லண்டனில் உள்ள பென்னி குயிக் சிலை மீது இருந்த கருப்புத்துணி விலக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளது: எடப்பாடி பேச்சுக்கு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பதில்

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பென்னி குயிக் சிலை குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், 5 மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்து, வாழ்வாதாரத்தை உயர்த்தியது முல்லை பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் வறட்சியைப் போக்கி 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பாசன வசதி ஏற்படுத்தி, 10 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்கினார் கர்னல் ஜான் பென்னி குயிக். லண்டன் மாநகரில் உள்ள பென்னி குயிக்கின் மார்பளவு சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும், சிலை சேதமடைந்திருப்பதாகவும், தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த கர்னல் ஜான் பென்னி குயிக் சிலை அவமானப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. உண்மை நிலை என்ன? மூடிய சிலையை திறக்க வேண்டும். அந்த சிலை சேதமடைந்திருந்தால் அதனை சரி செய்ய வேண்டும்’’என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், 2022ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பென்னி குயிக் பிறந்தநாள் அன்று, அவர் பிறந்த ஊரான லண்டனில் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில் செய்தி துறையின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலைக்காக 10 லட்சத்து 65 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு, அதை நிறுவுவது வெளிநாடு என்பதனால் செலவுக்காக கூடுதலாய் ரூ.23 லட்சம் என நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டு அந்த சிலை அங்கே நிறுவப்பட்டது. சிலை திறப்பதற்காக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் இங்கிருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களும், எங்கள் துறையினுடைய இயக்குனர் எல்லாம் அங்கே சென்றிருந்தார்கள்.

சிலை திறப்பதற்கு முந்தைய நாள் இங்கிலாந்து ராணி மறைந்த காரணத்தினால் எளிய முறையில் மிக சுருக்கமாக அந்த நிகழ்ச்சி நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சிலையை அங்கே நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அங்கே ஒரு குழு ஒருங்கிணைக்கப்பட்டது. திட்டமிட்ட செலவு விட கூடுதலாக செலவானதால் அது சம்பந்தமாக நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து முதல்வரோடு கலந்து பேசி நிதி அனுப்ப நிச்சயமாக இந்த அரசு பரிசீலிக்கும். அதே நேரத்தில் சிலை கருப்பு துணியால் கட்டப்பட்டது என்று கவனத்திற்கு வந்தவுடன் 3 நாளுக்கு முன்பு தொடர்பு கொள்ளப்பட்டது. சிலையில் கருப்பு துணி அப்புறப்படுத்தப்பட்டு தற்போது சிலை சிறந்த சூழலில் தான் உள்ளது.

Related posts

மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதம்

ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை சார்ந்த இடங்களை நாடும் சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவி, கடலில் உற்சாக குளியல்

தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்: தேடுதல் வேட்டையில் குட்டி சிறுத்தை சடலம் கண்டுபிடிப்பு