மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருடன் பேசி வருகிறோம் பாஜ தேசிய தலைமை தான் கூட்டணியை முடிவு செய்யும்: ‘அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை’ என எடப்பாடி பதிலடி

சேலம்: அதிமுக, பாஜ கூட்டணியை அக்கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜ ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். இதற்கு அக்கட்சி மூத்த தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி தொடர்கிறது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஆனால் நேற்று முன்தினம் சென்னையில் பேட்டியளித்த அண்ணாமலை, ‘அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறினாரே தவிர, கூட்டணி இறுதி செய்யப்படவில்லை.

அரசியல் கூட்டணி தண்ணீரில் எழுதப்படுவது போன்றதுதான்’ என்று கூறினார். இது, அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் பேசிய எடப்பாடி, ‘அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் அழிந்து போவார்கள்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன் மூலம் சில வாரங்கள் அமைதியான அதிமுக-பாஜ மோதல் மீண்டும் வீதிக்கு வந்துள்ளது. இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் சேலம் வந்தார். நேற்று சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். அங்கு அவருக்கு மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் ெபாய்க்கால்குதிரை, வாணவேடிக்கை மற்றும் கும்பமரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: மத்தியில் ஆளும் கட்சியாக பாரதிய ஜனதா இருக்கிறது. அக்கட்சி தேசிய கட்சி. ஜெயலலிதா இருக்கும்போதும், அவரது மறைவுக்கு பிறகும் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மத்தியில் இருக்கும் தலைவர்கள் கூட்டணியை முடிவு ெசய்வார்கள். மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல. மத்தியில் இருப்பவர்களும் கூட்டணி தொடரும் என கூறிவிட்டனர்.

எம்ஜிஆர் கட்சியை துவங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்குப் பின்பு ஜெயலலிதாவும் சோதனையை சந்தித்தார். அதேபோல் தற்போது நாங்கள் சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவோம். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரைத் தவிர யார் வேண்டுமானாலும் தாய் கழகத்திற்கு வரலாம் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். அதேபோல் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவரின் ஜனநாயக உரிமை. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  • சீர்வரிசையுடன் வந்த விஜயபாஸ்கர்
    அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று மேளதாளங்கள் முழங்க ஆடு, மாடு, கோழி, மா, பலா, வாழை, கரும்பு, இளநீர், பொம்மை, காய்கறிகள் உள்ளிட்ட 50 வகையான சீர்வரிசை பொருட்களுடன் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு