ஊட்டியில் உறைபனி பொழிவு அதிகரிப்பு: ‘2’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு


ஊட்டி: உறைபனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில் ஊட்டியில் இன்று குறைந்தபட்சமாக வெப்பநிலை ‘2’ டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. நீலகிரியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நீர் பனி பொழிவு காணப்பட்டது. இம்மாதம் துவக்கம் முதல் உறைப்பனி விழத் துவங்கியது. பனியில் இருந்து பாதுகாக்க சில இடங்களில் தேயிலை செடிகளை கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது கோத்தகிரி செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு காலையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக உறைபனி தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று காலை அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. உறைபனி பொழிவால் தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், அப்பர்பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் 1 டிகிரி செல்சியசிற்கு சென்றது. நேற்று இரவு பனி கொட்டியதால், ஊட்டி குதிரை பந்தய மைதானம் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்தது. ஊட்டியில் கடும் உறைபனி விழுந்த நிலையில், குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். பனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் அதிகமாக காணப்படுகிறது.

Related posts

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை