பண ஆசைகாட்டி சிறுநீரக மோசடி வழக்கில் டாக்டர் உள்பட 6 பேர் கைது: மேலும் 2 டாக்டர்களுக்கு வலை

திருமலை: பண ஆசை காட்டி சிறுநீரக மோடியில் ஈடுபட்ட டாக்டர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த மதுரவாடா வம்பே காலனியை சேர்ந்தவர் டிரைவர் வினய்குமார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சீனு, ஆட்டோ டிரைவர். இருவரும் நண்பர்கள். இந்நிலையில் சீனு விபத்தில் சிக்கி காயமடைந்து வீட்டில் இருந்தார். அவரை பார்க்க வினய்குமார் சென்றார். அப்போது அங்கிருந்த சீனு, அவரது மனைவி கொண்டம்மா, காமராஜு மற்றும் எலினா ஆகியோர் வினய்குமாரிடம் சிறுநீரகம் தானமாக வழங்கினால் ₹8.50 லட்சம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

இதனால் வினய்குமார், தனது சிறுநீரகத்தை தானம் செய்ய ஒப்புக்கொண்டார். அதன்படி அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தனர். இந்நிலையில் வினய்குமாருக்கு அவரது பெற்றோர் கொடுத்த நெருக்கடியால் தனது முடிவை மாற்றிக்கொண்டு சீனுவிடம் தெரிவித்தார். அதற்கு சீனு, அவரது மனைவி உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டபடி சிறுநீரகத்தை கொடுத்து விடு, இல்லையென்றால் மருத்துவ பரிசோதனை செய்த ₹60 ஆயிரம் செலுத்த வேண்டும். அவ்வாறு தராவிட்டால் உங்கள் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுப்போம் என மிரட்டியுள்ளனர். இதனால் சிறுநீரகம் தானம் செய்ய வினய்குமார் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில், வினய்குமாரிடம் இருந்து திருமலை மருத்துவமனை மருத்துவர் பரமேஸ்வரராவ், பெந்துருத்தியில் உள்ள 2 டாக்டர்கள் உதவியுடன் சிறுநீரகம் அகற்றப்பட்டது. பின்னர் சீனு கும்பல் தாங்கள் கூறியபடி ₹8.5 லட்சத்திற்கு பதிலாக ₹5 லட்சம் தருவதாக வீடியோ பதிவு செய்து கொண்டு அதில் ₹2.5 லட்சம் மட்டுமே வினய்குமாருக்கு கொடுத்து மீதி பணத்தை ஏமாற்றியுள்ளனர். இந்நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத வினய்குமார், பி.எம்.பாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர் கடப்பாவை சேர்ந்த நர்லா வெங்கடேஷ். இவர், 2019ல் சிறுநீரக மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் தொடர்ந்து சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு பணத்தை மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் எலினா, காமராஜு, சீனு, கொண்டம்மா, சேகர், டாக்டர் பரமேஸ்வரராவ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அறுவை சிகிச்சை செய்த 2 டாக்டர்கள் மற்றும் முக்கிய குற்றவாளி வெங்கடேஸ்வர ராவ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் பகுதியில், ரெமல் புயல் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு!

மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரக்கூடாது: செல்வப்பெருந்தகை பேட்டி

சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி: பிளக்ஸ் போர்டால் பரபரப்பு