பிரியாணி லேட்டானதால மாங்கனி கட்சி மாவட்ட செயலாளரின் பதவி பறிபோன கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கட்சிக் கொடியேந்திய பிஞ்சுகள் பிரசார கூட்டத்தில் நின்றதைக்கூட தேர்தல் படைகள் கண்டுக்கொள்ளவில்லையாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் பிரதான இரு தேசிய கட்சிகள் இடையே தேர்தல் களத்தில் கடும் போட்டி உருவாக்கியிருக்கு… வேட்பாளரை அறிவிப்பதில் திணறி வந்த ஒன்றிய ஆட்சி தரப்பு கட்சி, தற்போது தேர்தல் பிரசாரத்தில் தடாலடி காட்டி வருகிறது. தொகுதி சனி மூலையில் இருந்து சிவாயமானவர் பிரசாரத்தை தொடங்கிய முதல்நாளிலே அங்கு வந்த புல்லட்சாமி நடுரோட்டிலே நிறுத்தியிருந்த வாகனத்தில் ஏறி தாமரைக்கு ஆதரவு கேட்டு இசிஆரில் வாகன நெரிசலை ஏற்படுத்தி திக்குமுக்காட செய்ததுதான் பிரசாரத்தின் ஹைலைட்.

அதோட இல்லாம கூட்டத்தை காட்ட பல்வேறு பகுதியில் இருந்து தொண்டர்கள் பெயரில் காசு கொடுத்து கூட்டத்தை அழைச்சுட்டு வந்திருக்காங்க… அப்போ ஆங்காங்கே சில இடங்களில் பிஞ்சுகளும் கையில கட்சிக் கொடிகளுடன் நின்றிருந்தாங்களாம்.. துண்டு பிரசுரங்கள் விநியோகம், போஸ்டர் ஒட்டுதல் என எந்தவித தேர்தல் பிரசாரங்களிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாதுன்னு தேர்தல் துறையின் விதியை காற்றில் பறக்க விட்டுவிட்டு, கைகட்டி வேடிக்கை பார்த்திருக்காங்க பறக்கும் படை மற்றும் காவல்துறையும். இதுபற்றி தான் இப்ப ஊர் முழுக்க பரபரப்பா பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேட்பாளர் பெயர் கூட தெரியாமல் மாஜி அமைச்சர் ஒருத்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர நாடாளுமன்ற தொகுதி இலைக்கட்சி வேட்பாளரா கடைசியில் சங்கர் என்று முடியக்கூடியவர் போட்டியிடுகிறார். இவரு மாற்றுக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இலைக்கட்சியில் ஐக்கியமானாராம்.. மாற்றுக்கட்சியில் இருந்து விலகி வந்தவருக்கு தேர்தலில் நிற்க உடனே சீட் வாங்கி கொடுத்த மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ மீது முக்கிய நிர்வாகிகள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளார்களாம்..

வேட்பாளர் பிரசாரத்துக்கு கூட முக்கிய நிர்வாகிகள் வராததால அவர்கள் மீது மணியானவர் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம்.. இதனால் மணியானவரே நேரிடையாக களத்தில் இறங்கி வேலை பார்க்க தொடங்கிட்டாராம்.. நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்த மணியானவர், வேட்பாளர் பெயரை தவறாக கூறி ஓட்டு கேட்டுட்டாராம்.. இதை கேட்டு, அப்போது அங்கு கூடிநின்ற இலைக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்திட்டாங்களாம்.. தன்னால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வேட்பாளர் பெயரை கூட மணியானவருக்கு சொல்ல தெரியல..

இப்படி இருந்தால் கட்சியினரே வேட்பாளர் பெயரை மறந்து விடுவாங்க.. இவர் கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் எப்படி தான் அமைச்சரா செயல்பட்டாரோ என தலையில் அடித்துக்கொண்டார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பிரியாணி லேட்டானதால மாங்கனி கட்சி மாவட்ட செயலாளரின் பதவி பறிபோச்சாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்ட தொகுதியில் தாமரை கட்சி கூட்டணியில் மாம்பழ கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்திக்கிட்டு வர்றாங்க..

நேற்று முன்தினம் காலையில ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாம்பழ வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்திருக்கு.. இந்த கூட்டத்திற்கு வருவோருக்கு சாப்பாடு ஏற்பாடு செய்யணும்னு கூறி மாம்பழ கட்சி மாவட்ட முக்கிய நிர்வாகி கேட்டாராம்.. சரி… சிக்கன் பிரியாணியே போட்டுருவோம்னு வேட்பாளர் கூறியிருக்கிறாரு.. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் சிக்கன் பிரியாணி வந்து சேரவில்லை. நீண்ட நேரம் ஆனதால கூட்டணி கட்சியினரும், நிர்வாகிகளும் கலைந்து போயிட்டாங்களாம்.. இதனால கோபமடைந்த மாவட்ட நிர்வாகி அனைவர் முன்னிலையிலும் வேட்பாளரிடம் கோபத்தை காட்டினாராம்..

பலர் முன்னிலையில் தன்னை அசிங்கப்படுத்துவதாகக் கூறிய வேட்பாளர், மாவட்ட நிர்வாகியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறாரு.. ‘எனக்கு தோட்டத்தில் செல்வாக்கு உள்ளது. என்ன செய்கிறேன் பார்’ எனக்கூறியவர், விஷயத்தை உடனடியாக தலைமைக்கு தெரிவிச்சிட்டாராம்.. அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிரியாணியால், மாவட்ட நிர்வாகியின் பதவியே பறிபோனதாம்.. இச்சம்பவம் பூட்டு மாவட்ட மாம்பழ கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மூழ்குற கப்பல்ல இடம்பிடிச்சிட்டதா கூறி மாம்பழக்கட்சி நிர்வாகிங்க, தொண்டர்கள் குமுறுகிறாங்களாமே தெரியுமா?’’ என கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா. ‘‘தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக, மாம்பழ கட்சியின் தலைவரு, தாமரை கட்சியோடு திடீரென கூட்டணி வைப்பதா அறிவிச்சது எல்லோருக்கும் தெரியும்.. அது இப்போ தேர்தல் களத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்மறை வேலையை செய்ய தொடங்கிடுச்சாம்.. மாங்கனி தொகுதி மாம்பழ வேட்பாளர் அறிமுக கூட்டங்கள், சட்டமன்ற தொகுதி வாரியாகவும், கூட்டணி கட்சி வாரியாகவும் நடந்துட்டு இருக்கு..

இந்த கூட்டத்திற்கு வரும் மாம்பழ கட்சிக்காரங்க, ‘நம்ம அய்யா… இப்படி பண்ணிட்டாரேன்னு… ஒரே புலம்பலா இருக்காம்.. இலை கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திச்சா கரை சேரலாம்னு இருந்தா, இப்படி மூழ்குற கப்பலில் கடைசி நேரத்தில இடம்பிடித்து, கணக்கிற்கு ஆளை வேட்பாளரா நிறுத்தி வைச்சிருக்காரே… ஊருக்குள்ள ஒருத்தன்கிட்ட ஓட்டு கேட்க போக முடியல.. இன்னும் 20 நாட்கள எப்படி சமாளிக்கப் போறோமோனு முக்கிய நிர்வாகிகளே புலம்பிக்கிட்டு இருக்காங்களாம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் மோதல்: நெருக்கடியில் ருதுராஜ் & கோ

இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா

சில்லி பாயின்ட்…