிருக்கோம். இந்தச்சூழலில் டாக்டரின் பேச்சு, எங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் என்று நினைச்சோம். ஆனால் அதற்கு வழியில்லாமல் பண்ணிட்டாங்க தாமரைக்காரங்க என்று வெளிப்படையாக குமுறிச்சென்றாராம் ஒரு மக்கள் பிரதிநிதி. இப்பவே இந்த குமுறல் என்றால் இன்னும் 30 நாளில் என்னென்ன நடக்குமோ என்று கலாய்ச்சாங்களாம் அருகில் இருந்து கேட்ட பப்ளிக்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பவர்புல் பெண்மணியின் ராஜினாமாவை கொண்டாடுகிறார்களாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவர்புல் பெண்மணியாக இசை பொறுப்பேற்றார். முதல்வர் புல்லட்சாமியை விட அதிகமாக அனைத்து அரசு விழாக்கள் மற்றும் பேட்டிகளை ஊடகம் மத்தியில் கொடுத்து வந்தார். அடிக்கடி நிர்வாக ரீதியிலான தனக்கு முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தினார். இணக்கமாக செயல்படுவதாக புல்லட்சாமியும், இசையும் வெளியே பேசி வந்தாலும், கோப்புகளின் தன்மையை பொறுத்து கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அவ்வப்போது முட்டி மோதல் இருவருக்கும் தொடர்ந்தது. புதுச்சேரி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தன்பங்குதான் அதிகம் என்பதை இசை அடிக்கடி சுட்டிக்காட்டி தனது பங்குக்கு அதிமாக ஸ்கோர் செய்து வந்தார். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, காஸ் மானிய திட்டம் ஆகியவற்றை தன்னுடைய முயற்சி என ஊர் முழுக்க இசை தம்பட்டம் அடித்து வந்ததை லோக்கலில் அரசியல் செய்யும் புல்லட்சாமியால் ஏற்று கொள்ள முடியவில்லை. கூட்டணி ஆட்சியான பாஜ மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரு தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்போது, எல்லாவற்றுக்கும் நானே காரணம் என்று கூறுவதை பாஜ எம்எல்ஏக்களால்கூட ஏற்கமுடியவில்லை. இந்நிலையில் ராஜினாமா செய்துவிட்டு புதுவையில் இருந்து இசை கிளம்பியதை பட்டாசு வைத்து வெடிக்காத குறையாக பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாடினர்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு

முக்கொம்பு கொள்ளிடத்தில் உடைந்த அணைக்கு அருகில் ரூ.7 கோடியில் கான்கிரீட் தளம்: பணிகள் தீவிரம்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!