நாட்றம்பள்ளி டூ கேரளா…வெளுத்துக்கட்டும் வெண்டை சாகுபடி!

கோடை வெயில் நிலத்தில் இருக்கும் தண்ணீரை சுண்டி இழுக்கிறது. அதனால் விவசாயிகள் பலர் குறைந்த தண்ணீரில் நல்ல மகசூல் கொடுக்கும் காய்கறி பயிர்களை நடவு செய்து நல்ல மகசூல் பார்த்து வருகின்றனர். குறிப்பாக திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதில் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி ஒன்றியங்களில் குறைந்த அளவே கிடைக்கக் கூடிய நீரை வைத்து நிறைவான சாகுபடி செய்து வருகின்றனர். இதில் நிறைய விவசாயிகள் காய்கறி செடிகளை பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி ஊராட்சி கிழக்குமேடு பகுதியை சேர்ந்த திருப்பதி வெண்டை சாகுபடி செய்து அசத்தி வருகிறார். ஒரு காலை பொழுதில் விவசாய தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த திருப்பதி அவர்களை சந்தித்து திருப்பதியின் சாகுபடி முறை குறித்து கேட்டோம்.

“ எனக்கு சொந்த ஊரு திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கின்ற கிழக்குமேடுதான். எனக்கு விவரம் தெரிஞ்ச வயதில் இருந்தே விவசாயம்னா ரொம்ப விருப்பம். எனக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்கு. இதில் தற்போது ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்கிறேன். ஒரு ஏக்கரில் கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களையும், ஒரு ஏக்கரில் வெண்டை சாகுபடியும் செஞ்சுட்டு இருக்கேன். என்னோட நிலத்தில் எப்போதும் ஒரே பயிரை சாகுபடி செய்யமாட்டேன். ஒரு பயிரில் நஷ்டம் ஏற்பட்டாலும் மற்றொரு பயிரில் நாம் லாபம் பார்த்துவிடலாம் என்ற திட்டமிடலுடன் வேறு வேறு பயிர்களை சாகுபடி செய்வேன்.ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டை நடவு செய்வதற்கு முன்பு நிலத்திற்கு முதலில் மாட்டு எருவை இட்டு, நன்றாக நிலத்தை உழவு செய்வேன். உழவுக்கு பிறகு நிலம் பொலபொலப்பான பக்குவத்திற்கு மாற வேண்டியது அவசியம். இவ்வாறு நிலத்தைப் பக்குவப்படுத்திய பிறகு, 5 க்கு 4 அடி அளவு கொண்ட பாத்திகள் அமைத்தேன். அதில் ஒரு அடி அளவு கொண்ட பார்கள் அமைத்து தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சினேன். வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி அடி உரமாக டிஏபி உரம் இட்டேன். பின்னர், வெண்டை விதைகளை விதைத்தேன். ஒரு ஏக்கர் விதைப்பதற்கு 700 கிராம் விதை இருந்தாலே போதுமானது. ஆனால், நான் அடர்நடவு முறையில் செடிகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக 1 கிலோ விதையை பயன்படுத்தினேன். நடவு செய்து முளைப்பு வந்த 5வது நாளில் குறைந்த அளவே உயிர்த் தண்ணீர் விடுவேன். உயிர்த் தண்ணீரை காலையில் விடுவது நல்லது. மதிய நேரத்திலோ, நண்பகல் வேளையிலோ தண்ணீர் விட்டால் நிலத்தில் இருக்கும் சூடு தண்ணீரைச் சூடாக்கி செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தத் தண்ணீர் நிலத்தில் தேங்கி நின்றால் செடிகள் அழுகி இறந்துபோகக் கூட நேரிடும். இதைத் தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை போதிய அளவு தண்ணீர் பாய்ச்சுவேன். அதிக வெப்பத்தின் காரணமாக நிலத்தில் முழுவதுமாக தண்ணீர் வற்றி விட்டால் வாரம் மூன்று முறை கூட தண்ணீர் விடுவேன். செடிகள் வளர்ந்த 20 நாளில் களை எடுப்போம்.

களை எடுப்பதன் மூலம் தண்ணீர் முழுவதும் வெண்டை செடிக்கு மட்டுமே போகும். இரண்டாம் களையை 35வது நாளில் எடுப்போம். செடி முளைக்கத் தொடங்கிய நாளில் இருந்து 45 நாட்களில் வெண்டைச் செடியில் பூ வரத்தொடங்கிவிடும். அதன்பின்னர் வெண்டைக்காய் வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும். வெண்டையைப் பொருத்தவரையில் ஒரே நாளில் அறுவடை செய்யாமல் தேவைக்கு ஏற்றாற் போல் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவோம். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வரை வெண்டைக்காய் விதைகளை விதைக்கும் பட்சத்தில், அதில் ஒரு நாள் விட்டு அதிகபட்சமாக 200 கிலோ வரை வெண்டைக்காய் அறுவடை செய்யலாம். வெண்டைக்காயைப் பொருத்தவரையில் 40 – லிருந்து 80 நாள் வரை அறுவடை செய்யலாம். சந்தையில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை ஆகும். நாங்கள் வெண்டைக்காயை உள்ளூரில் மட்டுமில்லாமல் பக்கத்து மாநிலமான கேரளாவிலும் விற்பனை செய்கிறோம். வெண்டை முற்றுவதற்குள் உடைத்து மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும். முற்றிய வெண்டைக்காய் மார்க்கெட்டில் உண்மையாகவே விலை போகாது. இதனால் மொத்த உழைப்பும் வீணாகிவிடும். வெண்டைக்காயை கேரளாவுக்கு ஏற்றுமதி செய்வதால் நல்ல லாபம் கிடைக்கிறது.

ஒரு அறுவடைக்கு சராசரியாக 150 கிலோ வெண்டை கிடைக்கிறது. அறுவடை செய்த வெண்டைக்காய்கள் ஒரு கிலோ சராசரியாக ரூ.35க்கு விற்பனையாகிறது. அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எனக்கு வெண்டையில் இருந்து ரூ.5 ஆயிரம் வரை வருமானமாக கிடைக்கிறது. குறைந்தபட்சம் 20 நாட்கள் அறுவடை செய்து விற்பனை செய்தாலும் ஒரு ஏக்கரில் வெண்டை சாகுபடி செய்வதன் மூலம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க முடிகிறது. இதில் பராமரிப்பு செலவும் குறைவு. வெண்டை விதை நட்டு செடி வளர்ந்த பின்னர் 2 முறை மருந்து அடித்தால் போதும். மற்ற செலவுகள் ஏதும் பெரிதாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களை வைத்தே வெண்டைக்காய் வயலில் பராமரிப்பு பணிகளைப் பார்த்துக்கொள்கிறேன். அறுவடைப் பணிகளையும் அவ்வாறே செய்கிறோம். இதனால் கூலி ஆட்கள் செலவு மிச்சமாகிறது. வெண்டை சாகுபடியில் நல்ல லாபமும் பார்க்க முடிகிறது. இதில் வண்டி வாடகை, இதர பராமரிப்பு செலவு என ரூ.10 ஆயிரம் போக ரூ.90 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. இதுபோக நிலத்தில் தற்போது நெல், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களையும் நடவு செய்திருக்கிறேன். இதை இன்னும் அறுவடை செய்யவில்லை.
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாயக் கிணற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி வெண்டைக்காய், முள்ளங்கி, தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு கிணறு வெட்டி ஏற்றம் இறைத்து விவசாயம் செய்து வந்த மக்கள் தற்பொழுது இலவச மின்சாரத்தால் பம்ப்செட் அமைத்து சாகுபடி செய்கிறார்கள். இந்தப் பகுதியில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் நாட்றம்பள்ளி உழவர் சந்தை, திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகாலையில் எடுத்துச் சென்று நேரடியாக விற்பனை செய்து விடுகிறேன். இதனால் எங்களின் விளைபொருட்களுக்கு தரத்திற்கு ஏற்ப நல்ல லாபமும் கிடைக்கிறது என்கிறார் எஸ்.கே.திருப்பதி.
தொடர்புக்கு:
எஸ்.கே.திருப்பதி – 63796 32288

Related posts

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று விழா நடத்த 2வது முறையாக அதிகாரிகள் தடை: மரக்காணத்தில் போலீஸ் குவிப்பு-பதற்றம்

முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை பகுதிகளுக்கு செல்ல தடை!