நெற்பயிரில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

விவசாயத்தில் இயற்கை பல நன்மைகளைத் தருவது போல சில தீமைகளையும் தந்துவிடுகிறது. அவற்றில் ஒன்றில்தான் எலித்தொல்லை. நாம் புயல், மழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு பயிர்த்தொழிலில் விளைச்சல் வரைக்கும் முன்னேறினாலும், அவற்றை எலித்தொல்லையில் இருந்து பாதுகாக்க கடுமையாக போராட வேண்டி இருக்கிறது. சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றிய நுட்பமான அறிவும், தந்திரமும் கொண்ட சூழ்நிலைக்குத் தக்கவாறு வாழும் தன்மை கொண்ட உயிரினமான இந்த எலிகள் நெல், மணிலா உள்ளிட்ட பல பயிர்களை கபளீகரம் செய்து விடுகின்றன. எலிகளால் மட்டும் உணவு தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சேதப்படுத்தப்படுகின்றன.

எலிகளால் 25 சதவீதம் வரை பயிர்களில் மகசூல் பாதிப்பும், சேமிப்புக் கிடங்குகளில் 30 சதவீதம் வரை உணவுப் பொருள்கள் சேதமும் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எலிகள் 2 முதல் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழும். எலிகளின் இனப்பெருக்கம் மிகவும் ஆச்சரியமானது. எலிகள் தாயின் வயிற்றில் இருக்கும் காலம் வெறும் 25 நாட்கள்தான். இருபத்தாறாம் நாள் உலகைக் காண ஓடி வந்துவிடுகின்றன. இவற்றின் வளர்ச்சியும் மிகவும் அபாரமானது. பிறக்கும்போது பார்க்கப் பரிதாபமாக இருக்கும் இவை வெகு சீக்கிரம் இரண்டே மாதத்தில் முழு வளர்ச்சியடைந்து விடுகின்றன. குட்டி போடுவது எலிகளுக்கு மிகவும் சாதாரண விஷயம். ஆண்டுக்கு 5 முதல் 6 முறை குட்டிகளை ஈனும். ஒரு ஈத்திற்கு 6 முதல் 10 குட்டிகள் வரை ஈனும்.

குட்டி போட்ட மறுநாளே சுறுசுறுப்பாக தனது அன்றாட வேலைகளில் இறங்கிவிடும் தாய் எலி. எலிக்குட்டி பிறந்த 10 நாள்களிலேயே பல் வளர ஆரம்பித்துவிடும். அவற்றின் பல் வளர்ச்சி மிகவும் அசுரத்தனமானது. பற்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எலிகள் பயிர்கள், உணவுப் பொருள்கள், குழாய்கள், மரப்பலகைகள் உள்ளிட்ட திடப்பொருள்கள் அல்லது கண்ணில் படும் ஏதாவது ஒன்றைக் கடித்துக் குதறிக் கொண்டே இருக்கும். இந்தியாவில் 104 வகையான எலி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்தில் விளைநிலங்கள், வீடுகள் மற்றும் தானிய சேமிப்புக் கிடங்குகளில் கரம்பெலி அல்லது வயலெலி, புல்லெலி, வெள்ளெலி, வயல் சுண்டெலி, கல்லெலி, குன்னெலி, பெருச்சாளி, வீட்டெலி, வீட்டுச் சுண்டெலி, தென்னை எலி போன்ற சுமார் பத்து வகைகள் உள்ளன. இவற்றுள் வயலெலி அல்லது கரம்பெலி, புல்லெலி, வயல் சுண்டெலி ஆகிய மூவகை எலிகள்தான் நெற்பயிரைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன.

நெற்பயிரில் எலிகளினால் உண்டாகும் சேதம்

நெற்பயிரின் அனைத்து வளர்ச்சிப் பருவத்திலும் தாக்குதல் காணப்படும். நாற்று நட்ட சில நாள்களிலேயே எலிகளின் தாக்குதல் தொடங்கி, கதிர் உருவாகும் வரை காணப்பட்டாலும், நெல் மணிகள் உருவாகும் தருணத்தில் மிக அதிகமாகக் காணப்படும். இளம் நாற்று களையும் கடித்து சேதம் உண்டாக்கும். இவற்றினால் உண்டாகும் சேதம் வரப்பு ஓரங்களில் காணப்படாது. வயலின் நடுவிலோ அல்லது 2 முதல் 4 மீட்டர் உட்புறத்திலோ இருக்கும். கதிர் உருவாகும் சமயத்தில் நெல் மணிகளை உண்டு சேதப்படுத்தும் இவை, பின்பு நெல் கதிர்களையும் வெட்டி தங்கள் வளைகளில் சேமித்து வைக்கும்.ஒரு வளையில் 1 முதல் 4 கிலோ வரை தானியங்களை சேமித்து வைக்கும். இனப்பெருக்கமானது வருடம் முழுவதும் இருந்தாலும், வெயில் காலத்தில் குறைவாகவும், அக்டோபர் – டிசம்பர் மற்றும் கதிர் பிடிக்கும் சமயத்தில் அதிகமாகவும் இருக்கும்.

எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்

பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பு வரப்புகளை வெட்டி எலிகளைப் பிடித்து அழிக்க வேண்டும். வயலை உழவு செய்வதற்கு முன்பு வயலில் காணப்படும் எலி வளைகள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை நிரப்பி, ஒரு சில நாள்கள் நிறுத்தி வைக்க வேண்டும். இதனால் எலிகள்மூச்சுத் திணறி இறந்து விடும். எலிகள் வளைகளை அமைக்க முடியாதபடி குறுகிய வரப்புகளையே அமைக்க வேண்டும். வயலுக்கு அருகாமையில் வைக்கோல் போர் அமைக்கக் கூடாது. வயல்களிலும், வரப்புகளிலும் சிறு செடிகளோ, களைகளோ இல்லாமல் அழிக்க வேண்டும். நாற்றுகளை நெருக்கி நடாமல் அதிக இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். வயலைச் சுற்றி கொத்தவரங்காய், இஞ்சி போன்ற பயிர்கள், கற்றாழை மற்றும் கிளைரிசிடியா செடிகளைப் பயிரிடுவதன் மூலம் அவற்றின் வாசனைக்கு எலிகள் நெருங்கி வராது.

வயல் வெளிகளில் 1.2 முதல் 1.8 மீட்டர் உயர மூங்கில் குச்சியை நட்டு அதன் முனைப்பகுதியில் வைக்கோலைச் சுற்றி வைக்கவேண்டும் அல்லது தேங்காய் மட்டையினை சொருகி வைக்கலாம். ஆங்காங்கே கோட்டான் எனப்படும் வெள்ளை ஆந்தை இரவில் வயலில் வந்து அமர்ந்து எலிகளைப் பிடித்து உண்ணும். ஒவ்வொரு கோட்டானும் தினந்தோறும் 1 முதல் 3 எலிகள் வரை பிடித்து உண்ணும். தஞ்சாவூர் கிட்டி: தஞ்சாவூர் கிட்டியானது மூங்கில் கம்புகளால் செய்யப்பட்டவை. இவற்றை வளையும் திறனுள்ள மற்ற மரக்குச்சிகளினாலும் செய்து பயன்படுத்தலாம். வயல் வரப்பில் இருந்து 1 – 3 மீட்டர் இடைவெளியில் பயன்படுத்த வேண்டும். இருபுறமும் வைக்கோல் மீது நெற்பொரியை இட்டு மாலை நேரத்தில் வயலில் வைக்க வேண்டும். பொறியைக் கடந்து செல்ல முயலும்போது எலி நெரித்துக் கொல்லப்படுகிறது. ஒரு வயலில் 2- 4 நாள்கள் வரை மூங்கில் பொறிகளை வைத்து எலிகளைப் பிடிக்க வேண்டும். பொறியுணவு வைக்காமலும் இவற்றினை எலிகள் நடமாடும் பாதையில் வைத்து எலிகளை அழிக்கலாம்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்தப் பொறியானது நெல்வயலில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஏக்கருக்கு எலியின் தாக்குதலைப் பொருத்து 50 முதல் 100 பொறிகள் வரை பயன்படுத்தினால் எலிகளைச் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.எலிக் கிட்டியை எலி வெட்டி தூர்கள் கீழே கிடக்கும் இடம், எலி புழுக்கைகள் வயலில் கிடக்கும் இடம், நெருக்கமாக பயிர்கள் காணப்படும் இடம் ஆகிய இடமாகப் பார்த்து வைக்கும்பொழுது சிறப்பான கட்டுப்பாடு கிடைக்கும். இது சுற்றுச்சூழலுக்கு எவ்வித மாசும் ஏற்படுத்தாத எளிய மற்றும் பாதுகாப்பான முறையாகும்.

சிங்க் பாஸ்பைடு

சிங்க் பாஸ்பைடு பல ஆண்டுகளாக 47:2:1 (அரிசிபொரி சிங்க் பாஸ்பைடு : 1% தேங்காய் எண்ணெய்) எலிக் கொல்லியாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது கருமைநிறத் தூளாக பூண்டு வாசனையுடன் இருக்கும். வயல் எலிகளைக் கொல்வதற்கு இரண்டு சதவீத விஷ உணவாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. விஷ உணவோடு சென்று இரைப்பையை அடைந்த சிங்க் பாஸ்பைடு அங்குள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தோடு வினைபுரிந்து பாஸ்பின் என்ற வாயுவை வெளியிடுகிறது. இந்த வாயு நரம்புகளைத் தாக்கி மரணத்தை உண்டாக்குகிறது. அதனால் எலிகள் இந்த மருந்தை உட்கொண்டவுடன் இறந்து விடுகின்றன.

எலியைக் கொல்லும் விலங்கினங்கள்

மாமிசப் பட்சிகளான ஆந்தை, கழுகு, கோட்டான், பாம்பு, காட்டுப்பூனை, நாய், கீரிப்பிள்ளை, பருந்து முதலியன எலிகளைக் கொன்று உண்கின்றன. காட்டுப் பூனைகளும், சிறுகாது ஆந்தைகளும் எலிகளை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஏனெனில் இவை இரண்டுமே எலிகள் நடமாடும் இரவு நேரங் களில் தான் அதிகமாக நடமாடுகின்றன. புள்ளிக் கோட்டான் வகை, சுண்டெலிகள் சிறியதாக இருப்பதால் மிக அதிகமாக பிடித்து உண்கின்றன. இவை நமது வயல்கள் ஓரம் நடமாடினால் எலிகளை வெகுவாக கட்டுப்படுத்திவிடும்.

 

 

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு