மொபட்டில் இருந்து தடுமாறி கீழே விழுந்தபோது அரசு பஸ் ஏறி இறங்கியதில் மாணவன் கை உடைந்தது

பல்லாவரம்: அனகாபுத்தூர் பிரதான சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவன் மீது அரசு பேருந்து ஏறி இறங்கியதில் கை உடைந்தது. பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமாட்சி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது, மகன் சீனிவாசன் (14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த சீனிவாசன், தன்னுடன் படித்து வரும் நண்பரான, அனகாபுத்தூர் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஹரிஹரனுடன் (15), மொபட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி பழைய வினாத்தாள்களை ஜெராக்ஸ் எடுப்பதற்காக புறப்பட்டுள்ளார்.

மாணவன் ஹரிஹரன் மொபட்டை ஓட்டியுள்ளார். அனகாபுத்தூர் பிரதான சாலையில் அம்பேத்கர் சிலை அருகே சென்றபோது, சாலையோரம் இருந்த மணல் குவியலால் மொபட் திடீரென நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில், சாலை ஓரமாக விழுந்த ஹரிஹரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்து வந்து சீனிவாசன் சாலையின் நடுவே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சீனிவாசனின் வலது கையின் மீது ஏறி இறங்கியது. இதில், கை உடைத்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த சீனிவாசனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 18 வயது பூர்த்தியடையாத மாணவர்கள் வாகனங்களை இயக்க கூடாது என்று சட்டம் உள்ளபோதும், அதை மீறி பல சிறுவர்கள் சமீப காலமாக அதிகளவில் வாகனங்களை இயக்கி, விபத்தில் சிக்குவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனால், இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், விபத்து ஏற்படுத்தும் மாணவர்களின் பெற்றோர் மீது வழக்கு, அதிகபட்ச அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!!

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பின் சிறப்பு அலைபேசி அழைப்பு 100% முடித்தமைக்கு வண்ணபிரிண்டர் வழங்கி பாராட்டு!!

சென்னையில் கருட சேவையின் போது பெருமாள் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி: உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்டு உடைந்ததாக தகவல்