விசிக சார்பில் விருது வழங்கும் விழாசபாநாயகர் அப்பாவு உட்பட 7 பேருக்கு விருது: திருமாவளவன் வழங்கினார்

சென்னை: விசிக சார்பில் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது, சபாநாயகர் அப்பாவு உட்பட 7 பேருக்கு விருதுகளை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 2023ம் ஆண்டுக்கான விசிக விருதுகள் வழங்கும் விழா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 2007ம் ஆண்டு முதல் சமூகம், அரசியல், கலை, இலக்கியம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பணியாற்றி சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோர்க்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 7 தலைப்புகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உட்பட 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கும், காமராசர் கதிர் விருது தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு-க்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது டெல்லி மாநில அரசின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமுக்கும், மார்க்ஸ் மாமணி விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார். மேலும் விருதாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி கவுரவித்தார். காயிதேமில்லத் பிறை விருது பெற்ற மோகன் கோபால் வர இயலாத காரணத்தால் அவருக்கு பதில் வானியல் விஞ்ஞானி முருகன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விசிக பொதுச்செயலாளர்கள் ரவிகுமார், சிந்தனை செல்வன், மாநில அமைப்பு செயலாளர் பன்னீர் தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

Related posts

எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது குடும்பம் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிட்டதாக ஐகோர்ட்டில் வழக்கு

ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல்

வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி