அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் மோதல் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் திடீர் ராஜினாமா: 34 வயது ஓரினச்சேர்க்கையாளர் புதிய பிரதமராக நியமனம்

பாரிஸ்: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக 34 வயது ஓரினச்சேர்க்கையாளர் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் உள்ளார். 46 வயதான அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. பிரான்ஸ் பிரதமராக கடந்த 2022ம் ஆண்டு எலிசபெத் போர்ன் பதவியேற்றார். இவர் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். சர்ச்சைக்குரிய குடியேற்றச் சட்டம் மற்றும் வெளிநாட்டினரை நாடு கடத்துவதற்கான சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் பிரதமர் எலிசபெத் போர்ன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்தார்.

இதுகுறித்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் எலிசபெத் போர்னின் சேவையை பாராட்டுகிறேன். அவரது பணிகளை கண்டு வியப்படைந்தேன். எனக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தீர்கள். எங்களது திட்டத்தை தைரியமாக, அர்ப்பணிப்புடன் செயல்படுத்தினீர்கள். உங்களக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். எலிசபெத் போர்ன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், அவருக்குப் பதிலாக பிரான்ஸ் நாட்டின் மிகவும் இளைய வயது பிரதமராக கேப்ரியல் அட்டல் நேற்று நியமிக்கப்பட்டார். அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அலுவலகம் இதை தெரிவித்துள்ளது. 34 வயதான கேப்ரியல் அட்டல், அரசாங்க செய்தித் தொடர்பாளராகவும், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். மேலும் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்தவர். எனவே அவர் பிரான்சின் முதல் ஓரினச்சேர்க்கை பிரதமர் ஆவார்.

Related posts

நியோமேக்ஸ் சொத்துகள்: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி பேச்சு

கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்