பல மாநில மக்களிடம் ‘கிரிப்டோ கரன்சி’ மூலம் ரூ.2,000 கோடி மோசடி; முக்கிய குற்றவாளி கைது:ரூ.16 லட்சம் ரொக்கம், 12 சவரன் நகை, சொகுசு கார் பறிமுதல்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து, வாடிக்கையாளர்களிடம் ரூ.2000 கோடி வரையில் மோசடி செய்த முக்கிய குற்றவாளியை, போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.அவரிடம் இருந்து ரூ.16 லட்சம் ரொக்கம் மற்றும் 12 சவரன் நகை, சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஏ.கே.டிரேடர்ஸ் என்ற நிறுவனம் துவங்கி அதன் மூலமாக யூனிசெல் காயின் என்கிற திட்டத்தை தொடங்கினார்.

அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளர் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் முதலீடு செய்தால், வாரம் ரூ.93 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து வழங்கினர். இதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். இப்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பல ஆயிரம் நபர்களிடம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரையிலும் முதலீடு பெற்று மோசடி செய்து உள்ளனர். பணத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி.யிடம் நேரில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து ஏ.கே. டிரேடர்ஸ் உரிமையாளர் அருண்குமார் மற்றும் முகவர்கள் நந்தகுமார், ஷங்கர், சீனிவாசன், பிரகாஷ், வேலன் ஆகிய 6 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இதில் சீனிவாசன், பிரகாஷ் கைது செய்யப்பட்ட நிலையில், ஷங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவாக இருந்த அருண்குமார், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அருகே உள்ள வேப்பனஹள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வந்திருப்பது போலீசாருக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய வேப்பனஹள்ளிக்கு விரைந்தனர்.இந்த தகவலை அறிந்துகொண்டு அங்கிருந்து தப்பிச்சென்ற அருண்குமாரை, பாகலூர் போலீஸ் உதவியுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.16 லட்சம் ரொக்கம், 12 சவரன் நகை மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகின்றன!