47வது கோடை விழா இன்றுடன் நிறைவு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சேலம்: ஏற்காடு கோடை விழா இன்றுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், விடுமுறை நாள் என்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்துள்ளனர். மலைகளின் அரசன் என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47வது கோடை விழா மலர்கண்காட்சி கடந்த 22ம் தேதி தொடங்கியது. கோடை விழாவை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்காட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, அண்ணாபூங்காவில் பிரமாண்ட மலர்கண்காட்சி நடந்து வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் அங்கு 5.5 லட்சம் மலர்களை கொண்டு, காற்றாலை, நண்டு, சிற்பி, ஆட்டோபஸ், கடல் குதிரை, நட்சத்திர மீன் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்டு டக், மிக்கி மௌஸ், டாம் அன்ட் ஜெரி மற்றும் அலங்கார மலர் வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனிடையே, 47வது கோடை விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. கோடை விழா இறுதிநாள் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் இன்று ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் ஏற்காட்டிற்கு படையெடுத்துள்ளனர். இதனால், சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதைகளில், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. இதேபோல் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டூரிஸ்ட் வேன்களும், கார்களும் உள்ளன.

இன்று காலை முதலே ஆர்வத்துடன் ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள், அண்ணாபூங்காவில் உள்ள மலர்கண்காட்சியை பார்த்து ரசிக்கின்றனர். அங்குள்ள உருவகங்கள், பூந்தொட்டிகள், அலங்கார வளைவுகள் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இதேபோல் ஏற்காடு ஏரியில் உள்ள படகு இல்லத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குடும்பத்துடன் உற்சாகமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.இதேபோல், ஏரி பூங்கா, மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, மீன் காட்சியகம், கரடியூர் காட்சி முனை, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் மலை, பக்கோடா பாயிண்ட் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

கோடை விழாவை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சார்பில் மலையேற்ற பயிற்சி, படகு போட்டி, அடுப்பிலா சமையல் போட்டி, விளையாட்டு போட்டிகள், நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இறுதிநாளான இன்று, குழந்தைகளின் தளிர் நடை போட்டி நடந்தது. இதில், 1 வயது முதல் 5 வயது வரையிலான நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகளின் நடனம், ஒய்யாரமான நடை, தினசரி நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கி, பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 22ம் தேதி முதல் 5 நாட்களாக நடந்து வந்த ஏற்காடு கோடை விழா இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

மலர்கண்காட்சி நீட்டிப்பு
ஏற்காடு அண்ணாபூங்காவில் 5.5 லட்சம் மலர்களால் ஆன உருவங்கள் மற்றும் 30 ஆயிரம் பூந்தொட்டிகளுடன் மலர்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் கவர்ந்துள்ள இந்த மலர்கண்காட்சியை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மலர்கண்காட்சி மட்டும் வரும் 30ம் தேதி வரை, மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

Related posts

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை விமானநிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை