சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் திண்ணப்பனுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் மற்றும் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நேற்று சிங்கப்பூர் வாழ் தமிழர், தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் உடன் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார்.

தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அதிராம்பட்டினம் கல்லூரி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூரில் தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அங்கு தமிழ்மொழிப் பாடத்திட்டக்குழு, பாடநூல் உருவாக்கம் ஆகியவற்றிலும், கல்வி அமைச்சகத்தின் குழுக்களிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இவர் ஆற்றிய தமிழ்ச்சேவைக்கு பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களின் சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் எஸ்.ஆர்.நாதனுக்கு தமிழ் பயிற்றுவித்துள்ளார். 88 வயதான முனைவர் சுப.திண்ணப்பன், தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார்.

தமிழக முதல்வரை சந்தித்தப் பிறகு, முனைவர் சுப.திண்ணப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரால் தான் வந்தது. திருவாரூரில் நான் படித்துக் கொண்டு இருந்தபோது தான் முதன்முதலில் கலைஞர் பேச்சைக் கேட்டேன். அப்போது தான் எனக்கு தமிழ் உணர்வு வந்தது, தமிழ் ஆசிரியராக வேண்டும், தமிழ் பேராசிரியராக வேண்டும் என்ற வேட்கை வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, பெண்கள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதுபோல மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தி வருவது ஆகியவை பாராட்டுக்குரியவை. கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை தனது முழு மூச்சாக கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இப்போது தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிங்கப்பூர் வந்துள்ளார். நேற்று சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றியும், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை பாராட்டியதும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

* முதல்வர் மு.க ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: தமிழ்ப் போற்றும் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பனை சந்தித்தேன். என்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன் – முதல் பாகம்’ நூலினை வழங்கி, அவரை வரவேற்றுப் போற்றினேன். தமிழும் தமிழர் நலமும் காக்கும் நமது அரசின் பணிகளைப் பாராட்டினார். தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குக் காட்சிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பொருநை அருங்காட்சியகமும் சிறப்புற அமைந்திட வாழ்த்தினார்.சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதில் சிலவற்றை நமது அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருவதைத் தெரிவித்து, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம் என உறுதியளித்தேன். முத்தமிழறிஞர் கலைஞரின் மகனான நான் சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவேன் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். அதே நம்பிக்கையைத்தான் நீங்களும் என் மீது கொண்டிருக்கிறீர்கள். அதனைக் காக்கும் என் பணிதான் தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றுவது என்று நெஞ்சுக்குள் நினைந்து மகிழ்ந்தேன்.

Related posts

மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி

ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா