ஊடுபயிராக மலைக்க வைக்கும் மரவள்ளி!

விவசாயத்தில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடப்பதுண்டு. அதுபோல் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காண்பித்திருக்கிறார் குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மாத்தார் பகுதியைச் சேர்ந்த மிக்கேல் என்ற விவசாயி. செம்மரம், தேக்கு போன்ற மரப்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள 50 சென்ட் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, அதில் ஊடுபயிராக மரவள்ளிகிழங்குச் செடிகளைப் பயிரிட்ட இந்த விவசாயி அபரிமிதமான மகசூலை எடுத்து அசத்தி வருகிறார். இந்தத் தோட்டத்தில் இவர் பயிரிட்டு இருப்பது வெறும் 125 செடிதான். ஆனால் ஆயிரம் செடிகளைப் பயிரிட்டால் எவ்வளவு மகசூல் கிடைக்குமோ, அதே அளவில் மகசூலை எடுத்து வருகிறார். அதுவும் 100 சதவீத இயற்கை முறையில் இந்தச் சாதனையைச் செய்து வருகிறார். ஒரு மாலைப்பொழுதில் மரவள்ளித் தோட்டத்தில் மிக்கேலைச் சந்தித்தோம்.

“எனக்குச் சொந்தமான இந்தப் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் தென்னை, வாழை போன்ற பயிர்களையும், மரவள்ளி, காச்சில்கிழங்கு, சிறுகிழங்கு, முக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகளையும் சாகுபடி செய்கிறேன். கூடுதலாக மரப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள இந்த 50 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மரவள்ளி பயிரிடுகிறேன்’’ என சுருக்கமாக தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்ட மிக்கேல் தொடர்ந்து பேசினார். “கடந்த 23 ஆண்டுகளாக இயற்கை முறையில்தான் விவசாயம் செய்து வருகிறேன். எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும் அதில் கூடுதல் மகசூல் எடுப்பேன். மண்புழு உரம், மீன் அமிலம், பழக்காடி ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை முறையில் செய்வதால் தொடர்ந்து அதிக மகசூலைப் பெறமுடிகிறது. கடந்த ஆண்டில் எனது நிலத்தில் பயிரிடப்பட்ட உள்ளித்தோலன் என்ற ரக மரவள்ளியில் ஒரு செடியில் 43 கிலோ மகசூல் எடுத்தேன். இதை வேளாண் துறையினர் வெகுவாக பாராட்டினர். இப்போது இந்த 50 சென்ட் நிலத்திலும் அதே வகை மரவள்ளியைப் பயிரிட்டு இருக்கிறேன். மரவள்ளிக் கிழங்கில் உள்ளித்தோலன், நூறுமுட்டன், கரியலபொரியன், பிளாக் வெள்ளை உள்பட பல ரகங்கள் இருக்கின்றன. இதில் உள்ளித்தோலன் நல்ல ருசியாகவும், மகசூல் அதிகம் தருவதாகவும் இருக்கும். இதனால் இதை நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.

எனது சொந்த நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டதில் இருந்து தரமான குச்சிகளைச் சேகரித்து வைத்து, விதைக்குச்சிகளைத் தயார் செய்தேன். அவற்றை மரப்பயிர்களுக்கு இடையே நடவு செய்திருக்கிறேன். ஒரு செடிக்கும், மற்றொரு செடிக்கும் 4 அடி அல்லது 5 அடி இடைவெளி இருப்பது போல பார்த்துக்கொள்வேன். அந்த இடைவெளியில் மண்வெட்டியால் மண்ணை வெட்டிவிடுவோம். வெட்டிய இடத்தில் மண் இலகுவாக மாறிவிடும். அதே சமயம் வெட்டப்பட்ட மண் குவியல் போல் இருக்கும். அதில்தான் விதைக்குச்சிகளை நடுவோம். இதை நாங்கள் குவியல் முறை என்போம். சாகுபடி செய்வதற்கு முன்பு மாட்டுச் சாணம், குப்பை, கோழிஉரம் ஆகியவற்றை அடிஉரமாகப் போடுவோம். எங்கள் பகுதியில் மழை மிதமாக பெய்துகொண்டிருக்கும். அதே எங்களுக்கு போதுமானதாக இருக்கும். மரவள்ளியைப் பயிரிட மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்கள் மிகவும் ஏற்ற தருணமாக இருக்கும். நாங்கள் வைகாசி மாதத் துவக்கத்தில் சாகுபடி செய்தோம். மண்ணில் மூன்றரை அடி ஆழத்தில் விதைக்குச்சிகளை ஊன்றுவோம். அதில் பாதிக் குச்சி வெளியில் தெரிவது போல் ஊன்றுவோம்.

நடவு செய்த 15 நாட்களில் இருந்து 1 மாதத்தில், மரவள்ளிக்கிழங்குச் செடியை சுற்றி மண்ணைக் கிளறிவிடவேண்டும். பின்பு 2வது முறையாக 3 மாதத்திலும், 3வது முறையாக 6வது மாதமும் மண்ணைக் கிளறி கொடுக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்குப் பயிர்களுக்கு மண் கிளறிவிடுவதுதான் முக்கியம். அவ்வாறு செய்யும்போது மண்ணின் இறுக்கம் குறைந்து மரவள்ளிக் கிழங்குகள் அதிக எடையுடன் கிடைக்கும்.3வது மாதத்தில் திரவ வடிவில் உள்ள பழக்காடியை உரமாகக் கொடுப்போம். ஒரு லிட்டர் பழக்காடியில் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து மரவள்ளிக் கிழங்குப் பயிர்களைச் சுற்றி பாசனமான விடுவோம். பின்பு 4வது மாதம் மீன் அமிலத்தை உரமாகக் கொடுத்தேன். ஒரு லிட்டர் மீன் அமிலத்தில் 50 லிட்டர் தண்ணீர் கலந்து மரவள்ளிக் கிழங்குப் பயிரைச் சுற்றிவிட்டேன். இதுபோல் 5வது மாதம் பழக்காடி, 6வது மாதம் மீன் அமிலம் என கொடுத்தேன்.

தற்போது மரவள்ளிக் கிழங்குப் பயிர்களை அறுவடை செய்து வருகிறேன். சரியான பராமரிப்பு, சரியான உரம் அளித்ததன் காரணமாக 125 செடிகளில் இருந்து சுமார் 3 டன் கிழங்குக்கு மேல் மகசூல் கிடைத்து இருக்கிறது. சராசரியாக ஒரு செடியில் இருந்து 25 கிலோ கிழங்கு மகசூலாக கிடைக்கிறது. ஒரு செடியில் அதிகபட்சமாக 35 கிலோ மரவள்ளிக் கிழங்கு கிடைத்திருக்கிறது. இயற்கை முறையில் பயிரிடப்படும் இந்த மரவள்ளியின் சுவை தூக்கலாக இருக்கும். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே நேரடியாக வயலுக்கு வந்து கிழங்குகளை வாங்கிச் செல்கிறார்கள். நான் தினமும் 2 செடிகளை மட்டுமே அறுவடை செய்வேன். அதிலேயே சுமார் 50 கிலோவுக்கு மேல் கிழங்கு கிடைக்கும். அறுவடை செய்யப்பட்ட கிழங்குகளை ஒரு கிலோ ₹35 என விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ₹1 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. இதில் செலவு போக ₹65 ஆயிரம் சுளையாக லாபம் கிடைக்கிறது. 50 சென்ட் நிலத்தில் 1000 மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்து அறுவடை செய்யும்போது இந்த வருவாய் கிடைக்குமா? என்பதே சந்தேகம்தான்” என புருவம் உயர்த்திக் கூறி முடித்தார் மிக்கேல்.

வெள்ளை ஈ தாக்குதல்

மரவள்ளிக் கிழங்குப் பயிரில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனை விரட்டுவதற்கு மீன் அமிலத்தைப் பயன்படுத்தினேன். வெள்ளை ஈ தாக்குதல் தென்பட்டவுடன், 50 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமிலத்தைக் கலந்து ஸ்பிரேயர் மூலம் மரவள்ளிக் கிழங்குப் பயிரின் கீழ்ப்பகுதியில் இருந்து மேல்நோக்கி அடிக்க வேண்டும். மீன் அமிலத்தை ஸ்பிரேயர் மூலம் தெளித்த பிறகு வெள்ளை ஈ தாக்குதல் இல்லாமல் இருந்தது. வெள்ளை ஈ தாக்குதல் இருந்தால் போதிய பச்சையம் கிடைக்காமல் பயிர்களில் மகசூல் குறையும் என மிக்கேல் தெரிவிக்கிறார்.

மீன் அமிலம் தயாரிப்பு

மீன் அமிலம் பயிர்களில் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, பயிர்களுக்குத் தேவையான சத்துகளையும் வழங்கி வருகிறது. நான் 20 லிட்டர் பக்கெட்டில் 8 கிலோ மீன், 8 கிலோ வெல்லம் ஆகியவற்றைக் கலந்து, அந்த பக்கெட்டை காற்று போகாத வகையில் மூடிவிடுவேன். பின்னர் மறுநாள் பக்கெட் மூடியை திறந்து கடிகாரம் முள் சுற்றுவது போல் குச்சியைக் கொண்டு கலக்கிவிட்டு மீண்டும் பக்கெட்டை மூடிவிடவேண்டும். தினமும் குச்சியைக் கொண்டு இதுபோல் கலக்க வேண்டும். அதாவது 40 நாட்கள் வரை கலக்க வேண்டும். 40 நாட்களுக்குப் பிறகு தரமான மீன் அமிலம் கிடைக்கும்.

பழக்காடி தயாரிப்பு

பழக்காடியைத் தயாரிக்க எந்த வகையைச் சேர்ந்த பழத்தையும் எடுத்துக்கொள்ளலாம். 20 லிட்டர் பக்கெட்டில் முக்கால் பகுதி பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 5 லிட்டர் தயிர் சேர்த்து பிசைந்து பக்கெட்டை மூடிவிட வேண்டும். 3 நாட்கள் கடந்த பிறகு கலவையைக் கலக்கிவிட்டு மீண்டும் மூடிவிட வேண்டும். கலவை கட்டியாக இருந்தால், 2 லிட்டர் அளவிற்கு பழைய கஞ்சியை ஊற்றி கலக்க வேண்டும். இவ்வாறு செய்து வர 15வது நாளில் பழக்காடி தயாராகிவிடும்.
தொடர்புக்கு:
மிக்கேல்- 93631 10857

Related posts

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு: மாணவர்கள் செல்போனுக்கு உடனடி தகவல்