தினமும் காலையில் இந்தப் பொருள்களைப் பாருங்கள் திவ்யமாக வாழுங்கள்!

சில பொருள்களைப் பார்த்தால் தோஷம். சில பொருள்களை பார்த்தால் யோகம். இது ஒரு உளவியல் சிந்தனை. எந்தப் பொருள்களைப் பார்த்தால் நம்முடைய மனது உற்சாகமாக இருக்கும். நம்முடைய சிந்தனை தெளிவாக இருக்கும் என்பதைப் பற்றி எல்லாம் நம்முடைய முன்னோர்கள் யோசித்து, நாம் நல்லபடியாக ஒவ்வொரு நாளும் வாழ்வதற்காக, சில யோசனைகளைச் சொல்லி இருக்கின்றார்கள். அதில் ஒன்றுதான், ஒவ்வொரு மனிதனும் தவறாமல் இந்த இந்த பொருள்களை பார்க்க வேண்டும் என்பது.

இந்தப் பொருள்களைப் பார்ப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அப்படி இந்தப் பொருள்களைப் பார்ப்பதால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. அதிர்ஷ்டம் என்றால் என்ன பொருள் தெரியுமா? மறைவாக சில நல்ல செயல்கள் நம்மை அறியாமலேயே நடப்பதற்குதான் அதிர்ஷ்டம் என்று பெயர்.
அதிர்ஷ்டம் என்றால் யாரோ ஒருவர் வந்து கையிலே பணம் கொடுத்துவிட்டு செல்வது என்று நினைக்காதீர்கள். நம்முடைய மனது நல்லபடியாக சிந்திக்கத் தொடங்கினாலே, அந்த மறைமுகமான சக்தி அதிர்ஷ்டமாக வேலை செய்யும். அதற்கு நாம் காலையில் எழுந்ததிலிருந்து சில விஷயங்களைத் தவறாமல் பார்க்க வேண்டும். இதற்கு “தரிசனம்” என்று பெயர்.

முக்கியமான தரிசனங்கள்:

1. கர தரிசனம்
2. கோ தரிசனம்
3. கோபுர தரிசனம்
4. ஆடி தரிசனம்
5. பெற்றோர் தரிசனம்
6. விருத்தர் தரிசனம்
7. புஷ்ப தரிசனம்
8. சூரிய தரிசனம்
9. தீர்த்த தரிசனம்
10. ஆழி தரிசனம்
11. ஆகாய தரிசனம்
12. கருட தரிசனம்
13. அஸ்வ தரிசனம்
14. அத்தி தரிசனம்
15. சந்திர தரிசனம்
16. விருட்ச தரிசனம்
17. ஷீர தரிசனம்

முதலில் நாம் செய்ய வேண்டிய தரிசனம் கர தரிசனம். காலையில் எழுந்தவுடன் இரு உள்ளங்கையையும் தேய்த்துக்கொண்டு வேறு எதையும் பார்க்காமல் அதையே சில நிமிடங்கள் உற்றுப் பார்ப்பது ஒரு தியானத்துக்கு சமம். நம்முடைய கைகள்தான் நமக்கு ஆதாரம். நம் கையே நமக்கு உதவி என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவது அல்லவா இது.

நம் கை நமக்கு உதவாவிட்டால் வேறு யார் உதவுவர்? நம் கையிலேதான் தேவதைகள் எல்லாம் இருக்கின்றன. உள்ளங்கையிலே மகாலட்சுமி வாசம் செய்வதால், முதன்முதலில் மகாலட்சுமியினுடைய முகத்தில் விழிக்க வேண்டும் என்பதற்காக கர தரிசனத்தை முதல் வேலையாகச் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னார்கள்.

கையின் நுனியில் துர்க்கையான பார்வதி வாசம் செய்கிறாள். கையின் நடுவிலே கலைமகள் வாசம் செய்கிறார். கையின் அடிப்பாகத்திலே சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனான கோவிந்தன் வாசம் செய்கிறார். இதை ஒரு அழகான ஸ்லோகம் சொல்லுகின்றது;

கராக்ரே வஸதே லட்சுமி கர மூலே சரஸ்வதி
கரமத்யே து கோவிந்த: பிரபாதே கர தர்சனம்

கர தரிசனம் முதன் முதலில் செய்ய வேண்டும். இன்றைக்கும் கிராமத்திலே உள்ளவர்கள் எழுந்தவுடன், வேறு எதையும் பார்க்காமல், இரண்டு உள்ளங்கைகளையும் சற்று நேரம் பார்த்துவிட்டு, அதற்கு பிறகு தங்களின் காரியத்தை தொடங்குவார்கள். இரண்டு, கோ-தரிசனம். கோ என்றால் சகல தேவதைகள் என்று பொருள். ஒரு பசு மாட்டையும் கன்றையும் இணைத்துப் பார்ப்பது என்பது நம்முடைய பழங்கால மரபு.

அதுதான் செல்வம் என்பார்கள். (“மாடு அல்ல மற்ற பிற”) மாடு என்றாலே செல்வம். செல்வத்தைப் பார்ப்பது என்பது பசுமாட்டை கன்றோடு பார்ப்பதற்கு சமம். அந்த காலத்திலே ஒவ்வொருவர் வீட்டிலும் பசுமாடு கன்று இருக்கும். அதனைப் பார்ப்பதன் மூலமாக அவர்களுக்கு அந்த நாள் நல்ல பொழுதாக விடியும். காரணம், பசுமாட்டின் கொம்பில் ஆரம்பித்து கால் குளம்பு வரையில் முப்பது முக்கோடி தேவதைகளும் வசிக்கின்றார்கள் என்பது சாத்திரம். எனவே கோ தரிசனத்தைத் தவறாமல் பாருங்கள்.

இப்பொழுது ஒரு கேள்வி கேட்கலாம். நாங்கள் எல்லாம் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறோம். மாடுகளைப் பார்ப்பதே மகத்தான காரியமாக இருக்கிறது, அப்படியானால் கோ தரிசனத்தை எப்படிப் பார்ப்பது என்று கேட்கலாம். மாட்டினுடைய பிரதிமை அல்லது பசுமாடு கன்றுடன் கூடிய ஒரு படம் இவற்றை பிரேம் போட்டு மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பாருங்கள்.

மூன்றாவதாக, கோபுர தரிசனம். அந்தக் காலத்திலே, ஏன் கோபுரங்களை உயர்வாக கட்டி வைத்தார்கள் என்று சொன்னால், எங்கிருந்தாலும்கூட கோபுர தரிசனம் பார்க்கலாம். ஆலயத்திற்குப் போக முடியாதவர்கள்கூட கோபுர தரிசனத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊரிலே மற்ற வீடுகளைவிட கோயில் கோபுரம் உயர்ந்ததாகக் கட்டினார்கள். கோபுரதரிசனத்தைக் காண்பது கோடி புண்ணியம். இப்பொழுதும், கிராமங்களிலே தெருவின் ஒரு கோடியில் ஏதாவது ஒரு கோயில் இருக்கும்.

அவர்கள் வெளியே வந்து சூரியனை தரிசனம் செய்து விட்டு, அப்படியே கோயில் வாசலையும் கோபுரத்தையும் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அடுத்து ஆடி தரிசனம். ஆடி என்பது கண்ணாடியைக் குறிக்கும். ஆண்டாள் பாசுரத்திலே ‘‘காறை பூணும், கண்ணாடி காணும்’’ என்று வருகிறது. ஒருவருடைய பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் யாருக்கு இருக்கிறது என்று சொன்னால். அவர் ஒரு கண்ணாடி முன் நின்றால், கண்ணாடியில் யார் பிம்பம் தெரிகிறதோ, அவரிடம்தான் இருக்கிறது என்று அழகாகச் சொல்லுவார்கள்.

அப்படியானால், நம் பிரச்னைக்கான தீர்வுகள் நம்மிடமே இருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துவது தான் கண்ணாடி. இப்பொழுதும் கோயில்களிலே 16 உபசாரங்களிலே ஒரு உபசாரமாக கண்ணாடியை இறைவனுக்கு காட்டுகின்ற வழக்கம் இருக்கிறது. ஆகையினால் காலையில் எழுந்தவுடன் கண்ணாடியை ஒருசில வினாடிகள் பார்ப்பது என்பது அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. அதற்கடுத்தது பெற்றோர்களை தரிசனம் செய்ய வேண்டும். வீட்டில் நம்முடைய பெற்றோர்கள் இருந்தால், அவர்களை வணங்க வேண்டும்.

ஒரு நிமிடம் அவர்கள் இருவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு, அதற்குப் பிறகு நம்முடைய காரியங்களைச் செய்ய வேண்டும். வயதானவர்கள் வீட்டில் இருந்தால், அவர்கள் உறவினர்களாக இருந்தாலும், விருந்தினர்களாக இருந்தாலும், அவர்களையும் நமஸ்காரம் செய்ய வேண்டும். ‘‘வயதில் மூத்தவர்களையும், ஞானத்தில் மூத்தவர்களையும் நான் நமஸ்கரிக்கிறேன்” என்று பகவான் கண்ணன் கீதையில் சொல்வதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதற்குப் பிறகு வெளியே வந்து பார்க்க வேண்டியது சூரிய தரிசனம். சூரிய தரிசனம் நம்முடைய கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்தது. எந்த சூரியனால் இந்த உலகம் வாழ்கின்றதோ, உயிர்கள் வாழ்கிறதோ, அந்தச் சூரியன் இல்லாவிட்டால் நமக்கு வாழ்க்கையே கிடையாது. நான் வசிக்கின்ற உலகமும் கிடையாது. நம்முடைய உடம்புக்கு உற்சாகம் தரக்கூடிய `வைட்டமின் டி’ என்பது மருந்து மாத்திரைகளில் இல்லை.

அது இலவசமாக சூரியனுடைய கதிர்களில் கிடைக்கிறது என்பதால், ஒரு பத்து நிமிடம் சூரியனுடைய கதிர்கள் மேலே படும் வண்ணம் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றார்கள். கண்களுக்கு ஒளியைத் தருவது சூரியன். ஆகையினால் அந்த சூரியனை, ‘‘கோடி சூரிய ஸமப்பிரபோ, அவிக்னம் குருமே தேவ ஸர்வதா சர்வ கார்யேஷு’’ என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்குங்கள். ‘‘உலகங்கள் வாழ வழிகாட்டியான சூரியனே, இன்றைக்கு என்னுடைய செயல்கள் எந்தத் தடைகளும் இல்லாமல் நிறைவேறுவதற்கு நீ அருள வேண்டும்’’ என்று வேண்டிக் கொள்ளுங்கள். இதற்கு அடுத்து செய்ய வேண்டிய தரிசனங்கள் சில உண்டு.

தொகுப்பு: தேஜஸ்வி

Related posts

வாசிப்பும் வழிபாடுதான்…

இந்த வார விசேஷங்கள்

கல்வியைவிட உயர்வானது எது?