எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க ப்ளீஸ்… ‘21 வயது காதலன்தான் வேணும்’ 2 குழந்தைகளின் தாய் அடம்: சேலம் காவல் நிலையத்தில் மல்லுக்கட்டிய ஜோடி

சேலம்: சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு நேற்று இளம்பெண்ணும், வாலிபரும் பதற்றத்துடன் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ‘எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள்’ என்று அப்பெண் கூறினார். ‘‘இது திருமண மண்டபம் இல்லை. உங்கள் பெற்றோர் யார்? கழுத்தில் இருப்பது தாலி தானே?’’ என போலீசார் கேள்வி எழுப்பினர். ‘‘நாங்கள் இருவரும் காதலிக்கிறோம், எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று இருவரும் விடாப்பிடியாக கூறினர். விசாரணையில் 24 வயதான அப்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் ஜவுளிக்கடையில் வேலை செய்தபோது, அங்கு பணியாற்றிய 21 வயதான வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கிப் பழகியுள்ளனர். இவர்களின் பழக்கம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார். ‘எனக்கு துரோகம் செய்துவிட்டாய், இனி நீ எனக்கு வேண்டாம்’ என்று கூறியுள்ளார். பெற்றோர் வீட்டிற்கு சென்று நடந்ததை அந்தப்பெண் கூறியுள்ளார். பெற்றோரும், ‘எந்த கெட்டபழக்கமும் இல்லாத கணவரையும் முத்துக்கள் போன்ற குழந்தைகளையும் விட்டு விட்டு வாழ்க்கையை தொலைத்துவிடாதே. கணவரிடம் மன்னிப்பு கேட்டு குடும்பம் நடத்து’ என்று அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் கணவருடன் செல்லாமல், மனம் கவர்ந்த காதலனை அழைத்துக்கொண்டு திருமணம் செய்து வைக்குமாறு போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணிடம், ‘‘கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு வந்தால் வாழ்க்கையே நாசமாகிவிடும். சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு, குழந்தைகளுடன் வாழும் பேரின்பத்தை விட்டுவிடாதே’’ என்று போலீசார் அறிவுரை கூறினர். ஆனால் அவரது கணவரோ, ‘வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை. வந்தால் குழந்தைகளை கவனித்துக்கொள்ளலாம்’ என்றார். ஆனால் கணவருடன் செல்ல விரும்பாத இளம்பெண், பெற்றோருடன் செல்வதாக கூறினார். அந்த 21 வயது இளைஞரோ, காதலியின் முடிவை ஏற்றுக்கொள்வேன் என்றார். போலீசார் அறிவுரையை அரையும் குறையுமாக ஏற்றுக்கொண்ட அப்பெண் பெற்றோருடன் சென்றார். 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கணவர் மிகுந்த மனவேதனையுடன் வீட்டிற்கு சென்றார்.

Related posts

47வது கோடை விழா இன்றுடன் நிறைவு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலம்: காஞ்சியில் பக்தர்கள் குவிந்தனர்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு