மாஸ் காட்டும் பட்டன் ரோஸ்!

ரோஜாவை மலர்களின் ராஜா என்பார்கள். சிறுவர்கள், இளைஞர்கள், தம்பதிகள் என அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் ஒரு மலர் என்றால் அது நிச்சயம் ரோஜாதான். காதலர்களின் விருப்ப மலரும் இதுதான். இப்படி ரோஜாவைப் பற்றி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ரோஜாவில் பல விதங்கள் இருக்கின்றன. இதில் பராமரிப்புக்கு எளிதாகவும், வருமானம் தருவதில் கில்லியாகவும் விளங்கும் ஒரு ரகம்தான் பட்டன் ரோஸ். சிறிய அளவில், செடியில் அழகாகப் பூத்துச் சிரிக்கும் பட்டன்ரோஸ் பார்ப்பவர்கள் அனைவரையும் நிச்சயம் கவரும். இத்தகைய பட்டன் ரோஸ் பூக்களை தனது 7 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்து தினசரி வருமானம் பார்த்து வருகிறார்கள் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மங்களம் புதூரைச் சேர்ந்த முருகன் – ரேவதி தம்பதியினர். அதுமட்டுமல்லாமல் கூடுதலாக 33 சென்ட் நிலத்தில் சாமந்தி, முல்லை, மல்லி போன்ற மலர்களையும் சாகுபடி செய்து வருகிறார்கள். ஒரு மாலைப்பொழுதில் மலர் பறித்துக்கொண்டிருந்த இந்தத் தம்பதியினரைச் சந்தித்தோம். “திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள்தான் வழக்கமாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பயிர்களில் போதிய அளவு லாபம் இல்லை என்பதால் பல விவசாயிகள் மாற்றுப்பயிர்களை நாடி வருகிறார்கள். அதுபோல் வருபவர்களுக்கு மலர் சாகுபடிதான் கை கொடுத்து தெம்பு தருகிறது. மல்லிகை, முல்லை, சாமந்தி என பல மலர் வகைகள் இந்தப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. சமீபகாலமாக பட்டன் ரோஸ் சாகுபடி பரவலாகிவருகிறது’’ என கீழ்பென்னாத்தூர் பகுதியில் பட்டன் ரோஸ் பரவிய கதையுடன் பேச ஆரம்பித்த முருகன், மேலும் தொடர்கிறார்.

“ கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள இந்த மங்களம் புதூர் கிராமம்தான் எங்களுக்கு பூர்வீகம். பல தலைமுறைகளாக நாங்கள் விவசாயம்தான் செய்கிறோம். எங்களுக்குச் சொந்தமாக 40 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில்தான் நானும் எனது மனைவி ரேவதியும் மலர் சாகுபடி செய்துவருகிறோம். அதாவது, 7 சென்ட் நிலத்தில் பட்டன் ரோஸ் பயிரிட்டு இருக்கிறோம். மீதமுள்ள 33 சென்ட் நிலத்தில் சாமந்தி, முல்லை, மல்லி போன்ற மலர்களை சாகுபடி செய்துவருகிறோம். மலர் சாகுபடியைப் பொறுத்தவரை சரியான பராமரிப்பும் முறையான கவனிப்பும் இருந்தாலே போதும். நல்ல மகசூலை எடுக்கலாம். தற்போது மலர்களில் அதிக லாபம் தருவது பட்டன் ரோஸ்தான். பட்டன் ரோஸை சாகுபடி செய்ய வேண்டும் என முடிவெடுத்தவுடனே கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதிக்கு சென்று நடவுக்கான செடிகளை வாங்கி வந்தோம். ஒரு செடி ₹12 முதல் ₹15 வரை விலை வைத்து விற்கிறார்கள். பட்டன் ரோஸ் செடிகளைப் பதியன் செய்து நடவு செய்தால்தான் நன்றாக வளரும். அதனை சாகுபடி செய்யத் தேர்ந்தெடுத்த நிலத்தை முதலில் நன்றாக 3 முறை உழவு ஓட்டினேன்.

அவ்வாறு செய்வது மூலம் மண் நன்றாக இலகுவாகிவிடும். சாகுபடிக்கு ஏற்ற நிலமாக மாறிவிடும். கடைசி உழவின்போது மாட்டு உரம் இடுவோம். பின்பு 8 அடி இடைவெளியில் ஒரு அடி அகலமும், அரை அடி உயரமும் கொண்ட நீளமான பாத்திகள் அமைப்போம். அந்தப் பாத்திகளின் நடுவில் அரையடி ஆழத்துக்கு குழி எடுத்து, இரண்டடி இடைவெளியில் பட்டன் ரோஸ் பதியன் கன்றுகளை ஊன்ற வேண்டும். கன்றுகள் நடவுசெய்து 15ல் இருந்து 20 நாட்களில் வேர்பிடித்து வளரத் தொடங்கிவிடும். அதன்பிறகு சரியாக மூன்று மாதங்களில் செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிடும்.மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப 7 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை பாசன நீரோடு ஏக்கருக்கு 200 லிட்டர் இயற்கை முறையிலான ஜீவாமிர்தக் கரைசல் (5 வகையான கலவை) கலந்து விட வேண்டும். ஒருமுறை பட்டன் ரோஜா நடவு செய்து, அதனை முறையாக பராமரித்து வந்தால் 2 முதல் 4 ஆண்டுகள் வரை பூக்கள் பறிக்கலாம்.

இதில் பராமரிப்பு மிகவும் முக்கியம். மாதம் ஒரு முறை பட்டன் ரோஸ் செடிகளின் மீது வேப்பிலைக் கரைசலை, தண்ணீரில் கலந்து தெளித்தால் செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் இந்தக் கலவை ஒரு பூச்சிவிரட்டியாகவும் செயல்படும். வேப்பிலை மணத்திற்கு எந்தப் பூச்சிகளும் வராது. செடிகளைப் பூச்சித் தாக்குதல் இல்லாமல் பராமரித்து வந்தால் ஒரு செடிக்கு குறைந்தபட்சம் 20 முதல் 50 பூக்கள் வரையில் பூக்கும். பட்டன் ரோஸ் பூக்கள் பல நிறங்களில் இருக்கின்றன. அவற்றில் பிரபலமான நிறம் என்றால், பேன்டா நிறம், வெள்ளை கலந்த மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு நிறங்கள்தான். இந்த நிறங்களில் உள்ள பூக்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பட்டன் ரோஸ் அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதனால் இதை எந்தப் பகுதியிலும் சாகுபடி செய்யலாம். இயற்கைச் சீற்றங்களையும், ஓரளவுக்கு வறட்சியையும் தாங்கக்கூடிய தன்மை கொண்டதாகவும் பட்டன் ரோஸ் இருக்கிறது.

பட்டன் ரோஸ் மலர்களை அதிகமாக தாக்கும் பூச்சிகள் அவை சாறு உறிஞ்சும் பூச்சிகளும், மாவுப்பூச்சிகளும்தான். இதில் சாம்பல் நோய், இலைக் கருகல் நோய், வேர் அழுகல் நோய் போன்ற நோய்களும் வர வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு வந்தால் கற்பூரக் கரைசல் மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம். பட்டன் ரோஸ் சாகுபடியில் ஒரு வசதி என்னவென்றால் இன்று பறிக்க முடியவில்லை என்றால் மறுநாள் பறித்துக்கொள்ளலாம். இதழ்கள் உதிராது. விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பட்டன்ரோஸ் கிலோவிற்கு ₹150க்கு குறையாமல் விலை கிடைக்கும். அதுவே, சில சமயங்களில் கிலோ ₹400ல் இருந்து ₹600க்கு விற்பனை ஆகும். எனது 7 சென்ட் நிலத்தில் 150 கன்றுகள் வைத்திருக்கிறேன். இப்போது அவை 8 மாத வயதுடைய செடிகளாக இருக்கின்றன. தினமும் சராசரியாக 6 கிலோ அளவுக்கு பூக்கள் மகசூலாக கிடைக்கிறது. அறுவடை செய்த பூக்களை திருவண்ணாமலை மலர்ச்சந்தைக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்கிறோம்.

அங்கு பெங்களூர் வியாபாரிகளும், உள்ளூரில் மாலை கட்டுபவர்களும் பட்டன் ரோஸ் பூக்களை வாங்கிச் செல்கிறார்கள். ஒரு கிலோ பூவுக்கு சராசரியாக ரூ.50 விலையாக கிடைக்கும். இதன்மூலம் தினசரி ரூ.300 வருமானம் கிடைக்கிறது. மாதத்திற்கு ரூ.9 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் பெரிய அளவுக்கு பராமரிப்பு இருக்காது. பூக்களை நாங்களே பறித்துக்கொள்கிறோம். இதனால் செலவு பெரிய அளவில் இருக்காது. அத்தனையும் லாபம்தான். வெறும் 7 சென்ட் நிலத்தில் இந்த வருமானம் கிடைக்கிறது. விசேஷ நாட்களில் கூடுதல் விலை கிடைக்கும். அதை கணக்கில் எடுக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் 33 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்துள்ள மல்லிகை, முல்லை போன்ற பூக்கள் மூலமும் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. பட்டன் ரோஸ் பூக்களை பெரிய அளவில் சாகுபடி செய்தால் கூடுதல் லாபம் பெறலாம்’’ எனக் கூறி பூக்களைப் போலவே மலர்ச்சியுடன் சிரிக்கிறார்கள் முருகனும், ரேவதியும்.
தொடர்புக்கு:
முருகன்: 97879 77045

 

Related posts

சென்னை எழும்பூர் – புவனேஸ்வர், சம்பல்பூருக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது அமலாக்கத்துறை..!!

எஸ்.பி.ஐ.யின் 4-வது காலாண்டு லாபம் ரூ.20,698 கோடியாக அதிகரிப்பு..!!