சரியான லாபம் தரும் சாமந்தி!

2 ஏக்கர்தான். அதைப் பகுதி பகுதியாக பிரித்து பயிர் செய்து வருகிறார் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜன். எந்தப் பருவத்துக்கு என்ன பயிர் செய்யலாம் என திட்டமிட்டு சாகுபடியில் இறங்கும் இவர் ஒவ்வொன்றிலும் வெற்றிக்கொடி நாட்டி விடுகிறார். சிறுவயதுதான், ஆனால் விவசாயத்தில் நல்ல அனுபவம் பெற்றிருக்கிறார். இப்போது அரை ஏக்கரில் அவர் செய்திருக்கும் சாமந்திப்பூ சாகுபடியே அதற்கு சாட்சி.பரங்கிப்பேட்டை மீன்பிடி துறைமுகம், கரிக்குப்பம் அனல் மின் நிலையம், புதுச்சத்திரம் ரயில் நிலையம் என பல முக்கிய இடங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது பஞ்சங்குப்பம் கிராமம். புதுச்சத்திரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் சாலையின் இருபுறங்களிலும் எப்போதும் விவசாயம் செழித்திருக்கும். இப்பகுதியில் நீர்வளம் குறைவுதான். இருக்கும் நீரைக்கொண்டே சிறப்பாக பயிர் செய்கிறார்கள். இந்தச் சாலையின் இடையில் வரும் ரயில் தண்டவாளத்தைக் கடந்து இடதுபுறம் பிரியும் ஒரு கிளைச்சாலையில் பயணித்தபோது அருள்ராஜனின் சாமந்திந்தோட்டத்தைக் கண்டோம். மஞ்சள் வண்ணங்களில் மலர்ந்து சிரித்த பூக்கள் நம்மை வரவேற்பது போல் இருந்தது. பூக்கள் அறுவடையில் தனது தாயார் மற்றும் சகோதரி மகனுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த அருள்ராஜனிடம் பேசினோம்.

“ ப்ளஸ் 2 வரைக்கும்தான் ணே படிச்சிருக்கேன். அதுக்கு மேல படிக்க முடியல. விவசாயத்துல இறங்கிட்டேன். சின்ன வயசுல இருந்து அப்பா, அம்மா கூட விவசாயப் பணிகளுக்கு உதவி பண்ணுவேன். இப்போ அவுங்களோட உதவியோட நான் முழு நேரமா விவசாயத்தைக் கவனிச்சுக்கிறேன். எங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில 1 ஏக்கருல மல்லாட்டை (மணிலா) போட்டுருக்கோம். அரை ஏக்கருல தர்பூசணியும், அரை ஏக்கருல சாமந்தியும் போட்டுருக்கோம். மற்ற பயிர்கள்ல வருமானம் முன்ன பின்ன இருந்தாலும், சாமந்தில மட்டும் எப்பவும் நல்லா இருக்கும்’’ என சாமந்தி சாகுபடியின் பெருமையோடு பேச ஆரம்பித்த அருள்ராஜனிடம், சாமந்தி சாகுபடி குறித்து கேட்டோம். “ சாமந்தி சாகுபடி செய்ய முதல்ல தரமான கன்றுகளை வாங்கணும். நாங்க அதுக்காக ஓசூர்ல இருந்து கன்றுகளை வாங்கிட்டு வரோம். இதை சாகுபடி செய்றதுக்கு முதல்ல மாட்டுச்சாணத்தை நிலத்துல கொட்டி நல்லா 2 முறை உழவு ஓட்டுவோம். அதுக்கப்புறம் செம்மறி ஆட்டு எருவை வாங்கி வந்து கொட்டி சாமந்தியை நடவு செய்வோம். ஓசூர்ல செடியை வாங்கிட்டு வரும்போது அதுங்க 15 நாள் வயதுடைய செடிகளா இருக்கும். ஒவ்வொரு செடியும் தலா 2 ரூபாய்ங்குற கணக்குல 2 ஆயிரம் செடி வாங்கிட்டு வந்தோம்.

இந்த நிலத்துல சொட்டுநீர்ப்பாசன அமைப்பு வச்சிருக்கோம். அதுக்கு தகுந்தபடி செடிகளை நடவு பண்ணுவோம். 2 அடிக்கு ஒரு செடிங்குற கணக்குலதான் நடவு பண்ணுவோம். 2 அடிக்கு இடையில அரை அடி ஆழத்திற்கு சின்னதா குழியெடுத்து, அதுல செடிகளை நடுவோம். வரிசைக்கு வரிசை 4 அடி இடைவெளி விடுவோம். அப்போதான் தாராளமா செடிகளுக்கு நடுவுல நின்னு பூக்களைப் பறிக்க முடியும். செடிகளை நட்டதில் இருந்து சொட்டுநீர் மூலமா தினமும் 2 வேளைக்கு பாசனம் செய்வோம். இப்போ நல்லா வெயில் அடிக்கிறதால தண்ணீர் நிறையா கொடுக்க வேண்டியிருக்கு. நடவு பண்ண 5 நாள்ல செடிகள்ல இருந்த வேர்கள் நல்லா மண்ணுல இறங்கி, செடிகள் பச்சை கட்டி செழிப்பா இருக்கும். 15வது நாள்ல நிலத்துல களைகள் அதிகமா முளைச்சிருக்கும். அந்த சமயத்துல கைக்களையா எடுப்போம். களை எடுத்துட்டு செடிக்கு ரெண்டு புறமும் மண் அணைப்போம். அந்த சமயத்துல செடிகள் 1 அடி உயரத்துக்கு வளர்ந்து இருக்கும். மண் அணைக்குறதால வேர்கள் இன்னும் நல்லா இறங்கும். செடிகள் காத்துல சாயாம இருக்கும். தென்னை மரம் மாதிரியே சாமந்தில குட்டை ரகம், நெட்டை ரகம் இருக்கு. நெட்டை ரகத்துல பூக்கள் பூ பெருசா இருக்கும். எடையும் கூடுதலா இருக்கும். ஆனா அதிகளவுல பூக்காது. குட்டை ரகம் நிறைய பூக்கும். எடை கொஞ்சம் கம்மியா இருந்தாலும், அதிக பூ பூக்குறதால கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மண் அணைச்ச பிறகு 10 நாட்கள்ல செடிகள் 3 அடி உயரத்துக்கு வளர்ந்துடும். அதேபோல களைகளும் வளர்ந்துடும். இதனால முதல் களையெடுத்த 15 நாள்ல மீண்டும் ஒருமுறை களையெடுப்போம். இதுல பச்சைப்புழுக்கள், வெள்ளைப்பூச்சி, கருப்பு நிற தேன்பூச்சின்னு பல பூச்சி பிரச்சினை வரும். வேளாண் துறை அதிகாரிகளைக் கேட்டு அதுக்கேத்த மருந்துகளைத் தெளிப்போம். செடி வச்ச 5வது நாள்ல இருந்து 19: 19: 19 உரத்தை சொட்டுநீரில் கலந்து கொடுப்போம். இந்த மருந்தை ஒருநாள் விட்டு செடிகளின் வளர்ச்சிக்கு ஏத்த மாதிரி கொடுப்போம். அதேபோல டிஏபி, பாக்டம்பாஸ் மருந்துகளை பூக்க ஆரம்பிக்கும் சமயத்துல இருந்து 1 நாள் விட்டு 1 நாள் கொடுப்போம். அந்த உரங்களையும் சொட்டு நீர்லதான் கலந்து கொடுப்போம். 40வது நாள்ல இருந்து செடிகள்ல பூக்களை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். இதுல ஒருநாள் விட்டு ஒருநாள் பூ பறிக்குற மாதிரிதான் இருக்கும். ஆனா நாங்க தினமும் பறிக்கிறோம். நிலத்தை ரெண்டு பகுதியா பிரிச்சிக்கிட்டு, ஒரு பாதியில இன்னிக்கு பூ பறிக்குறோம்னா, நாளைக்கு மற்றொரு பாதியில பூ பறிப்போம். இதனால அளவா பூ பறிச்சி விற்பனை பண்ணிடுறோம். பூக்கள் விக்காம வீணா போற வேலையே எங்க கிட்ட இல்ல. ஒரு நாளைக்கு 50 கிலோவுக்கு குறையாம அறுவடை பண்ணுவோம். அறுவடை செஞ்ச பூக்களை பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு ஆகிய ஊர்கள்ல இருக்குற பூக்கடைகள்ல வித்துடுவோம். கடலூர்ல பூ மார்க்கெட் இருக்கு. அது கமிஷன் மண்டிங்குறதால கொஞ்சம் கம்மியாதான் விலை கிடைக்கும். இதனாலதான் நாங்க அங்க விக்குறது இல்ல. பூக்கடைகள்ல கொஞ்சம் நல்ல விலையாவே கொடுத்து வாங்கிக்குறாங்க.

ஒரு கிலோ பூவுக்கு 30 ரூபாய்ல இருந்து 80 ரூபாய் வரை விலை கிடைக்குது. சராசரின்னு பார்த்தா ஒரு நாளைக்கு குறைஞ்சது 40 ரூபாய் விலைன்னு வச்சிக்கலாம். இந்த விலைக்கு கணக்கு போட்டாலே ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. பூக்கள் அறுவடை செய்ய ஆரம்பிச்சதுல இருந்து 2 மாசம் வரைக்கும் பூ கிடைக்கும். இந்த 60 நாளுக்கு கணக்கு போட்டா 1 லட்சத்து 20 ஆயிரம் வருமானம் கிடைக்குது. இதில கன்று, உழவு, நடவு, களை அப்படின்னு 20 ஆயிரம் வரைக்கும் செலவு ஆகும். மீதி 1 லட்சம் லாபம்தான். அரை ஏக்கர்ல 4 மாசத்துல இந்த தொகை கிடைக்குறது நல்ல லாபம்தானே!’’ என மனம் மகிழ பேசுகிறார் அருள்ராஜன்.
தொடர்புக்கு:
அருள்ராஜன்: 91598 89386.

இடம் மாற்றி சாகுபடி

தான் செய்யும் சாகுபடி முறைகளை காலத்திற்கு ஏற்றாவாறு மாற்றி மாற்றி செய்கிறார் அருள்ராஜன். தற்போது வெயில் காலம் என்பதால் மேட்டுப்பாங்கான நிலத்தில் சாமந்தியை சாகுபடி செய்திருக்கிறார். மழைக்காலத்தில் நெல், மணிலா போன்றவற்றை பயிரிடுவதை வழக்கமாக்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் காரணம் இதுதான். “ எங்க பகுதியில இருக்குற மண் மணல்பாங்கா இருக்கும். மழை பெஞ்சா தண்ணி தேங்கி நிக்கும். அதுபோல் தண்ணி தேங்கி நின்னா செடிகள் அழுகி வீணாகிடும். இதனால வெயில் அடிக்கிற இந்த நாள்ல நாங்க இந்த இடத்தில சாமந்தியை நட்டிருக்கோம். இதை இப்போ அறுவடை செஞ்சிடுவோம். இன்னும் கொஞ்ச நாள்ல கோடை மழை பெய்யும். அப்போ இந்த இடத்துல எள் விதைப்போம். அந்த ஈரத்துல எள் நல்லா விளையும். எள் மானாவாரி பயிர் என்கிறதால எந்த சூழல்லயும் அது வளர்ந்துடும். மழை ஆரம்பிக்கிற சமயத்துல நாங்க சாமந்தியைப் பயிர் செய்யுறது இல்ல. மழை நாட்கள்ல சாமந்தி செடிகள் ஒடிஞ்சிடும். பூக்களை அறுவடை செஞ்சாலும் விக்க முடியாது. பூக்கள் ஈரமா இருக்குறதால யாரும் வாங்க மாட்டாங்க. இதனால நாங்க அந்த சமயத்துல மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்யுறோம்’’ என்கிறார்.

நிலக்கடலையிலும் லாபம்

அருள்ராஜன் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்திருக்கும் மணிலாவை தற்போது அறுவடை செய்திருக்கிறார். இதில் 10 மூட்டை மகசூலாக கிடைத்திருக்கிறது. ஒரு மூட்டை கடந்த ஆண்டு ரூ.7700 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மூட்டைக்கு ரூபாய் 7500 விலை கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் 75 ஆயிரம் வருமானமாக வாய்ப்பு இருக்கிறது. இதில் ரூ.30 ஆயிரம் செலவு போக ரூ.45 ஆயிரம் லாபமாக கிடைக்கும். தர்பூசணியில் தற்போது அதிக வெயிலின் காரணமாக விளைச்சல் குறைந்திருக்கிறது. இதனால் இதில் லாபம் குறைவாக வாய்ப்பு இருக்கிறது என்கிறார் அருள்ராஜன்.

 

Related posts

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்

விழுப்புரம் இணை சார்-பதிவாளர் வீட்டில் சோதனை

நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!