ராகுலின் 2 ஆண்டு சிறைக்கு இடைக்கால தடை விதிக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு: ஜூனில் இறுதி தீர்ப்பு

அகமதாபாத்: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் ஜூன் மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கடந்த 2019ல் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயரை வைத்திருப்பது எப்படி?” என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜ எம்எல்ஏ பூர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. தண்டனைக்கு தடை விதிக்க சூரத் மாவட்ட நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

இந்நிலையில், சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று நடந்தது. ராகுல் தரப்பில் ஆஜரான வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ‘‘மனுதாரர் தவறு செய்ததாக நீதிமன்றம் முடிவு செய்திருந்தால் கூட அவருக்கு அதிகபட்சம் 3 அல்லது 6 மாதம் சிறை தண்டனையே விதிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, இறுதி தீர்ப்பு வழங்கும் முன்பாக அவரது தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு எதிர்மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தண்டனைக்கு இடைக்கால தடை பெற ராகுல் தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை என கூறினார். இரு தரப்பிலும் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஹேமந்த் பிரச்சக், ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், கோடைகால விடுமுறைக்குப் பின்னர் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். குஜராத் உயர் நீதிமன்றம் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 5ம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!