அண்ணியை அடித்து கொன்று ஆழ்குழாய் கிணற்றில் புதைப்பு: கைதான கொழுந்தன் பரபரப்பு வாக்குமூலம்


புதுக்கோட்டை: அண்ணியை கொன்று ஆழ்குழாய் கிணற்றில் புதைத்தது ஏன் என கைதான கொழுந்தன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த ஆவூர் அருகே உள்ள ஆம்பூர்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி சின்னம்மாள். இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன்கள் சேவியர்(42), ராயப்பன்(38). தந்தை ஆரோக்கியசாமி பெயரில் இருந்த சொத்துக்களை சகோதரர்கள் சமமாக பிரித்து தங்களது பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டனர். சேவியரின் மனைவி ஆரோக்கியமேரி(37). இவர்களுக்கு குழந்தை இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன் சேவியர் இறந்து விட்டார். ராயப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆரோக்கியமேரி கணவர் சேவியர் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார்.

இதுதொடர்பாக ராயப்பனுக்கும், ஆரோக்கியமேரிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் மாலை ஆரோக்கிய மேரி வழக்கம்போல் தோட்டத்துக்கு சென்றார். மாலை 6 மணி அளவில் அவரது அண்ணன் சகாயராஜ் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்திலிருந்து செல்போனில் அவரிடம் பேசியுள்ளார். பின்னர் இரவு 7 மணி அளவில் அவர் தங்கைக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. பலமுறை முயன்றும் பேச முடியாததால் ஆரோக்கியமேரியின் வீட்டின் அருகே உள்ளவர்களுக்கு போன் செய்து வயலுக்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார். பின்னர் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு ஆரோக்கியமேரி இல்லை. இதனால் சந்தேகமடைந்த சகாயராஜ் உறவினர்களுடன் ஆம்பூர்பட்டிக்கு வந்து வயல் பகுதியில் உள்ள கிணறு, வயல்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாத்தூர் போலீசில் அவர் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது உறவினர்கள் ஆரோக்கியமேரியின் வயல் அருகே காட்டுப்பகுதியில் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் புதிதாக மண் போட்டு மூடி இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாத்தூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விராலிமலை தாசில்தார் கருப்பையா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆழ்குழாய் கிணற்றை தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு ஆரோக்கியமேரியின் உடல் குழாயில் சொருகி இருந்தது. பின்னர் உடலை போலீசார் குழியில் இருந்து வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ராயப்பன் அண்ணி ஆரோக்கியமேரியை ெகாலை செய்து உடலை ஆழ்குழாய் கிணற்றில் புதைத்தது ெதரியவந்தது. இதையடுத்து தலைமறைவான ராயப்பனை போலீசார் தேடினர்.

ராயப்பனின் தாய் சின்னம்மாள், மனைவி லிவிட்டியாமேரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மணப்பாறையில் பதுங்கியிருந்த ராயப்பனை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: ஆரோக்கியமேரிக்கும், ராயப்பனுக்கும் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது உனக்கு தான் குழந்தை இல்லையே, எதற்கு என் அண்ணன் பெயரில் இருந்த நிலத்தை உன் பெயருக்கு மாற்றினாய். அதனால் உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வயலில் இருந்த ஆரோக்கிய மேரியை, ராயப்பன் அடித்து கொலை செய்து உடலை அவரது டிராக்டரில் வைத்து எடுத்து வந்து அங்கிருந்து 100 மீட்டர் தூரமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் சொருகி மண்ணை போட்டு மூடி விட்டு சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் ராயப்பனை போலீசார் இன்று கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Related posts

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை