அத்தனையும் ஆர்கானிக்…60 சென்ட் நிலத்தில் பலபயிர் சாகுபடி!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் அனந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னப்பன். இவர் தனக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தை பகுதி பகுதியாக பிரித்து காய்கறி, தென்னை, நல்ல மிளகு, மா என பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறார். அதுவும் எந்த வித ரசாயனக் கலப்பும் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்து நேரடி விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார். தனது வயலில் பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொன்னப்பனை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம்.

“ஐடிஐ, டிப்ளமோ படித்து முடித்துவிட்டு தனியார் குளிர்பானக் கம்பெனியில் வேலை பார்த்தேன். பின்பு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று அங்கு வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு சொந்த ஊருக்குக் திரும்பி வந்த நான் கடந்த 15 வருட காலமாக நஞ்சில்லா வேளாண்மை சாகுபடி செய்து வருகிறேன். எனக்கு சொந்தமாக 60 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை சிறிது சிறிதாக பிரித்து, பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். அதன்படியே தற்போதும் சாகுபடி செய்து வருகிறேன். எக்காரணம் கொண்டும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தக்கூடாது என தீர்மானமாக இருந்தேன்.

இந்த நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு ஏற்ற வகையில் மாற்ற 3 வருடம் ஆனது. இதற்காக மாட்டுச் சாணம், இலை, தழைகள், மீன் அமிலம், பஞ்சகவ்யம் ஆகியவற்றைப் பயன்படுத்தினேன். நிலம் நன்றாக பக்குவமாகி இருக்கிறது. முழுக்க முழுக்க இயற்கைச் சத்துகள் மிகுந்த நிலமாக மாறியிருக்கிறது. இந்த நிலத்தில் தற்போது 48 தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்களில் இருந்து 3 மாதத்திற்கு ஒருமுறை தேங்காய் வெட்டுகிறோம். தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கிழங்கு வகைகளான கூவக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சிறுகிழங்கு ஆகியவை சாகுபடி செய்திருக்கிறேன். இதுதவிர வாழை மற்றும் நல்லமிளகு பயிரிட்டு இருக்கிறேன். விளைநிலத்தை பிரித்து, ஒரு பகுதியில் மரவள்ளிக் கிழங்கு மற்றும் காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்திருக்கிறேன். நாட்டு வெண்டை, சிவப்புக்கீரை, காந்தாரி மிளகு, கத்தரிக்காய் போன்ற காய்கறிச் செடிகளைப் பயிரிட்டு இருக்கிறேன். இந்தக் காய்கறிகளை 20 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்திருக்கிறேன். காய்கறி செடிகளுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சிவருகிறேன். தென்னை மற்றும் வாழைமரங்களுக்கு தேவைக்கு ஏற்ப மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். இதற்காக எனது நிலத்தில் 25 அடி ஆழத்தில் கிணறு ஒன்றும், ஒரு சிறிய பண்ணைக்குட்டையும் அமைத்திருக்கிறேன். கிணற்றிலும், பண்ணைக் குட்டையிலும் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். இதற்குக் காரணம் எனது நிலத்தைச் சுற்றியுள்ள பகுதி மேடு, பள்ளம் நிறைந்த பகுதியாக இருப்பதுதான். மேடான பகுதியில் குளங்கள் இருக்கின்றன. இந்தக் குளங்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. மேடான பகுதியில் குளங்கள் இருப்பதால், தாழ்வான எனது நிலத்திற்கு ஊற்றுத் தண்ணீர் அதிக அளவில் வருகிறது.

கிணறு மற்றும் பண்ணைக் குட்டையில் வெயில் காலத்திலும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும். இதனால் தண்ணீருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. நான் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு உரமாக மாட்டுச்சாணம், இலைதழைகள், மண்புழு உரம், மீன் அமிலம், பஞ்சகவ்யம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறேன். பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதால், பயிர்களுக்கு உரிய காலங்களில் உரங்களை இடுகிறேன். விளைநிலத்தில் உள்ள 48 தென்னை மரங்களில் இருந்து 3 மாதத்திற்கு ஒருமுறை 700 தேங்காய்களை அறுவடை செய்து வருகிறேன். அவற்றை அப்போதைய விலைக்கு விற்றுவிடுகிறேன். இதில் கணிசமான வருமானம் கிடைக்கிறது. மேலும் தேங்காய்களில் இருந்து தென்னங்கன்றுகளை உற்பத்திசெய்து அவற்றையும் விற்பனை செய்கிறேன். ஒரு கன்று ரூ.100 என விற்பனை செய்கிறேன். விவசாயிகளும் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள்.

20 சென்ட் நிலத்தில் பயிரிட்டுள்ள 46 நல்லமிளகுச் செடிகளில் இருந்து 15 கிலோ முதல் 20 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. நல்ல மிளகுச் செடிகளில் பெரும்பாலான செடிகள் சிறியதாக உள்ளன. இன்னும் ஓரிரு வருடங்களில் நல்லமிளகு செடிகளில் இருந்து அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிலோ மிளகை ரூ.800 என விற்பனை செய்கிறேன். 30 மாங்கன்றுகளை ஒரு வருடத்திற்கு முன்பு நடவு செய்தேன். அவை இன்னும் ஒரு வருடத்தில் மகசூல் கொடுக்கத் தொடங்கும். மாங்கன்றுகள் அதிக இடைவெளி விட்டு வைக்கப்பட்டு இருப்பதால், அவற்றுக்கு இடையே வேறு பயிர்களும் சாகுபடி செய்யலாம்.

20 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிச்செடிகளில் இருந்து தினமும் காய்களைப் பறித்து எனது வீட்டின் அருகே வைத்து விற்பனை செய்துவிடுவேன். ரசாயனக் கலப்பில்லாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விளைவிப்பதால், மக்கள் மத்தியில் எனது காய்கறிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அறுவடை செய்த காய்கறிகளை ஃப்ரெஷ்ஷாகவும் கொடுக்கிறேன். நாம் கேட்கும் பணத்தை அவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி தந்துவிடுகிறார்கள். கீரைகளும் அதேபோலத்தான். 5 சென்ட் நிலத்தில் கீரைகளை மட்டுமே சாகுபடி செய்திருக்கிறேன். இதில் அதிகளவில் சிவப்புக்கீரையை சாகுபடி செய்திருக்கிறேன். இந்தக் கீரையைச் சாகுபடி செய்த 41வது நாளில் அறுவடை செய்யலாம்.

கீரைகளை மொத்தமாக விதைப்போம். பின்பு அவற்றைத் தனித்தனியாக நிலத்தில் இருந்து பிரித்தெடுத்து, மண்ணை நன்றாக கிளறி, அதில் மண்புழு உரம் போட்டு கலப்புக்கீரையாக நடவு செய்வோம். கீரையை நாம் நன்றாக பராமரித்தால், நல்ல வருமானம் கிடைக்கும். இதிலும் எனக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. நான் சாகுபடி செய்துள்ள காய்கறி மற்றும் கீரைகளில் இருந்து தினசரி வருமானம் கிடைக்கிறது. எப்படியும் செலவு போக ஒரு நாளைக்கு ரூ.300க்கு மேல் லாபமாக கிடைக்கும். காய்கறி, கீரை, தேங்காய், தென்னங்கன்று, மிளகு, மாம்பழம் என பல்வேறு விளைபொருட்கள் மூலம் வருடத்திற்கு சுமார் 1 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் பெரும்பாலான பராமரிப்புப் பணிகளை நானே செய்துவிடுகிறேன். இதனால் எனக்கு செலவு பெரியளவில் குறைகிறது. ரசாயன உரங்களுக்கான செலவும் இல்லை. இதனால் செலவு மிகவும் குறைந்து லாபமும் தாராளமாக கிடைக்கிறது. 60 சென்ட் நிலத்தில் பயிரிட்டுள்ள ரசாயனக் கலப்பு இல்லாத காய்கறி உள்ளிட்ட விளைபொருட்களை எங்களின் குடும்பத் தேவைக்குப் போக விற்பனை செய்கிறோம். இதனால் எங்களுக்கும் நல்ல உணவு கிடைக்கிறது. அவற்றை வாங்கிச் செல்பவர்களுக்கும் நல்ல உணவு கிடைக்கிறது’’ என பெருமிதத்துடன் பேசுகிறார் பொன்னப்பன்.

தொடர்புக்கு:பொன்னப்பன்: 94873 10159.

வளர்பிறையில் சாகுபடி

எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும் வளர்பிறைக் காலத்தில்தான் பணியைத் தொடங்க வேண்டும் என்கிறார் விவசாயி பொன்னப்பன். இதுகுறித்து அவர் கூறுகையில், “காய்கறி உள்ளிட்ட எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும், நல்ல விதைகளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்த விதைகளை வளர்பிறையின்போது மட்டுமே சாகுபடி செய்யவேண்டும். நான் அப்படித்தான் செய்து வருகிறேன். தேய்பிறையின்போது விதைகள் தூங்கும் நிலையில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் சாகுபடி செய்தால், வளர்ச்சி என்பது குறைவாக இருக்கும். எந்தப் பயிர்கள் சாகுபடி செய்தாலும், இதனை நாம் கடைபிடிக்க வேண்டும். மரவள்ளியில் அதிக மகசூல் கிடைக்க நாம் நல்ல மரவள்ளிக் கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். நடவு செய்யும் இடத்தில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தில் இலைதழைகள், குப்பை, மண்புழு உரம், மீன்அமிலம், பஞ்சகவ்யம் ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப இட்டு, அதன்மேல் மண்ணைப் போட்டு மரவள்ளிக் கம்பை நடவு செய்யவேண்டும். இவ்வாறு செய்தால் அதிக மகசூல் கிடைப்பது உறுதி’’ என்கிறார்.

 

Related posts

மக்கள் பங்களிப்பு மூலம் புதுப்பிப்பு வீணாகிறது நெல்லை வேய்ந்தான்குளத்தில் சாக்கடை கலந்து துர்நாற்றம் எடுக்கும் அவலம்

விளையாட்டு மைதானத்தில் நாய்கள் தொல்லையால் வாக்கிங் செல்வோர் அவதி

கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார்