நாடாளுமன்ற கூட்டுக் குழுவை விட உச்ச நீதிமன்ற குழு விசாரணை பயனுள்ளது: அதானி விவகாரத்தில் பவார் விளக்கம்

மும்பை: அதானி விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை விட உச்ச நீதிமன்ற குழு விசாரணை பயனுள்ளதாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கம் அளித்துள்ளார். அதானி குழும மோசடி தொடர்பாக நாடாளுமன்ற எம்பிக்கள் அடங்கிய கூட்டுக்கழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அதானிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதானி நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்திய அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் அறிக்கையை பவார் முற்றிலும் நிராகரித்தார்.

இதனால் அவர் அதானிக்கு ஆதரவு தெரிவித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் மும்பையில் நேற்று பவார் அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிப்பதை நான் முற்றிலும் எதிர்க்கவில்லை. ஆனால் உச்ச நீதிமன்ற குழு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே கூறுகிறேன். ஏனெனில், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் கூட்டுக்குழுவில் 21 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி, 15 பேர் ஆளுங்கட்சியிலும், 6 பேர் எதிர்க்கட்சியிலும் இருப்பார்கள். இது குழு மீதான சந்தேகத்தை ஏற்படுத்தும்’’ என விளக்கம் அளித்தார்.

ஆனால் இந்த கருத்தை ஏற்க காங்கிரஸ் மறுத்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற குழுவிற்கு குறிப்பிட்ட அதிகாரம் மட்டுமே இருக்கும். இந்த குழுவால் பிரதமருக்கும், அதானிக்கும் இடையேயான நெருக்கமான தொடர்பை வெளிப்படுத்த முடியாது. அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் மட்டுமே முடியும். இதற்கு முன் 1992, 2001ல் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுக்கள் சிறந்த தீர்வை தந்துள்ளன’’ என்றார்.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘அதானி விவகாரத்தில் மம்தா, சரத் பவார் போன்ற தலைவர்கள் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தாலும், அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணியிலும் எந்த விரிசலையும் ஏற்படுத்தாது’’ என்றார்.

  • எதிர்க்கட்சிகள் கவனிக்க வேண்டும்
    மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ‘‘பவார் ஒரு மூத்த அரசியல் தலைவர். அதானி விவகாரத்தில் அதிக ஆய்வுக்குப் பிறகே அவர் பேசியிருப்பார். எனவே போராட்டம் நடத்துபவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். பவார் சொல்வதை கவனிக்க வேண்டும்’’ என்றார்.

Related posts

மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு

காங்கிரஸ் நிர்வாகி படுகொலை சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு