நாடு முழுவதும் பொதுத்துறை, தனியார் வங்கிகள் மூலம் 6 ஆண்டில் ₹11.17 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி: மீட்பு விகிதம் 14 சதவீதத்தை தாண்டாததால் நிதியமைச்சகம் கவலை

புதுடெல்லி: நாடு முழுவதும் பொதுத்துறை, தனியார் வங்கிகள் மூலம் 6 ஆண்டில் ₹11.17 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கடன்களுக்கான மீட்பு விகிதம் 14 சதவீதத்தை தாண்டாததால் ஒன்றிய நிதியமைச்சகம் கவலையடைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதலின்படி வங்கிகள் தங்கள் இருப்புநிலை மேம்படுத்தவும், வரிச் சலுகைகளைப் பெறவும், மூலதனத்தின் மேலாண்மைக்காகவும், குறிப்பிட்ட கடன்களை தள்ளுபடி செய்கின்றன. இந்த தள்ளுபடி செயல்முறை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கிகளின் வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது.

செயல்படாத கடன்கள் (என்பிஏ) தள்ளுபடி செய்யப்படும் போது வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து அவை நீக்கப்படும். இவற்றில் 4 ஆண்டுகளுக்கும் மேலான கடன்களும் அடங்கும். இவ்வாறு செய்யப்படுவதால், வங்கிகளின் இருப்புநிலை பலத்துடன் இருக்கும் என்கின்றனர். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 6 ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் ரூ.11.17 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. அதாவது பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த கடன்கள் ரூ. 8,16,421 கோடியும், தனியார் மற்றும் பிற வங்கிகள் தள்ளுபடி செய்த கடன்களின் மதிப்பு ரூ.3,01,462 கோடி என்றும் ஆர்பிஐ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த கடன்களின் மீட்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் ஒன்றிய நிதியமைச்சகம் கவலை கொண்டுள்ளது.

கடந்த 5 நிதியாண்டுகளில் நாட்டின் பொதுத்துறை வங்கிகள் ரூ.7.34 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இந்த தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மீட்கும் விகிதம் வெறும் 14 சதவீதமாக உள்ளது. அதனால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை மீட்கும் விகிதத்தை அதிகரிக்கும் திட்டங்களை ஒன்றிய நிதியமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் கணக்குகளின் மீட்பு விகிதம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, பொதுத்துறை வங்கிகள் மீட்பு விகிதத்தை 40 சதவீதம் அளவிற்கு உயர்த்த வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது கடந்த 2022ம் ஆண்டு மார்ச் வரையிலான ஐந்து ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த ரூ.7.34 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களில் ரூ.1.03 லட்சம் கோடி மட்டுமே திரும்பப் பெற முடிந்தது. இதன் மூலம், பொதுத்துறை வங்கிகளின் நிகர கடன் தொகை ரூ.6.31 லட்சம் கோடியை எட்டியது.

அதனால் நிதிச் சேவைகள் துறையின் சார்பில், பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளின் கூட்டத்தை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது பல்வேறு நீதிமன்றங்கள், கடன் மீட்பு தீர்ப்பாயம் (டிஆர்டி) மற்றும் கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (டிஆர்ஏடி) ஆகியவற்றில் நிலுவையில் உள்ள ரைட் ஆப் கணக்குகள் தொடர்பான வழக்குகள் மதிப்பாய்வு செய்யப்படும். பொதுத்துறை வங்கிகளால் அதிகளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பெரிய நிறுவன கணக்குகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்படும். கடன் தள்ளுபடி விஷயத்தில், செயல்படாத சொத்துக்களில் இருந்து மீட்பு விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து 2 பஸ்கள் மோதி மருத்துவர் உள்பட 4 பேர் பலி: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பொது விநியோகத் திட்டப் பொருட்களை நகர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவான அறிவுரை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்