ராமரை அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பொய் குற்றச்சாட்டு : தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்!!

டெல்லி : ராமரை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டதாக தேர்தல் ஆதாயத்திற்காக பொய்யாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஏப்ரல் 7ம் தேதி பீகார் பிரச்சாரத்திலும் ஏப்ரல் 9ம் தேதி உத்தரப் பிரதேச பொதுக் கூட்டத்திலும் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் ராமர் மற்றும் ராமர் கோவிலுக்கு எதிரானவர்கள் என்றும் எதிர்க்கட்சியினர் ராமரை அவமதித்துவிட்டனர் என்றும் தங்களைபற்றி அவதூறு பரப்பும் வகையில், விமர்சித்து இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இது போன்ற பொய்யான கருத்துக்களை மோடி முன்வைத்தும் ராமர் கோவில் மற்றும் கடவுள் ராமரின் பெயரை பயன்படுத்தியும் பாஜகவுக்கு ஆதாயம் பெற முயற்சி செய்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும் என்று சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் தேர்தல் பிரச்சாரத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில், அடிப்படையற்ற பேச்சுகளை வெளிப்படுத்துவது மிகவும் துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் சூழல் மேலும் மோசமாவதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக தலையிட்டு பிரதமர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யெச்சூரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

வராக நதியில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

தலைமை காவலர் பணியிடை நீக்கம்

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்