காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கம்ப்யூட்டர் பழுது பதிவு செய்ய நோயாளிகள் பல மணி நேரம் காத்திருப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பதிவு செய்யும் கவுண்டரில் கம்ப்யூட்டர் பழுதாகி உள்ளதால் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக நோயாளிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது,மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.

இந்த அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளான தாமல், பாலுசெட்டிசத்திரம், முசரவாக்கம், திம்மசமுத்திரம், ராஜகுளம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், ஆர்ப்பாக்கம், ஓரிக்கை, செவிலிமேடு, அய்யங்கார்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளான சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் அருகில் உள்ள ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

குறிப்பாக வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை பிபி. சுகர், தைராய்டு பிரச்சினைகளுக்காக மாத்திரை வாங்க சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள், மருத்துவமனைக்கு வருவதால் மருத்துவமனை வளாகம் நோயாளிகள் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் பதிவு செய்யும் பகுதியில் கம்ப்யூட்டர் பழுதடைந்து உள்ளதால் ஒவ்வொரு நோயாளியாக பெயர் உள்ளிட்ட விவரங்களை கையால் எழுதி பதிவு செய்வதற்கு காலதாமதம் ஆவதாக நோயாளிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நோயாளிகள் கூறுகையில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பதிவு சீட்டுக்களை பெற 1 முதல் 2 மணி நேரத்திற்கும் ஆகிறது. அது வரை நீண்ட வரிசையில் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் டாக்டரை பார்த்து விட்டு மருந்து, மாத்திரை வாங்கச் சென்றால் அதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளின் சிரமத்தினை உணர்ந்து உடனடியாக கூடுதலாக உள் மற்றும் புற நோயாளிகள் பதிவு கவுண்டர்களை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல்

மே-04 : பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை

ரிசல்ட் வருவதற்கு முன்பே தொண்டர்கள் மீது பழிபோட தயாராகும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா