ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் வலியை உணர்கிறேன்; குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: பிரதமர் மோடி

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மேலும் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து இந்தியாவையே உலுக்கி வருகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தையடுத்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் பிரதமர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் பாலசோர் வந்து விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பிரதமருடன் ஒன்றிய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்து காட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை பிரதமரிடம் மருத்துவர்கள் எடுத்து கூறினர்.

இதையடுத்து பிரதமர் அளித்த பேட்டியில்; “விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு வேதனை அடைந்தேன். ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது பெரும் வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க ஒன்றிய அரசு உதவும். ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் வலியை உணர்கிறேன். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Related posts

கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது: அதிகபட்சமாக கரூரில் 110.30 டிகிரி கொளுத்தியது

நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது: தேர்வு விதிமுறையை வெளியிட்டது தேர்வு முகமை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை